23.2.11

பிரபாகரனின் தாயார் மறைவுக்கு தமிழ் நாடு இயக்குனர் சங்கம் இரங்கல்!!


புதிய அறிக்கை !!
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி   தமிழ் நாடு இயக்குனர் சங்கத்தின் பெயரால் ஒரு அறிக்கை வந்தது !.. அனைத்து ஊடகங்களுக்கும் வந்த அறிக்கை அவர்களுடைய லெட்டர் பேடில் இல்லாமல் வெறும் காகிதத்தில் கையெழுத்து கூட இல்லாமல் மொட்டைக் கடிதம் போல் இருந்ததை தராசு  குறிப்பிட்டிருந்தது. இதை அடுத்து நமது அலுவலக (e mail)  மெயில் முகவரிக்கு பாரதி ராஜா, செல்வமணி ஆகியோர் கையெழுத்திட்ட இரங்கல் கடிதம் வந்திருப்பதால் முந்தைய செய்தி நீக்கப் பட்டிருக்கிறது! நமக்கு வந்த அறிக்கைகளை அப்படியே வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்!!முந்தைய அறிக்கை!! 

எந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான  நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:-


சிகிச்சைக்காக வந்து நின்றாய்
கதவடைத்துக் கொண்டோம்
பால்கொடுத்த முலையறுத்த
பாவிகளாய் நின்றோம்....

பாகிஸ்தான் குழந்தை வந்தால்
மருந்தளித்து மகிழ்ந்தது
நெல்லை பாரதி
(096770 88177)
 
பெற்ற தாய்க்கு குணமளிக்க
தாயகமே பயந்தது....

தமிழருக்கே உயிர் கொடுத்தான்
நீ சுமந்த பிள்ளை -வீரத்
தாய்ப்பிணியைத் துடைத்துவிட
தமிழன் எவனும் இல்லை!!


ஆண்டவனும் ஆள்பவனும்
உன் குரலுக் கிரங்கல
நல்லவேளை உனது பாதம்
துரோக மண்ணில் இறங்கல....

நோயும் உன்னைக் கொல்லவில்லை -எந்த
நாயும் உன்னைக் கொல்லவில்லை....
மானங்கெட்ட தமிழர்கள்தான்
மரணத்தைப் பரிசளித்தோம்!!
பார்வதித்தாயே- இந்தப் பாவிகளை
ஆசீர்வதிப்பாயே!!!
                 

17.2.11

ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்


அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும்!! ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்! இந்தச் செய்தியிலும் அப்படியே!! இந்த கூத்துகள் எல்லாமே தொடர் கதைதான் என்றாலும் ஒரு ஆரம்பம் வேண்டாமா? இதோ ஒரு ஆரம்பம்!! தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவரும், அகில இந்திய செயலாளருமான இல.கணேசன் 66-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் அவரது வீட்டு அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த போது முதல் அமைச்சர் கருணாநிதி திடீரென்று  இல.கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
 
முதல்வர் வரப் போகிற விஷயத்தை காவல் துறையினர் சில நிமிடங்களுக்கு முன்பாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால் இல. கணேசன் குடும்பத்தினர் கருணாநிதியை வரவேற்க தயாராகவே இருந்தனர்!! முதல்வருடன் அமைச்சர் பொன்முடியும் சென்றார். சுமார் 25 நிமிடங்கள் இல.கணேசனுடன் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். தலை நேரில் வந்த பிறகு துணை சும்மா இருக்குமா? .ஸ்டாலின் சார்பில் அவருடைய தனிச் செயலாளர் வாழ்த்து செய்தி மற்றும் பூங்கொத்து கொடுத்தார். மேயர் மா.சுப்பிரமணியனும் நேரில் ஆஜராகி வாழ்த்து கூறினார்.
 
 "கருணாநிதி நேரில் வந்து வாழத்தியதில் அரசியல் முக்கியத்துவம் ஏதேனும் உண்டா?" என்று இல.கணேசனிடம் கேட்டோம்!! அவர் நெகிழ்ச்சியாக :-
 "முதல்வர் பெரியார் பாசறையில் வளர்ந்தவர் என்பதை உலகறியும். நான் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவன் என்பதை கலைஞர் அறிவார். கொள்கை ரீதியாக வேறுபட்டாலும் மற்றவர்களோடு நட்பு பாராட்ட முடியும் என்ற கருத்துக்கு எடுத்துக் காட்டாக கலைஞர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அவர் என் வீடு தேடி வந்து வாழ்த்து சொன்னது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது."  என்று சொன்னார்!!
"65-வது பிறந்த நாளின் போதும் கலைஞர் வந்து உங்களை வாழ்த்தினாரா" என்ற நம் கேள்வியை அவர் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரிய வில்லை!! அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும்!! ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்!!!
    --சாணக்யன்