13.6.11

ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம்

குழந்தைத் தொழிலாளர்கள் மூலமாக மட்டுமே நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது! குழந்தைகள் உரிமை நல அமைப்பான "பச்பன் பச்சாவ்' வெளியிட்ட அறிக்கை பல ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்களைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு வெளியீடான "காபிடல் கரப்ஷன்: சைல்ட் லேபர் இண்டியா' இத்தகவல்களைக் கொண்டிருக்கிறது. வயது வந்த தொழிலாளர்களுக்கு மாற்றாக, குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைக் கணக்கிட்டு, அதனால் முறைகேடாக ஏற்படும் வருவாய் ஆதாயம் கறுப்புப் பணமாகிறது என்பதே, இத்தகவலில் உள்ள கருத்தாகும்.இந்தியா முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் ஒருநாளைய வருவாய் மற்றும் பணி நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வில் கணக்கிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்தது.
இவர்களுக்கு, சராசரியாக 15 ரூபாய் ஒரு நாளைய சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில், இவர்களுக்கு 200 பணி நாட்கள் என தெரிகிறது. பல இடங்களில், மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கில், வயதானவர்களுக்கு பதிலாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மலிவான சம்பளத்திற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதும் ஒரு காரணம்.வயதான நபர்களுக்கு ஒரு நாள் குறைந்தபட்ச சம்பளமாக, 115 ரூபாய் வழங்கப்பட வேண்டும். சம்பளம் முறையாக வழங்காவிட்டால், வயதான நபர்கள் சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவர்.
அதுவே, குழந்தைத் தொழிலாளர் எனில், சம்பளத்தை சிறிது சிறிதாக வழங்கினால் போதுமானது. கூடுதல் பணி சுமையும் சுமத்தப்படுகிறது. இவர்களால், சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாது என்பது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இப்படியாக, ஆறு கோடி வயதானவர்களுக்கு பதில், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் சேர்ப்பதால், சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் மிச்சமாகிறது. இதற்கு வரி ஏதும் செலுத்தப்படுவதில்லை. இதுபற்றி, அரசிடம் முறையான கணக்கு விவரங்களும் சமர்ப்பிக்கப்படாது.இப்படியாக, குழந்தைத் தொழிலாளர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கறுப்புப் பணம் பல இடங்களில், அவரவர் துறைகளின் வசதிக்கேற்ப முதலீடு செய்யப்படுகிறது. ஆயிரம் சட்டம் இருந்தென்ன? வளைப்பவர் கையில் வசமாகப் பதியும் அவை இருந்தும் பயனென்ன?