19.5.11

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி-- ஜெயலலிதா ஆவேசம்!! .-


புதுவை சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி! மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 17 தொகுதியிலும், அ.தி.மு.க. 10 தொகுதியிலும் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார். இப்போது இதில் ஒரு சர்ச்சை!! 
 தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி வெற்றி பெற்றால் ரங்கசாமி முதல்- அமைச்சர் ஆவார். அவர் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்  என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ரங்கசாமி அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை உறுப்பினர் வி.எம்.சி. சிவகுமார் ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைக்கப் போவதாக அறிவித்தார். அ.தி.மு.க.வை மந்திரி சபையில் சேர்க்காமல் தனது கட்சி எம்.எல்.ஏக்களை மட்டுமே அமைச்சர்களாக நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார். ரங்கசாமியின் இந்த செயலுக்கு தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூட்டணிக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:-
 
தனித்தே ஆட்சி என்று தன்னிச்சையாக புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அ.தி.மு.கவுக்கு இழைத்திருக்கிறார். நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
 
தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.   இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அ.தி.மு.க. மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர்.
 
அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.   கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ரங்கசாமிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமிக்கு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி.
 
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   அ.தி.மு.க.வின் ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும்.
 
நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்து வதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, ஆளும் கட்சியினால் ஏற்படும் அவதியை எடுத்துக் காட்டுவது, ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் நாட்டை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது, உரிமையும், உடமையும் பறிபோகும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும் போது அதனைக் கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவை தான் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்று பேரறிஞர் அண்ணா கூறியதற்கிணங்க, ஓர் ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. புதுச்சேரியில் செயல்படும் என்பதையும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அ.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.