12.4.11

அடி தடி அட்டூழியம் ஆரம்பம்!! எம்எல்ஏ மண்டை உடைந்தது!!


உடுமலை, ஏப் 12:  உடுமலை அருகே உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திங்கள்கிழமை இரவு வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அதைத் தடுக்க முயன்ற அதிமுகவினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் அதிமுக எம்எல்ஏவும், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளருமான சி.சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

திங்கள்கிழமை மாலையிலிருந்தே உடுக்கம்பாளையத்தில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான சாமிநாதன் சார்பாக வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் சாமிநாதனும் இருந்தார். எனவே 
அந்த வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.தகவல் தெரிந்தவுடன் உடுமலை எம்.எல்.ஏ.வும் மடத்துக்குளம் அதிமுக வேட்பாளருமான சி.சண்முகவேலு அங்கு வந்தார். பொள்ளாச்சி மற்றும் உடுமலை டி.எஸ்.பி.க்களும், போலீசாரும் உடுக்கம்பாளையம் விரைந்தனர்.

 இந்த சமயத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதிமுக வேட்பாளர் சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆத்திரமடைந்த அதிமுகவினர் அந்த வீட்டில் நின்றிருந்த அமைச்சரின் காரையும், பிரசார வாகனம், போலீஸôரின் வாகனங்களையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகவேலு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீட்டிற்குள் பதுங்கியிருந்த அமைச்சர் சாமிநாதனை கடும் பாதுகாப்புடன் போலீஸôர் வெளியேற்றினர். அப்போது எழுந்த கலவரத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்தது, 6 போலீசாரும் காயமடைந்தனர்.
தகவலறிந்த  உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், 
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 
உடுமலை பஸ் நிலையப் பகுதியில் மறியலில் ஈடுபட்டார்.இதனால் அந்தப் பகுதி முழுவதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.