22.5.11

கனிமொழியைப் பார்த்து கண்கலங்கிய ராசாத்தி அம்மாள்!!புதுதில்லி, மே.21:   
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 'கூட்டு சதியாளர்' என துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நேற்று நிராகரித்து உத்தரவிட்டார். அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியும் உத்தரவு பிறப்பித்தார் .
தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
நீதிமன்றத்துக்கு வந்த ராசாத்தி அம்மாள், கனிமொழியைப் பார்த்து கண்கலங்கினார்.
விசாரணைகள் முடிந்து மாலை 4 மணியளவில் கனிமொழி நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் திகார் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைது செய்யப்பட்டார்.
2ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டது.
விசாரணையை அடுத்து முதல் குற்றப்பத்திரிகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிபிஐ தனது துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
அதில் 2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பயனடைந்ததாகக் கூறப்படும் ஷாகித் பல்வாவுக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டி நிறுவனம், குசேகாவ்ன் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி நிதி அளித்தது தெரியவந்தது.

இதனடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள், 20 சதவீத பங்குதாரரான கனிமொழி, 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகிய மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போதும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அளித்தால், கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்களின் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தார்.
திகார் சிறையில் 150 சதுர அடி (15-க்கு 10) அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் கிடையாது. தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட வசதி அவருக்கு அளிக்கப்படும். செய்தித்தாள்களும் அவருக்கு வழங்கப்படும். இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட மாதுரி குப்தா, தில்லியில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சோனு பஞ்சாபன், தில்லியில் கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாரதா ஜெயின் ஆகியோர் கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 6-ல் ஏற்கெனவே உள்ளனர்.
கனிமொழியுடன் கைது செய்யப்பட்ட கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத் குமார், சிறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, நால்கோ முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அபய் குமார் ஆகியோரும் சிறை எண் 4-ல் தான் உள்ளனர்.
இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் திகார் சிறையில்தான் உள்ளனர்