11.4.11

நிலத்தை அபகரித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதற்கு உடந்தையாக செயல்பட்ட முதல்வரும் குற்றவாளிகள். தேர்தலில் மொத்த திமுக வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் -- சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் ஆவேசம்!!

சேலம், ஏப்.11 : "எங்களை விரட்டியடித்து, நிலத்தை அபகரித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதற்கு உடந்தையாக செயல்பட்ட முதல்வரும் தான் குற்றவாளிகள். தேர்தலில் மொத்த தி.மு.க வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும்' என, சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் கூறினர். சேலத்தில் அவர்கள் அளித்த பேட்டி: நாங்கள் அனைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தாலும், அவரது ரவுடி கும்பலாலும் வீடுகளையும், நிலத்தையும் இழந்த 30 குடும்பத்தினர். அங்கம்மாள் காலனி பிரச்னையில், "எனக்கும், என் ஆட்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை' என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். எங்கள் நிலப்பிரச்னையில், 2008 ஜூன் 27ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நிலத்தை ஆக்கிரமித்தவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. ஆனால், அமைச்சர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சருக்கு ஆதரவாக முதல்வரும் செயல்பட்டுள்ளார். அவர் தான் முதல் குற்றவாளி. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அனைத்து அமைச்சர்கள் மீதும் ஆக்கிரமிப்பு புகார்கள் உள்ளன. வரும் தேர்தலில் ஒட்டுமொத்த தி.மு.க.,வும் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்கள் விரோத கட்சியாக அது செயல்படுகிறது. நாங்கள் 100, 500 ரூபாய் என, வசூல் செய்து, "சிடி' தயார் செய்தோம். அ.தி.மு.க.,வினர் யாரும் அதை தயாரிக்கவில்லை. "வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, அமைச்சர் கூறுகிறார். ஆனால், வீரபாண்டி ஆறுமுகத்தை தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். சங்ககிரி தொகுதிக்கு சென்று எங்களது நிலை குறித்த நோட்டீஸ், "சிடி'யை விநியோகித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.