பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்!! இதன் மூலமே இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாகை (எ) கோ. அன்பழகன் எழுதிய உயிர்த்தெழு நூல் வெளியீட்டு விழா தியாகராயர் நகரில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகோ நூலை வெளியிட, வளரும் அறிவியில் பத்திரிகையின் ஆசிரியரும், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சிவகுமார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை இயக்குநர் புகழேந்தி பெற்றுக்கொண்டார். விழாவில் வைகோ பேசத் தொடங்கியதும் மழை தூற ஆரம்பித்துவிட்டது. தூறலில் நனைந்தபடியே அவர் பேசினார்.
அவர் பேசிய விவரம்:
ராஜபட்சவை போர்க்குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் போர்க்குற்றவாளி இல்லை. இனக் கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கும் உண்டு. அதனுடன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்களுக்கும் உண்டு. இந்திரா காந்தி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர். ஆனால் சோனியா காந்தி அப்படிப்பட்டவராக இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, விமானப் பாதைகள் அமைத்துக் கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ராஜபட்சவைச் சந்தித்து தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வலியுறுத்தி பேசியதாகச் சொல்லப்படுகிறது. ராஜபட்ச ஒரு நாளும் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். சிவசங்கர மேனனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
யார் சென்றாலும் ராஜபட்சவிடமிருந்து தமிழர்களுக்கு உரிய அதிகாரத்தை எதிர்பார்க்க முடியாது. சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்சவை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அதை வரவேற்று அறிக்கை விட்டேன்.
இப்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தில்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.
அண்மையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து, இலங்கைக்கு மின்சாரம் வழங்கல், ரயில் பாதை அமைத்தல் போன்றவை தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.
இதனால் இலங்கையில் பொருளாதாரம்தான் வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனி ஈழம் அமைவதற்கு, ஐ.நா. மன்றம் மூலம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது, இப்போது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இப்படி வாக்களிக்க வைத்தால் தமிழர்களின் ஒற்றுமை புலப்படும். உரிய அதிகாரத்துடன் கூடிய தனி ஈழம் அமைவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றார் வைகோ
© Copyright 2009, THARASU Group. All rights reserved. Designed by VIR Software Solutions.