29.3.11

அதிகார துஷ் பிரயோகம்.. அத்துமீறல் ....விளையாடும் பணம் !


மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஒரு நாள் பிரச்சாரத்தில் பணத்தை தண்ணீர்   போல 40  லட்சம் ரூபாய் இறைத்ததாகவும் தொடந்து இறைத்து வருவதாகவும் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை  துரைசாமி தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவத்துள்ளார். கடிதத்தின் நகல் இங்கே..    
 .     

28.3.11

தேர்தல் சர்வே_மாதிரி வாக்குச் சீட்டு

உங்கள் சட்டமன்றத்  தொகுதியின் தேர்தல் சர்வே நடந்து கொண்டிருக்கிறது..நீங்களும் கலந்து கொண்டு வாக்குகளை அளிக்கலாம்..மாதிரி வாக்குச் சீட்டுக்கு இங்கே டௌன் லோடு செய்து கொள்க ... உங்கள் வாக்கைப் பதிந்த பிறகு அவற்றை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி...
தராசு,
7 அனெக்ஸ், ராம்ஸ்,
78 ராமேஸ்வரம்   தெரு,   
தி.நகர், சென்னை-17
mail: editor@tharasu.com
27.3.11

விழிப்புணர்வுப் பேரணி2

வாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேரணி இது (part2) 

விழிப்புணர்வுப் பேரணி 1

வாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேரணி இது. 

தங்கபாலு கொடும்பாவி

தங்கபாலு கொடும்பாவி எரிப்பது தமிழ்நாடு முழுதும் நடக்கும்போது  ஈரோட்டிலும் நடக்காதா என்ன ? 

26.3.11

தேர்தல் குறும்படம்

அனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.

முத்து உதிர்த்த முத்துக்கள் ??

சென்னை சூப்பர் கிங் அண்ணாச்சி சிமண்ட் விலை என்னாச்சி?

 
தேர்தல் வந்தால் பொதுவாக சிமெண்ட் விலை குறையும்  என்பார்கள்..இங்கே தேர்தலின் போதுதான் விலையை கூட்டுகிறார்கள்...
 

சைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்

சென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த படம்.

23.3.11

NKKP ராஜா வேட்புமனு

முன்னாள் அமைச்சரும் சர்ச்சைகளின் நாயகருமான NKKP ராஜா ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.. 

22.3.11

குற்ற வாளிகளைக் காப்பாற்ற போலீஸ் முயற்சி!
சங்கரராமன் கொலை வழக்கில் கோல்மால்!! 
      சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு!! 

ஜெயேந்திரர்


காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கர ராமன் . கடந்த 2004ம் ஆண்டு, செப்டம்பர் 3ம் தேதி இவர் கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.  இவ்வழக்கில், காஞ்சி ஜெயேந்திரர், விஜயேந்திரர்,  கூலிப் படைத் தலைவன் அப்பு, தமாஷ் ரவுடி ரவி சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டனர்.  ரவி சுப்ரமணியத்தை அவனுடைய கள்ளக் காதலியிடம் போலீஸ் விசாரணை செய்து அவள் மூலம் வலை விரித்து கைது செய்தனர். போலீஸ் விசாரிக்க  ஆரம்பித்ததும் கழிய ஆரம்பித்த தமாஷ் ரவுடி உண்மைகளை கக்கி, அப்ரூவராக மாறினான். இவன் கைதானதும்தான் வழக்கில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பின்னர் ஜெயேந்திரர்,  விஜயேந்திரர்,  அப்பு உட்பட பலரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவ்வழக்கில் தலைமைப்  புலனாய்வு அதிகாரியாக இருந்து விசாரித்தவர் சக்திவேலு!!   இப்போது இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. தலைமைப்  புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று விட்ட சக்திவேலு, சென்னை  ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த  மனுவின்  விபரம் : 
சங்கர ராமன்
சங்கர ராமன் கொலை வழக்கில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்தேன். அவற்றை  பதிவும் செய்தேன். ஆயிரக்கணக்கான ஆவணங்களை சேகரித்தேன். 24 பேரை கைது செய்தோம். 40 சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றோம். சாட்சிகள் தானாக முன் வந்து வாக்குமூலம் அளித்தனர். இவர்களில் ரவிசுப்ரமணியம், அப்ரூவராக மாறினார். ஆனால் இப்போது சாட்சிகள் பலர், பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். அப்ரூவரான ரவிசுப்ரமணியமும், பிறழ் சாட்சியாக மாறியுள்ளார்.இவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறினாலும், மாஜிஸ்திரேட் பதிவு செய்த வாக்குமூலம், அரசு தரப்புக்கு உதவியாக இருக்கும். எனவே, அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்பில்லை. கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். எனது உதவியை அரசு தரப்பு பெறவில்லை. 
விஜயேந்திரர், தலைமைப்  புலனாய்வு அதிகாரி சக்திவேலு 


