13.6.11

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு, உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும். அதற்கு ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் --நெடுமாறன் வேண்டுகோள்!

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக வாழும் கறுப்பின மக்களுக்கும், இந்தியர்களுக்கும் அதனால் பாதகம் விளையும் என்று யாரும் வாதாடவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகள் சில இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டன. ஆனாலும், பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவு நடவடிக்கையின் விளைவாக தென்னாப்பிரிக்க அரசு இறுதியில் பணிய நேர்ந்தது.
எனவே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்!!