11.4.11

உலக மகா ஊழல் ரூபாய் நோட்டு

திருச்செந்தூர்,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் பி.ஆர். மனோகரன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் திமுக வினர் நலத் திட்டங்களை நிறைவேற்றியதாகக் கூறி வாக்குசேகரித்து வருகின்றனர்.  அதிமுக வினர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை உலக மகா ஊழல் என ரூபாய் நோட்டுபோல துண்டுப்பிரசுரமாக அச்சடித்து அதை வீடுவீடாக விநியோகித்து வருகின்றனர்.  இதில், முதல் பக்கத்தில் திமுக. பாங்க் ஆப் இந்தியா, ரூ. 1.76 லட்சம் கோடி என குறிக்கப் பட்டுள்ளது. கீழே ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடியை குறிக்கும் வகையில் எழுத்தால் எழுதப்பட்டுள்ளது.   இடதுபுறம் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி படங்களும், வலதுபுறத்தில் ராசா, கனிமொழி படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.   பின்பக்கத்தில் தமிழக மக்களின் அவலநிலை குறித்தும், கருணாநிதியின் குடும்ப அரசியல் குறித்தும் கருத்துப்படம் வரையப்பட்டு, இந்த அவலநிலையை மாற்ற ஜெயலலிதாவின் ஆட்சி மலர திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிப்பீர் என அச்சிடப்பட்டுள்ளது.