ரவுடி ரவி சுப்பிரமணியம்

அப்ரூவர் ஒருவர் பிறழ் சாட்சியாக மாறினால், குற்றவியல் நடைமுறை சட்டப்படி பொய் சாட்சியம் அளித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்ரூவரான ரவிசுப்ரமணியமும், பிறழ் சாட்சியாக மாறியுள்ளதால் பொய் சாட்சியம் அளித்ததற்காக, அவர் மீதும் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீஸ் தரப்பும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சேர்ந்து கொண்டு செயல் படுவதால் அந்த நடிவடிக்கைகள் எடுக்கப் பட வில்லை. இவ்வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி என்கிற முறையில், நானும் கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்க வேண்டும். வழக்கு டைரி அடிப்படையில்தான் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட வேண்டும். சிபிசிஐடி டி.எஸ்.பி.,யிடம் வழக்கு டைரியை அளிக்குமாறு கேட்டேன். அதை அளிக்க அவர் மறுத்து விட்டார். பிறழ் சாட்சியாக நான் கருதப்படுவேன் என்றும் வழக்கு முடிக்கப்படும் என்றும் எனக்கு தெரிவிக்கப் பட்டது.  
அப்பு
           வழக்கை நியாயமாக நடத்த வேண்டும் என போலீஸ் தரப்பு உண்மையிலேயே விரும்பினால், கோர்ட்டில் ஆஜராகி நான் வாக்குமூலம் அளிக்கத் தயார்! ஆனால் அது சட்டபூர்வமாக இருக்க வேண்டும்.  நான் சாட்சி அளிப்பதற்கு முன், பிறழ் சாட்சிகளாக மாறியவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் சாட்சி அளித்த ரவிசுப்ரமணியம் மீது நடவடிக்கை மற்றும் பிறழ் சாட்சிகளை 
மீண்டும் விசாரிக்க கோரி மனு அனுப்பினேன். வரும் 23ம் தேதி சாட்சியம் அளிக்க வருமாறு, புதுச்சேரி கோர்ட்டில் இருந்து எனக்கு சம்மன் வந்துள்ளது. புதுச்சேரி கோர்ட்டில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். பிறழ் சாட்சியாக மாறிய அப்ரூவர் ரவிசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்கவும், பிறழ் சாட்சிகளை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். அதன் பின், என்னை சாட்சியாக விசாரிக்க வேண்டும். 
 --தலைமைப்  புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று விட்ட சக்திவேலுவின்  மனுவில் இவ்வாறு கூறப் பட்டுள்ளது.
சங்கர ராமன்           


21.3.11

மதிமுகவை விரட்டியடித்த ஜெயலலிதாவின் முடிவுக்கு காரணம் சோவா?

