6.4.11

பிரபலங்கள் தொகுதியில் தராசு!! நமது சர்வே அம்பலப் படுத்தும் நிஜங்கள்!!..

அவரை அவரே அடிச்சுக்கிட்டாராம்..

பிரபலங்கள் தொகுதியில் தராசு!!
நமது சர்வே அம்பலப் படுத்தும் நிஜங்கள்!!

தமிழகம் முழுவதும் தராசு குழுவினர் இந்தத் தேர்தலுக்காக சுற்றித் திரிந்து மக்கள் மனத அறிந்து கொள்ளும் முயற்சியில்  தீவிரமாக  இருக்கும்  சமயத்தில் மூன்று தொகுதிகளைப் பற்றி மட்டும் மக்கள் ஆர்வமாக விசாரித்த வண்ணம் இருக்கின்றனர்!! அந்தத் தொகுதிகள்:
1. முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர்!! 
2. எதிர்க்கட்சித் தலைவர்  ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம்!!  
3. துணை முதல்வர் மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர்!! 
இந்த மூன்று தொகுதிகளிலும் மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 2  ஆகிய தேதிகளில் நமது சர்வே குழுவினர் தலா ௦20,000 வாக்காளர்களிடம் வாக்குச்சீட்டுகளை விநியோகித்து மாதிரி வாக்கெடுப்பு நடத்தினோம்! பெரும்பாலோர் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் வாக்களித்தனர்!!  முன்ஜாக்கிரதை வாக்காளர்களான சிலர் மறைந்து நின்று வாக்களித்து அதை பலவாறாக மடித்து பெட்டியில் போட்டனர்!பல வாக்காளர்கள் தராசு இணையதளத்தில் இந்த வாக்குச்சீட்டைப் பார்த்தோம், அதை அனுப்புவதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள் என்று நமக்கு டானிக் தரவும் மறக்கவில்லை!!

இந்த மூன்று தொகுதிகளின் நிலவரத்தை நாம் பார்த்ததை பார்த்தபடி, உணர்ந்ததை உணர்ந்தபடி எழுதி உள்ளோம்! கடந்த தேர்தல்கள் அனைத்திலும் நமது சர்வே மட்டும்தான் துல்லியமாக இருந்திருக்கின்றன!  இந்தத் தேர்தல் முடிவும் அதேபோல் துல்லியமாகவே இருக்கும் என்ற உத்திரவாதத்துடன்   படியுங்கள்!
1. திருவாரூர் :
திமுக தலைவர் கருணாநிதி தன் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் குடவாசல் ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.  தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அதிருப்தி அலை வீசுகிறது! அதைச் சமாளிக்க கரன்சி மழை கடுமையாகப் பெய்வதால் திமுகவினர் கடுமையான தைரியத்தில் உலா வருகின்றனர்! தற்போதைய எம்.எல்.ஏ வும் அமைச்சருமான மதிவாணனும் சரி நகராட்சித்தலைவர் தென்னனும் சரி மக்களின் அதிருப்தியில் சிக்கியிருந்த போதும் அதை தனக்கு சாதகமாக்கி வாக்கு சேகரிக்கும் அளவுக்கு சாதுர்யமுள்ளவராக அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் தெரியவில்லை. திருவாரூர் நகரில் பல வசதிக் குறைபாடுகள்! நகராட்சி நிர்வாகத்திலும் பல குளறுபடிகள்! "கருணாநிதிக்கு நிகரான ஒரு வேட்பாளரை இங்கு போட்டிருந்தால் கலைஞர் இங்கு தோல்வியடைவது நிச்சயம்! குடவாசல் ராஜேந்திரன் மீது இங்கு பெரிய அபிப்ராயம் இல்லாததால் கலைஞர் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பது நிச்சயம்!" என்பதுவே உள்ளூர் வாசிகள் பலரின் கருத்தாக இருக்கிறது. 
கருணாநிதி

