13.6.11

ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா? சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா? - நாளை உச்ச நீதிமன்றத்தில் தெரிந்து விடும்!!

புதுடெல்லி, ஜூன். 13-
அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக புதிய பாடத்திட்டத்தின்படி பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் சமச்சீர் பாட புத்தகம் தரமானதாக இல்லை என்று கூறி இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாகவும் குளறுபடிகள் சரி செய்யப்பட்ட பின்பு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்படும். அதுவரை பழைய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபையிலும் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
சமச்சீர் பாட புத்தகங்களில் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கவோ புதிதாக சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கலாம், அதுவரை சமச்சீர் கல்வித் திட்டம் தொடரலாம் என்றும் கூறினார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தடையை நீக்ககோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கல்வித்துறை செயலாளர் சபிதா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.
புதுடெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். இன்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். மனுவை படித்து பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை (செவ்வாய்க் கிழமை) மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.இதற்கிடையே கடலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சென்னை வக்கீல் சுரேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசின் அப்பீல் மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
-- ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா? இல்லை சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா? என்பது நாளை தெரிந்து விடும்!