22.12.16

கிரிஜா வைத்தியநாதன் யார்???
வருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிரிஜா வைத்தியநாதன்?

01.7.1959ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் கிரிஜா வைத்தியநாதன், நலவாழ்வு பொருளாதாரம் தொடர்பான ஆய்வு படிப்பை மேற்கொண்டு ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வைத்தியநாதன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றவர்.

மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்து பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார்.
சமூக நல்வாழ்வு துறையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்,

இவருடைய பெயர் கடந்த முறையே தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது, கிடைக்காத பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்போடு நிர்வாக சீர்த்திருத்தத் துறையையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நடிகர் எஸ்.வி.சேகரின் உடன் பிறந்த சகோதரரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

21.12.16

சாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:இன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல்  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தலைமைச் செயலாளர் என்றால் யார் ? அவர் பணி என்ன? அரசியல்வாதிகள், அரசுத்துறையினருக்கு மட்டுமே பரிச்சயப்பட்ட இந்த பதவியைப் பற்றி, சாமானிய மக்களுக்கும் விளக்கும் விதமான ஒரு சிறிய செய்திக்குறிப்பு இதோ:

தமிழக அரசின் தலைமைச் செயலர்/தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' (IAS) அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பாளர்.

இவர் தமிழக அரசுத்துறைகளில் நேரடியாக அத்துறையின் அமைச்சரின் கீழ் செயல்படுவார். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு பெற்றுப் பின் சார் ஆட்சியாளர்களாகவோ, கூடுதல் மாவட்ட ஆட்சியாளர்களாகவோ அல்லது அதற்கு இணையான பணிகளிலோ நன்கு அனுபவம் பெற்ற பின் மாவட்ட ஆட்சியாளர்களாக அல்லது அதற்கு இணையான பணிகளில் நன்கு அனுபவம் பெற்றவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கூடுதல் செயலாளர்கள் அல்லது இணைச் செயலாளர்கள் இருப்பர். இவர்களும் இந்திய ஆட்சியியல் மற்றும் நிருவாகவியலில் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக துணைச் செயலர்கள் இருப்பர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் தேர்வு பெற்ற பின் சில பயிற்சிகளுக்குப் பின்னர் பணியமர்த்தப்படுவர்.

தற்போதைய தலைமைச் செயலாளர் : திரு.ராம்மோகன் ராவ் IAS, ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, கடந்த ஜுன்-8ம் தேதியன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

26.9.16

ஆண்டவன் கட்டளை விமர்சனம்       ஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி, யோகி பாபு, மற்றும் சிவஞானம் அரவிந்தன் என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "ஆண்டவன் கட்டளை".

         சமூகத்தில் வாழும் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞனுக்கு இருக்கும் பொறுப்புகளும் ஆசைகளும் நிறைந்த மனநிலையையும், அவர் வாழ்க்கையில் படும் துன்பம் மற்றும் இன்பங்களை மிகவும் எதார்த்தமாகவும்  நகைச்சுவையாக பரிமாரியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர். போலி ஆவணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் தான் இத்திரைப்படத்தின் கதை.

          நாம் அறியாமல் செய்கின்ற சிறிய தவறு, பின்னர் அதுவே வாழ்வில்  பிரச்சனையாக வந்து கஷ்டத்தை தரும்! இதுதான் படத்தின் ஒன் லைன்!

        மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி. தான் வாங்கிய கடனை அடைப்பதர்க்காக வெளிநாட்டுக்கு சென்று பணம் சேர்க்கும் வழக்கமான ஆசையில் சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு ஏஜென்டை அனுகி, அவர்  மூலம் லண்டன் விசாவிற்க்கு முயற்சி செய்கிறார். ஆனால் தனக்கு திருமணம் ஆனது போன்று விசா அப்ளிகேஷனில் காட்டினால்தான் விசா கிடைக்கும் என்று ஏஜென்ட் சொல்ல, அதற்கு கார்மேக குழலி என்று தனது மனதில் தோன்றிய பெயரை குடுத்துவிடுகிறார்.

    இவருடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் வருகிறார். அதிர்ஷ்டவசமாக யோகி பாபுவுக்கு  விசா கிடைத்து விட விஜய் சேதுபதிக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் சென்னையிலேயே தங்கி விசா கிடைக்கும் வரை எதாவது ஒரு வேலைபார்ப்போம் என்று முடிவு செய்கிறார். அப்போதுதான் நாசர் நடத்தும் நாடகக்கூடத்தில் கணக்காளராக வேலை கிடைக்கிறது. விஜய் சேதுபதி ஆர்வத்துடனும் ஈடுபாடுடனும் வேலை செய்வதைப்பார்த்து நாசருக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

        நன்றாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடிரென ஒரு திருப்பம் வருகிறது.  நாசரின் நாடகக்கூடம்  முலம் லண்டனுக்கு செல்ல வாய்ப்பு ஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி தனது  பாஸ்ப்போர்ட்டில் இருக்கின்ற  கார்மேக குழலி என்ற பெயரை மாற்றவேண்டும் என்று முடிவுசெய்கிறார்.

      இதற்கு என்ன செய்யவேண்டும் என்று வக்கீலிடம் போகும் விஜய் சேதுபதி, 'அதற்கு முதலில் டைவர்ஸ் வாங்கணும், அதே பெயரில் இருக்கற எவரோ ஒருவரின் ஐடி வேணும்' என்கிறார்கள். டிவி சேனல் ஒன்றில்  செய்தியாளராக பணிபுரியும் ரித்திகா சிங் பெயரும் கார்மேக குழலி என்று அறிந்து அவரிடம் உதவி கேட்கிறார்கள். இதற்கு அவர் ஒப்புக்கொண்டாரா, பாஸ்போர்ட் என்ன ஆகிறது, லண்டன் போன யோகி பாபுக்கு என்ன ஆகிறது?? நாசர் தனது குழுவினருடன் லண்டன் செல்கிறாரா? என்பதே மீதிக்கதை.