ராஜேந்திரன்

முதல்வரின் மகள் செல்வி இங்கேயே தங்கி தந்தைக்காக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்! பணவிநியோகம் சம்பந்தமான புகார்களை, கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கிறாராம்! திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு ஐநூறு முத்த ஆயிரம் ரூபாய் வரை இடத்துக்கு தகுந்தபடி கிடைக்கிறதாம்! ஒரு வீட்டில் 4 ஓட்டு இருந்தால் அந்த வீட்டுக்கு 2000 நிச்சயம்! கம்யூனிஸ்ட் ஓட்டுகள் நிறைந்த பகுதியில் கூட பாரபட்சமில்லாமல் பணம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது! தேர்தல் கமிஷன் என்னதான் கடிவாளம் போட்டு இறுக்கினாலும் அதை செயல் படுத்த வேண்டியவர்கள் மாநில அரசின் கீழ் பணிபுரிகிற உள்ளாட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள்தான் என்பதால் திருவாரூரில் எவ்வித கட்டுப்பாடுமின்றி கரன்சி வெள்ளம் பாய்ந்து வருகிறது!
-ஒரு முதல்வரின் தொகுதியில் அவர் கட்சியினருக்கு எதிராக பணம் கொடுப்பவர்களைப் பிடித்து கைது செய்யும் அளவுக்கு நேர்மைத்திறனும்- நெஞ்சுரமும் கொண்ட அதிகாரிகள் யாரையும் நாம் பார்க்கவோ கேள்விப்படவோ இல்லை.
எனவே அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சுமார் 45000  முதல் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூரில் கருணாநிதி ஜெயிப்பது உறுதி! நமது வாக்குப் பதிவு முடிவு கீழே:       
மு. கருணாநிதி (திமுக)          .................................12,602
குடவாசல் ராஜேந்திரன் (அதிமுக)  .............................. 6,812.
49(o)                                                  215
பிற  வேட்பாளர்கள் மற்றும் செல்லாதைவை ................  371


2. ஸ்ரீரங்கம் :
பெட்டிக்கடைகள், தீப்பெட்டி, சிகரெட் பெட்டி, பால்பாயின்ட் பேனா போன்றவற்றின் பயன் என்ன எனபதற்கு புது விடை கிடைத்த இடம் இது!. இங்கு திமுக தரப்பில் பணம் ஆறாக அல்ல சுனாமியாகப் பாய்ச்சப் படுகிறது! உள்ளே மடித்து வைக்கப் பட்ட  ஐநூறு ரூபாய் தாள் கொண்ட தீப்பெட்டி!   சுருட்டி வைக்கப் பட்ட  ஐநூறு ரூபாய் தாள் கொண்ட பால்பாயின்ட் பேனா! என அசத்தலான விநியோகம்....வீடு தவறாமல் இந்த விநியோகம் நடந்ததும் அதிமுக சார்பில் புகார் செய்யப் பட உடனே யுக்தி மாறியது! குறிப்பிட்ட சில பெட்டிக் கடைகளில் பணத்தை கொடுத்து வைத்து விட்டு வாக்காளர்களுக்கு சிகரெட் அட்டையை ஒரு டோக்கன் மாதிரி கொடுக்கிறார்கள்! அதை எடுத்துக்கொண்டு பொய் அந்தக் கடைகளில் கொடுத்து ஐநூறு ரூபாய் பணமாகவோ அல்லது வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீதத்தொகையையோ பெற்றுக் கொள்ளலாம்! திமுக வேட்பாளர் ஆனந்தை எப்படியாவது ஜெயிக்க வைப்பேன் என்று முதல்வரிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம் அமைச்சர் கே என் நேரு.
ஜெயலலிதா

ஆனந்த்
அதிமுக தரப்பில் திமுகவுக்கு எதிராக ஸ்பெக்ட்ரம், குடும்ப அரசியல், தொழில் துறைகளில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சின்னத் திரை, வெள்ளித்திரை ஆகியவற்றில் கபளீகரம் செய்யும் கருணாநிதி குடும்பம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப் படுகிறது! இங்கு பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவும் இதை மையப்படுத்தியே ஆவேசமாகப் பேசினார்! திருவாரூர் போல் அல்லாது ஸ்ரீரங்கத்தில் தேர்தல் கமிஷன் கேடிபிடியின் கீழ் அதிகாரிகள் ஓரளவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்!
மக்களின் அதிருப்தியை காசு கொடுத்து சரிக்கட்டி விடலாம் என்ற திமுகவின் எண்ணம் இங்கு பலிக்காது! திமுக வேட்பாளர் ஆனந்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எளிதில் ஜெயித்து விடுவார்! சுமார் 45000 முதல் 55000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் ஜெயிப்பது உறுதி!! நமது மாதிரி வாக்குப் பதிவு முடிவு கீழே:            

