15.6.11

ஜெயலலிதாசென்னை திரும்பினார்

சென்னை ஜூன் 15: டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்தோடு அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா இரண்டு நாள் பயணமாக, முதன் முறையாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன் தோழி சசிகலா, செயலர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றிருந்தனர். டில்லியில் தேசிய கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசிய ஜெயலலிதா, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பின்னர் தனி விமானம் மூலம், நேற்று மாலை 5.20 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து, சால்வை கொடுத்து வரவேற்றனர். 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறி வைக்கும் ஜெயலலிதா !! சிதம்பரம், தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் !!

புதுடில்லி, ஜூன் 14: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மற்றும் தயாநிதி இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார். முன்னதாக பிரதம‌ரை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக 30 பக்கம் கொண்ட கோரிக்கை மகஜரை அவர் வழங்கினார்.
சந்திப்பிற்கு பின்னர் நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு ‌ஜெ., அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2009 தேர்தலில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இத‌ைனை அ.தி.மு.க., ‌‌தொடர்‌ந்து கூறி வருகிறது. இவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். எங்களது கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். டேட்டா என்ட்ரி செய்யும் ஆப்ரேட்டர் மூலம் இதி்ல குளறுபடி செய்து விட்டார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பிரச்னை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்று நாட்டை ஏமாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம் . எனவே அவர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி அவரே பதவி விலகியிருக்க வேண்டும் அவர் பதவி விலகாததால் தயாநிதியை, பிரதமர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது அவர்கள் தங்களுக்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர். குடும்ப ஆட்சியே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எவ்வித கவலையும் அடையவில்லை என்றார். தி.மு.க.,வினர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது தி.மு.க.,மீது தாம் எதுவும் கிரிமினல் வழக்கு போட யாருக்‌கும் சிக்னல் கொடுக்கவில்லை என்றார்.13.6.11

ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா? சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா? - நாளை உச்ச நீதிமன்றத்தில் தெரிந்து விடும்!!

புதுடெல்லி, ஜூன். 13-
அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக புதிய பாடத்திட்டத்தின்படி பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் சமச்சீர் பாட புத்தகம் தரமானதாக இல்லை என்று கூறி இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாகவும் குளறுபடிகள் சரி செய்யப்பட்ட பின்பு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்படும். அதுவரை பழைய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபையிலும் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
சமச்சீர் பாட புத்தகங்களில் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கவோ புதிதாக சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கலாம், அதுவரை சமச்சீர் கல்வித் திட்டம் தொடரலாம் என்றும் கூறினார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தடையை நீக்ககோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கல்வித்துறை செயலாளர் சபிதா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.
புதுடெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். இன்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். மனுவை படித்து பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை (செவ்வாய்க் கிழமை) மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.இதற்கிடையே கடலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சென்னை வக்கீல் சுரேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசின் அப்பீல் மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
-- ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா? இல்லை சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா? என்பது நாளை தெரிந்து விடும்!

ஜெயலலிதா டெல்லி சென்றார்!!

சென்னை, ஜூன்.13-

ஆட்சி பொறுப்பேற்றபின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக டெல்லி சென்றார். பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவரை வீட்டு வாசலில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் வழியனுப்பி வைத்தனர்.
விமான நிலையம் வரை அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 12.45 மணிக்கு அவர் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயலலிதா டெல்லி சென்றதும் அங்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், டெல்லி மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலாளர் ஷீலாபிரியா, மற்றும் அரசு துறை செயலாளர்களும் சென்றனர்.
விமான நிலைய வரவேற்புக்குப்பின் ஜெயலலிதா டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அங்கு அவரை இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்கள்.
மத்திய வேளாண்மைத் துறை மந்திரி சரத்பவார் உள்ளிட்ட சில மத்திய மந்திரிகளும், டெல்லி தலைவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், ஏழைகளுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கவும், தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேச்சு நடத்துகிறார்.
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றியும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வற்புறுத்துவார்.
பிரதமரை சந்தித்தபின் மதியம் 12 மணிக்கு டெல்லி பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேட்டி அளிக்கிறார். நாளை மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்

நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய கல்வி கட்டண அறிவிப்பு!!

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறைப் படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ்நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கான கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ணயித்தது.

இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு நேரடி விசாரணை நடத்தி இறுதி உத்தரவு அளிக்குமாறு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்.

மழலையர், தொடக்க, நடு நிலைப்பள்ளிகளுக்கு முதல் கட்டமாக விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கும் ஆய்வு நடந்தது. கடந்த மாதம் 4-ந் தேதி ஆய்வு முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கட்டண குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்தில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் தனி அலுவலர் திருஞானசம்பந்தம் புதிய கல்வி கட்டண குறித்த அறி விப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு, 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. பள்ளி அமைவிடம், மாணவர்கள் எண்ணிக்கை, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர், பணியாளர் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவுகள் அனைத்தும் மறு கட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

2010-11, 2011-12, 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் மறு கட்டண நிர்ணய ஆணை அமைந்துள்ளது. இந்த கட்டண நிர்ணய சட்டத்தின் படி அங்கீகாரம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். தொடர் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த பள்ளிகளுக்கு மறு கட்டண நிர்ணயம் செய்ய பெற்று இருந்தாலும் அங்கீகாரம் பெற்ற பின்னரே அது பொருந்தும். அங்கீகாரகாலம் நிறைவடைந்து 3 ஆண்டு காலம் கடந்தும் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காத பள்ளிகளுக்கும், அங்கீகாரம் மறுக்கப்பட்ட பள்ளிகளுக்கும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை.

மேலும் இத்தகைய பள்ளிகளுக்கு 7-5-2010ல் குழு அளித்த நிர்ணய ஆணையும் தற்போது நீக்கம் செய்யப்படுகிறது. மத்திய- மாநில அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு பொருந்தாது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஒரு பகுதி அரசு நிதி உதவி பெற்று ஒரு பகுதி சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளிகள் கீழ் வருகிறது. அவற்றுக்கு இந்த புதிய கல்விக் கட்டணம் பொருந்தும். தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் வெளியிடப்படுகிறது.
தனியார் பள்ளிகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கட்டண விவரம் குறித்த தகவலை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரம் விரைவில் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாவட்டத்தில் 430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 230 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. அவற்றுக்கு புதிய கல்வி கட்டணம் பொருந்தும். புதிய கல்வி கட்டணம் 15 சதவீத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

ரிஷிவந்தியம் தொகுதியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் போது இத் தொகுதியில் போட்டியிட எம்.ஜெயந்தி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு முறைப்படி நிரப்பப்படவில்லை என்று கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார்.
இந்நிலையில் ஜெயந்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார். ஆனால் அது பற்றி என்னிடம் அவர் கருத்து எதுவும் கேட்க வில்லை. எனக்காக முன்மொழிந்த தொகுதி வாக்காளர்கள் பெயர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள கையெழுத்து ஆகியவை குறிப்பிடப்படவில்லை என்று கூறி தேர்தல் அதிகாரி எனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டார். இது சட்ட விரோதமானது.
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜின் ஆதரவாளர்கள் எனது கணவரை தாக்கி கத்தியால் குத்தி விட்டு வேட்பு மனுவை பறித்து சென்று விட்டனர். இதனால் தெளிவான விவரங்களை என்னால் உடனடியாக தெரிவிக்க முடியவில்லை. எனவே ரிஷிவந்தியம் தொகுதியில் நடந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. லாசரின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் இந்த தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார்.

இலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்

பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்!! இதன் மூலமே இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாகை (எ) கோ. அன்பழகன் எழுதிய உயிர்த்தெழு நூல் வெளியீட்டு விழா தியாகராயர் நகரில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகோ நூலை வெளியிட, வளரும் அறிவியில் பத்திரிகையின் ஆசிரியரும், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சிவகுமார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை இயக்குநர் புகழேந்தி பெற்றுக்கொண்டார். விழாவில் வைகோ பேசத் தொடங்கியதும் மழை தூற ஆரம்பித்துவிட்டது. தூறலில் நனைந்தபடியே அவர் பேசினார்.
அவர் பேசிய விவரம்:
ராஜபட்சவை போர்க்குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் போர்க்குற்றவாளி இல்லை. இனக் கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கும் உண்டு. அதனுடன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்களுக்கும் உண்டு. இந்திரா காந்தி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர். ஆனால் சோனியா காந்தி அப்படிப்பட்டவராக இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, விமானப் பாதைகள் அமைத்துக் கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ராஜபட்சவைச் சந்தித்து தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வலியுறுத்தி பேசியதாகச் சொல்லப்படுகிறது. ராஜபட்ச ஒரு நாளும் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். சிவசங்கர மேனனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
யார் சென்றாலும் ராஜபட்சவிடமிருந்து தமிழர்களுக்கு உரிய அதிகாரத்தை எதிர்பார்க்க முடியாது. சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்சவை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அதை வரவேற்று அறிக்கை விட்டேன்.
இப்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தில்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.
அண்மையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து, இலங்கைக்கு மின்சாரம் வழங்கல், ரயில் பாதை அமைத்தல் போன்றவை தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.
இதனால் இலங்கையில் பொருளாதாரம்தான் வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனி ஈழம் அமைவதற்கு, ஐ.நா. மன்றம் மூலம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது, இப்போது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இப்படி வாக்களிக்க வைத்தால் தமிழர்களின் ஒற்றுமை புலப்படும். உரிய அதிகாரத்துடன் கூடிய தனி ஈழம் அமைவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றார் வைகோ

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு, உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும். அதற்கு ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் --நெடுமாறன் வேண்டுகோள்!

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக வாழும் கறுப்பின மக்களுக்கும், இந்தியர்களுக்கும் அதனால் பாதகம் விளையும் என்று யாரும் வாதாடவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகள் சில இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டன. ஆனாலும், பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவு நடவடிக்கையின் விளைவாக தென்னாப்பிரிக்க அரசு இறுதியில் பணிய நேர்ந்தது.
எனவே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்!!

ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம்

குழந்தைத் தொழிலாளர்கள் மூலமாக மட்டுமே நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது! குழந்தைகள் உரிமை நல அமைப்பான "பச்பன் பச்சாவ்' வெளியிட்ட அறிக்கை பல ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்களைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு வெளியீடான "காபிடல் கரப்ஷன்: சைல்ட் லேபர் இண்டியா' இத்தகவல்களைக் கொண்டிருக்கிறது. வயது வந்த தொழிலாளர்களுக்கு மாற்றாக, குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைக் கணக்கிட்டு, அதனால் முறைகேடாக ஏற்படும் வருவாய் ஆதாயம் கறுப்புப் பணமாகிறது என்பதே, இத்தகவலில் உள்ள கருத்தாகும்.இந்தியா முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் ஒருநாளைய வருவாய் மற்றும் பணி நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வில் கணக்கிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்தது.
இவர்களுக்கு, சராசரியாக 15 ரூபாய் ஒரு நாளைய சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில், இவர்களுக்கு 200 பணி நாட்கள் என தெரிகிறது. பல இடங்களில், மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கில், வயதானவர்களுக்கு பதிலாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மலிவான சம்பளத்திற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதும் ஒரு காரணம்.வயதான நபர்களுக்கு ஒரு நாள் குறைந்தபட்ச சம்பளமாக, 115 ரூபாய் வழங்கப்பட வேண்டும். சம்பளம் முறையாக வழங்காவிட்டால், வயதான நபர்கள் சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவர்.
அதுவே, குழந்தைத் தொழிலாளர் எனில், சம்பளத்தை சிறிது சிறிதாக வழங்கினால் போதுமானது. கூடுதல் பணி சுமையும் சுமத்தப்படுகிறது. இவர்களால், சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாது என்பது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இப்படியாக, ஆறு கோடி வயதானவர்களுக்கு பதில், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் சேர்ப்பதால், சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் மிச்சமாகிறது. இதற்கு வரி ஏதும் செலுத்தப்படுவதில்லை. இதுபற்றி, அரசிடம் முறையான கணக்கு விவரங்களும் சமர்ப்பிக்கப்படாது.இப்படியாக, குழந்தைத் தொழிலாளர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கறுப்புப் பணம் பல இடங்களில், அவரவர் துறைகளின் வசதிக்கேற்ப முதலீடு செய்யப்படுகிறது. ஆயிரம் சட்டம் இருந்தென்ன? வளைப்பவர் கையில் வசமாகப் பதியும் அவை இருந்தும் பயனென்ன?