21.3.11

கல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி!!


சென்னை மார்ச் 20:
(இந்த செய்தியை சிரிக்காமல் படிக்கும் படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.) 
திமுக., அதிமுகவுக்கு மாற்றாக, இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளதாக பாரிவேந்தர் என்று விளம்பரம் செய்து கொள்கிற கல்வி வியாபாரி  பச்சமுத்து தெரிவித்துள்ளார்! குட்டிக்  கட்சியான இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் அமைந்துள்ள அந்த அணியில் நான்கு குட்டியூண்டு கட்சிகளும், சில லெட்டர் பேடு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ( பிக் பாக்கட் அடிப்பவர்கள் பேரவை மட்டும்தான் பாக்கி! அவர்களுக்கும் போதிய இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!!)
இது பற்றி இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
       சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி, யாதவ மகா சபை தலைவர் தேவநாதன், தமிழ்நாடு வாணியர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், வ உசி பேரவை தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் கூட்டாக இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். 
      234 தொகுதிகளில் 123ல் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. (அதென்ன 123? அம்மாவுக்கு 9, ஐயாவுக்கு மஞ்சள்  துண்டு மாதிரி பச்சைக்கு 6 ராசியாம்!! தவிரவும் ஆட்சியமைக்கிற வாய்ப்பு வருகிற போது தனி மெஜாரிட்டிக்கு 118 வேண்டுமல்லவா? அதனால் 123-ல் போட்டியிட்டு 120-ல் ஜெயித்தால் மைனாரிட்டி அரசு என்று யாரும் சொல்ல மாட்டார்களே!!) 10 இடங்களில் வாணியர் பேரவை (செட்டியார் சமூகத்தினர்) போட்டியிடுகின்றனர். சமூக சமத்துவப் படை ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.மீதமுள்ள இடங்கள் கூட்டணியில் இடம் பெறவுள்ள கிறிஸ்தவ அமைப்பு, வஉசி பேரவை மற்றும் இந்திய தேசி லீக் போன்ற பிற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிமுக - திமுகவுக்கு மாற்று அணியாக எங்கள் அணி இருக்கும். எங்கள் தயவில்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் எல்லா சலுகையும் கிடைக்கிறது; மக்களுக்கு கிடைக்கவில்லை. நடைபெறவிருக்கும் தேர்தலில் குடும்ப ஆட்சி ஒழியும் என அனைவரும் எதிர்பார்த்தோம்.அதற்கு மாற்றாக, குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அமைச்சர்களின் வாரிசுகளுக்கும், "சீட்' கொடுக்கப் பட்டுள்ளது. இந்த செயல், மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
     ஒழுங்கற்ற ஆட்சியும், ஊழல் ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, எங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். குடும்ப ஆட்சி ஒழிய வேண்டுமென்பது தான், எங்கள் கட்சியின் நோக்கம். அதே நோக்கத்தோடு இருந்த பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம்.தேர்தல் களத்தில் விலை போகாத கட்சிகள் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன என நினைத்து விட வேண்டாம். எங்கள் கட்சிக்கு ஓரிரு தொகுதிகள் தர, திராவிட கட்சிகள் தூது விட்டன.ஒன்றிரண்டு சீட்களுக்காக, கட்சியை அவர்களிடம் அடமானம் வைக்காமல், துணிச்சலுடன் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க இருக்கிறோம்.
     இவ்வாறு பச்சமுத்து பேசினார். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர். 

முழு அளவில் மதுவிலக்கு!! கள் இறக்க அனுமதி!!

ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் என்று சொல்லிக் கொள்கிற கல்வி வியாபாரி பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதே வேளையில், கள் இறக்கி அதை டாஸ்மாக் கடையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் ஏழை மாணவ, மாணவியரின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதனால், விவசாய பொருட்களின் உற்பத்தி உயர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.16 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை எதிர்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கல்வி வியாபாரி கூறியுள்ளார்.  

       (பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையைப் பார்த்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் ஒபாமாவும் 
 கலங்கிப்  போன காட்சி அவருடைய நள்ளிரவுக் கனவில் ஒரு வேளை தெரிந்தாலும் தெரியலாம்!!)