ஜெயலலிதா  (அதிமுக)    ....................................12,193.
ஆனந்த்  (திமுக)          ......................................7,424
49(o)                                             317
பிற  வேட்பாளர்கள் மற்றும் செல்லாதைவை ...........66

3. கொளத்தூர்: 
ரஜினியுடன் ஸ்டாலின் 
ரஜினியுடன் துரைசாமி 
  எளிதாக ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் கொளத்தூரைத் தேர்ந்தெடுத்த ஸ்டாலினுக்கும் திமுகவினருக்கும் அதிமுக வேட்பாளராக   சைதை துரைசாமியை ஜெயலலிதா அறிவித்ததும் கடும் அதிர்ச்சி! காரணம் சைதை துரைசாமிக்கு மக்களிடையே இருக்கும் நல்ல பெயர்!! தொகுதி முழுதும் வீடு வீடாக நடந்தே சென்று மக்களிடையே நேருக்கு நேராகப் பேசி வாக்கு கேட்டு வருகிறார் துரைசாமி !  இவருடைய கடுமையான பிரச்சாரத்தால் ஸ்டாலினும் தனது பிரச்சார -விநியோக வியூகங்களை மாற்றி வருகிறார்! ஸ்டாலினின் மனைவி மகன், மகள் என மொத்த குடும்பத்தினரும்   வெகுவேகமாக காரேறி வாக்கு கேட்டு வருகின்றனர்!சைதைக்கோ அவருடைய மனிதநேய அறக்கட்டளையில் படித்த மாணவர்கள், அவர்களுடைய குடும்பத்தார் என ஆயிரக்கணக்கானோர் வாக்காளர்களைச் சந்தித்து துரைசாமியின் நற்பண்புகளையும், சேவை மனப்பான்மையையும் பற்றி கூறி வருகின்றனர்! பெண்கள், இளைஞர்கள், நடுத்தரவகுப்பினர் மத்தியில் சைதை துரைசாமியின் கிளீன் இமேஜ் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிமுகவின் பிரச்சார அலுவலகம் மிக எளிமையாக இருக்க, திமுகவின் தேர்தல் அலுவலகம் ரெட் கார்பட் விரிக்கப்பட்டு படோடபமாக காட்சியளிக்கிறது!  
திருவாரூர் ஸ்டைலில் இங்கும் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் -மாநகராட்சி  முதல் காவல்துறை வரை அத்தனை பேரும்  திமுகவினருக்கு அவர்களுடைய விதிமீறல்களுக்கு பரிபூரணமாக ஒத்துழைக்கின்றனர்! பின்னே? முதல்வரும் துணைமுதல்வரும் வேறு வேறா என்ன!  
பகுஜன்சமாஜ் கட்சியின் ஆர்ம்ஸ்டராங் ஓட்டுகளைப் பிரிப்பார் என்று கூறப் பட்டாலும் நமது சர்வேயில் அதற்கான அறிகுறி தென்படவே இல்லை!  கொளத்தூரில் நிச்சயமாக அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கும் துணைமுதல்வர் ஸ்டாலினுக்கும்தான் போட்டி! என்னதான் அரசு இயந்திரங்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக இறக்கி விடப் பட்டாலும் சைதை சுமார் 25000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பார்! இதற்குக் காரணம் துரைசாமியின் கிளீன் இமேஜ்! ஸ்டாலினை விடவும் இமேஜ் அதிகமாக உள்ள சைதை துரைசாமியையே தொகுதி மக்கள் விரும்புவது நமது வாக்குப் பதிவு முடிவு மூலமாகவும் தெரிகிறது!    
                    
சைதை துரைசாமி (அதிமுக)    ...................................10,943.
முக ஸ்டாலின் (திமுக)          ..................................7,163
ஆர்ம்ஸ்டராங் (பகுஜன்சமாஜ்)    ................................... 657
49(o)                                                 781
பிற  வேட்பாளர்கள் மற்றும் செல்லாதைவை ..................456

(234 தொகுதிகளின் சர்வே முடிவுகளுக்கு தராசு ஏப்ரல் 8-14, 2011 இதழைப் பார்க்கவும்!)