அச்சாணி சிறியதுதான்! ஆனால்........மதிமுகவை கூட்டணியிலிருந்து விலக்க சோவின் ஆலோசனைப் படியே ஜெயா நடந்து கொண்டதாகத் தெரிகிறது!  தவிரவும் ஸ்டெரிலைட் ஆலைப் பிரச்னையில் வைகோ தீவிரமாகப் போராடியதும் ஒரு காரணம் என்று தெரிகிறது! சோ எப்போதுமே முதளிகளுக்கு ஆதரவாகப் பேசக் கூடிய ஆள் என்பது கடந்த கால வரலாறு!!  வைகோ கூட்டணியில் இருந்தால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி அமைக்க இடையூறாக இருக்கும் என்பதாலும் வைகோ அவராகவே வெளியேற வேண்டும் என்றுதான் 7 சீட்டில் பேச்சு வார்த்தையை அதிமுக ஆரம்பித்ததாம்! ஆனால் சோவும் அவருடைய முதலாளிகளும் எதிர்பார்த்தபடி நடக்க வில்லை! அதற்கு அடுத்த அஸ்திரம் தான் திடீர் 160 வேட்பாளர் பட்டியல்! இதுவும் வைகோவை உணர்ச்சி வசப் பட வைக்க வில்லை. ஆனால் அந்த அஸ்திரம்  பூமராங் மாதிரி திரும்பி வந்து தாக்கியதில் கூட்டணியே சிதறும் நிலைக்கு ஆளானதில் கலங்கிய சூத்திரதாரிகள் கடைசியாக 12 சீட்டுக்கு மேல் போக வேண்டாம்! அவராகவே வெளியேறி விடுவார்! என்று நினைத்தனர்! ஆனால் வைகோ தனித்துப் போட்டி என்று சொல்லாமல் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தார் என்கிறார்கள். இது அதிமுக தொண்டர்களை கவலை கொள்ளச் செய்ததே தவிர அதிமுக தலைமை இன்னும் உறக்கத்தில்தான் இருக்கிறது! ஜெயலிதா நம்பிக்கைக்குரியவரல்ல என்ற தோற்றத்தை உருவாக்கும். இதனால் லாபமடையப் போவது திமுகதான் என்று அதிமுக தொண்டர்களே சொல்கின்றனர். அச்சாணி சிறியதுதான்! ஆனால் வண்டி ஓட அது அவசியம்!!  சோவும் சரி ஜெயாவும் சரி சொகுசு காரில் பவனி வருபவர்கள் என்பதால் அவர்களுக்காக .... வீல் போல்ட்டு சிறியவைதான்!!  ஆனால் பாதுகாப்பான பயணத்திற்காக அந்த போல்டுகளுக்கு உரிய விலை கொடுத்துதான் ஆக வேண்டும்!!

கல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி!!


சென்னை மார்ச் 20:
(இந்த செய்தியை சிரிக்காமல் படிக்கும் படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.) 
திமுக., அதிமுகவுக்கு மாற்றாக, இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளதாக பாரிவேந்தர் என்று விளம்பரம் செய்து கொள்கிற கல்வி வியாபாரி  பச்சமுத்து தெரிவித்துள்ளார்! குட்டிக்  கட்சியான இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் அமைந்துள்ள அந்த அணியில் நான்கு குட்டியூண்டு கட்சிகளும், சில லெட்டர் பேடு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ( பிக் பாக்கட் அடிப்பவர்கள் பேரவை மட்டும்தான் பாக்கி! அவர்களுக்கும் போதிய இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!!)
இது பற்றி இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
       சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி, யாதவ மகா சபை தலைவர் தேவநாதன், தமிழ்நாடு வாணியர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், வ உசி பேரவை தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் கூட்டாக இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். 
      234 தொகுதிகளில் 123ல் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. (அதென்ன 123? அம்மாவுக்கு 9, ஐயாவுக்கு மஞ்சள்  துண்டு மாதிரி பச்சைக்கு 6 ராசியாம்!! தவிரவும் ஆட்சியமைக்கிற வாய்ப்பு வருகிற போது தனி மெஜாரிட்டிக்கு 118 வேண்டுமல்லவா? அதனால் 123-ல் போட்டியிட்டு 120-ல் ஜெயித்தால் மைனாரிட்டி அரசு என்று யாரும் சொல்ல மாட்டார்களே!!) 10 இடங்களில் வாணியர் பேரவை (செட்டியார் சமூகத்தினர்) போட்டியிடுகின்றனர். சமூக சமத்துவப் படை ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.மீதமுள்ள இடங்கள் கூட்டணியில் இடம் பெறவுள்ள கிறிஸ்தவ அமைப்பு, வஉசி பேரவை மற்றும் இந்திய தேசி லீக் போன்ற பிற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிமுக - திமுகவுக்கு மாற்று அணியாக எங்கள் அணி இருக்கும். எங்கள் தயவில்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் எல்லா சலுகையும் கிடைக்கிறது; மக்களுக்கு கிடைக்கவில்லை. நடைபெறவிருக்கும் தேர்தலில் குடும்ப ஆட்சி ஒழியும் என அனைவரும் எதிர்பார்த்தோம்.அதற்கு மாற்றாக, குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அமைச்சர்களின் வாரிசுகளுக்கும், "சீட்' கொடுக்கப் பட்டுள்ளது. இந்த செயல், மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
     ஒழுங்கற்ற ஆட்சியும், ஊழல் ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, எங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். குடும்ப ஆட்சி ஒழிய வேண்டுமென்பது தான், எங்கள் கட்சியின் நோக்கம். அதே நோக்கத்தோடு இருந்த பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம்.தேர்தல் களத்தில் விலை போகாத கட்சிகள் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன என நினைத்து விட வேண்டாம். எங்கள் கட்சிக்கு ஓரிரு தொகுதிகள் தர, திராவிட கட்சிகள் தூது விட்டன.ஒன்றிரண்டு சீட்களுக்காக, கட்சியை அவர்களிடம் அடமானம் வைக்காமல், துணிச்சலுடன் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க இருக்கிறோம்.
     இவ்வாறு பச்சமுத்து பேசினார். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர். 