       அருள்செழியனின் கதை  கண்முன் நடக்கிற தவறான வழிகளை நாமும் தேர்ந்தெடுத்தால்  பிரச்சனைகளை மட்டும் சந்திக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். திரைக்கதை மெல்லமாக சென்றாலும், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, தெளிவான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

           விஜய் சேதுபதி வழக்கம் போல தனது பாணியில் நடிப்பை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ரிப்போர்ட்டராக ரித்திகா சிங் துணிச்சலும் தைரியமும் நிறைத்த பெண்ணாக பிரதிபலிக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை பாங்குடன் இருக்கிறது. இலங்கைத் தமிழராக வரும் சிவஞானம் அரவிந்தின்  நடிப்பும் மனதில் நிற்கிறது. நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி ஆகியோருக்கு படத்தில் சொல்லுமளவிற்கு காட்சிகள் இல்லை.

     கே இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை திரைப்படத்தின் பலம். திரைக்கதை, வசனங்கள், கதைக்களம், கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்கள் என்று மொத்தத்தில் "ஆண்டவன் கட்டளை" ஒரு நிறைவான திரைப்படம்.

25.9.16

தொடரி விமர்சனம்


     சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன், ராதா ரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி.உதயகுமார், ஹரிஷ் உத்தமன், ஏ.வெங்கடேஷ் மற்றும் சின்னி ஜெயந்த் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "தொடரி".

           டெல்லியில் இருந்து சென்னை வருகிற ரயிலில், பேன்ட்ரியில் வேலை செய்பவர் பூச்சியப்பன் (தனுஷ்). அவருடன் வேலைபார்ப்பவர்கள் வைரம் (கருணாகரன்) மற்றும் பேன்ட்ரி மேனேஜர் தம்பி ராமையா. அதே ரயிலில் பயணம் செய்யும் நடிகை ஸ்ரீஷாவை தம்பி ராமையா ரூட்விட, தனுஷிடம் உதவி கேட்கிறார். தனுஷ் நடிகையுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் அவரை பார்க்க செல்லும் பொழுது, ஸ்ரீஷாவின் டச்-அப் சரோஜாவை (கீர்த்தி சுரேஷ்) பார்த்தஉடன்  காதலில் விழுகிறார். சினிமாவில் பாட்டு பாடவேண்டும் என்று ஆசை கொண்ட கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர் ஒருவரை தெரியும், அவரை வைத்து வாய்ப்பு வாங்கித்தருகிறேன் என்று பொய்ச்சொல்லி கீர்த்தி சுரேஷிடம் பழகுகிறார் தனுஷ்.

          அதே ரயிலில் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் (ராதாரவி), அவரது பி.ஏ  மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பயணம் செய்கிறார். ராதாராவின்  பாதுகாப்பு அதிகாரியில் ஒருவரான ஹரிஷ் உத்தமன் தனுஷை பார்த்தாலே பிடிக்கவில்லை என்று தனுஷிடம் சண்டையிடுகிறார். தனுஷும் அவரிடம் வம்பு செய்ய ஒருகட்டத்தில் தனுஷயும், கீர்த்தி சுரேஷையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.

        இதற்கிடையே தண்டவாளத்தில் இருக்கும் மாடு மீது ரயில் மோத, எல்.பி.(லோகோ பைலட்) ஆர்.வி.உதயகுமாருக்கும், ஏ.எல்.பி.(அசிஸ்டெண்ட் லோகோ பைலட்) போஸ் வெங்கட்டுக்கும் சண்டை வருகிறது. அவர் இருந்தால் ரயிலை எடுக்கமாட்டேன் என்று ஆர்.வி.உதயகுமார் கூறுகிறார். இதனால் ட்ரெயின் காட் இருக்கிற பெட்டிக்கு செல்லும் போஸ் வெங்கட், அங்கு அவரிடமும் சண்டை இடுகிறார். ஒருகட்டத்தில் ரயிலில் இருந்து இருவரும் வெளியே விழுகிறார்கள்.இதை அரியாமல் ஆர்.வி.உதயகுமார் ரயிலை எடுத்துவிடுகிறார்.

       எதிர்பாராமல் ஆர்.வி.உதயகுமார் மயங்கி விழுகிறார். அதன் பிறகு ரயில் கட்டுப்பாட்டை இழந்து செல்ல, ரயிலுக்கு என்ன ஆனது? ரயிலில் இருந்த பயணிகள் நிலை என்ன? தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார்கள்? என்பதே மீதி கதை!

    கதை திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்புதான் ஆரம்பம் ஆகுகிறது. முதல் பாதியில் காதல், காமெடி மட்டும் வைத்து  இழுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். 140 கிமீ மேல் வேகமாய் ஓடுகிற ரயிலின் அருகில் டிவி சேனலின் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் ஓடுகிறது. ஒருகட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்மால் கனிக்க முடிகிறது. க்ரீன் மேட்-டை வைத்து திரைப்படத்தை முடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். திரைக்கதையின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் பிரபு சாலமன்.

   டி.இமானின் இசை சுமார் ரகம் தான். வெற்றிவேலின் ஒளிப்பதிவு பலம். மொத்ததில் "தொடரி" - திருப்தி இல்லாத பயணம்!