முழு அளவில் மதுவிலக்கு!! கள் இறக்க அனுமதி!!

ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் என்று சொல்லிக் கொள்கிற கல்வி வியாபாரி பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதே வேளையில், கள் இறக்கி அதை டாஸ்மாக் கடையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் ஏழை மாணவ, மாணவியரின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதனால், விவசாய பொருட்களின் உற்பத்தி உயர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.16 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை எதிர்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கல்வி வியாபாரி கூறியுள்ளார்.  

       (பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையைப் பார்த்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் ஒபாமாவும் 
 கலங்கிப்  போன காட்சி அவருடைய நள்ளிரவுக் கனவில் ஒரு வேளை தெரிந்தாலும் தெரியலாம்!!) 20.3.11

அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள்!


அதிமுக தேர்தல் அறிக்கையிலும், திமுக தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக அதை மிஞ்சும் வகையில் இலவச அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் பேசப் படுவதாவது:

* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும். 
* அனைத்து குடும்பங்களுக்கும் மொபைல் போன் இலவசம்
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கத் தாலி இலவசம்.
* அனைத்து வீடுகளுக்கும் 'கேபிள் டிவி' இணைப்பு இலவசம்.
* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின்.
* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.
* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.
* அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.
*ரேசன் கார்டுள்ள அனைவருக்கும் 40 கிலோ அரிசி இலவசம்.
*
 மாதம் ஒரு லிட்டர் மண்ணெண்ணை  இலவசம்.
* அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.
* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் லேப்-டாப் 
இலவசம். 
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.-- அதிமுக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில் இந்த இலவசங்கள் இடம் பெற உள்ளன.

வைகோவுக்கு ஜெ.,கடிதம்! அதிமுக வட்டாரம் கவலை!!


 ம.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கும் முடிவு எடுத்ததன் மூலமாக அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகிய வைகோவுக்கு ஜெ.,கடிதம் அனுப்பியுள்ளார். இதில் தேர்தலை  ம.தி.மு.க. புறக்கணிக்கும் என்ற முடிவுக்கு தாம் வருந்துவதாகவும் , என்றும் அன்பு சகோதரியாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அந்த முடிவை எடுப்பதற்கு வைகோவிற்கு உரிமை இருக்கிறது என சொல்லி சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார்!     கடிதத்தில் ஜெ. கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க.,வில் தங்களது தலைமையிலான ம.தி.மு.க.,வும் கடந்த 2006ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகிறது. நடைபெற இருக்கும் 2011ம் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க,., தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான நீங்கள் நன்கு அறிவீர்கள் . எனவே உங்கள் கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்க முடியாது. 12 தொகுதிகள் ஒதுக்கி தருகிறோம் என்று பொருளாளர் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மூலம் உங்களுக்கு சொல்லி அனுப்பினேன். இருப்பினும் தாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் என்ற அறிவிப்பு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. தங்களது கட்சியின் முடிவு நிலை குறித்து தாங்கள் முடிவு எடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இருப்பினும் உங்கள் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும். 

--ம.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென விரும்பிய சக்திகள் அதை சாதித்து விட்டதாக அதிமுக வட்டாரம் தெரிவிக்கின்றன! இந்த முடிவு தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் அவை கவலை வெளியிட்டன.

நடந்தது என்ன? ம.தி.மு.க விளக்கம்!


தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு காரணம் என்ன என்பதை ம.தி.மு.க உயர்நிலை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதன்  முழு விவரம் வருமாறு:


2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடைபெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது. தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த வைகோ : மறுமலர்ச்சி தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலோருடைய கருத்தினை ஏற்று, அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச்செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன. அந்தத் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் போட்டியிட்ட தொகுதிகளைக் குறிவைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.கழகம், தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் : ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது; பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று.அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப் பிரச்சாரம், அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும். அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகம், உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.தமிழக சட்டமன்றத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து முழுமனதோடு இணைந்து செயல்பட்டது.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அண்ணா தி.மு.கழகம் தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக் கொண்டது. கம்பம், தொண்டாமுத்துடர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அண்ணா தி.மு.க.வின் முடிவை, மறுமலர்ச்சி தி.மு.கழகமும் ஏற்றுக் கொண்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையில், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் உள்ளிட்ட, முக்கியமான கொள்கைகளை,மறுமலர்ச்சி தி.மு.கழகம், கூட்டணிக்காக ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது இல்லை. இதனை, அண்ணா தி.மு.க. தலைமை நன்றாகவே அறியும். ஏனெனில், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ஈழத்தமிழர் பிரச்சினையில், ம.தி.மு.க.வின் நிலைப்பாடு, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கூட்டணி பிரித்து கொள்வதில் நடந்தது என்ன ? :நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அண்ணா தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது.இரண்டாவது சுற்றுப் பேச்சுகளின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போதுதான், ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.குறைந்தபட்சம், 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டபோதும், மார்ச் 12 ஆம் தேதியன்று, மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது. மறுநாள், 13 ஆம் தேதி, அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து, 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி அளவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, அவரது இல்லத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் சந்தித்த, திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், மார்ச் 13 ஆம் தேதி அன்று, அ.தி.மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளைக் கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியைக் குறைத்து, ஏழு தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்கச் சொன்னதாகக் கூறி விட்டுச் சென்றார்கள்.

இதன்மூலம், ம.தி.மு.க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது. அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதல் நாள் கூறியபடி, 8 தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக, அ.தி.மு.க.தலைமையின் சார்பில் கூறினார்கள்.

15 ஆம் தேதி இரவு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள், வைகோ அவர்களைச் சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தர முடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள்.மறுநாள், 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மீண்டும் அதே பிரநிதிகள், முதல் நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிப்படுத்தி, இதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம்; நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால், உடன்பாடு குறித்துப் பேசுவோம்; அதைத் தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை’ என்று கூறி விட்டார்.

அன்று மாலையிலேயே, ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை என்பதை, அ.தி.மு.க. தலைமை அறிவித்தே விட்டது. 2006 ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது. மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால், 19 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், ம.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை, தாயகத்தில் சந்தித்து, 12 தொகுதிகளைத் தருவதாக, அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள். ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளைத் தருவதாக இருந்தால், தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. தரப்பில், அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.தொகுதிப் பங்கீட்டில், அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைமை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தி விட்டது.


ஜெ., போக்கில் மாற்றமில்லை :அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களுடைய நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற, துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தலைமைக் கழகம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 
தாயகம், 
சென்னை - 8 
20.03.2011