13.6.11

ஜெயலலிதா டெல்லி சென்றார்!!

சென்னை, ஜூன்.13-

ஆட்சி பொறுப்பேற்றபின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக டெல்லி சென்றார். பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவரை வீட்டு வாசலில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் வழியனுப்பி வைத்தனர்.
விமான நிலையம் வரை அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 12.45 மணிக்கு அவர் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயலலிதா டெல்லி சென்றதும் அங்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், டெல்லி மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலாளர் ஷீலாபிரியா, மற்றும் அரசு துறை செயலாளர்களும் சென்றனர்.
விமான நிலைய வரவேற்புக்குப்பின் ஜெயலலிதா டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அங்கு அவரை இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்கள்.
மத்திய வேளாண்மைத் துறை மந்திரி சரத்பவார் உள்ளிட்ட சில மத்திய மந்திரிகளும், டெல்லி தலைவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், ஏழைகளுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கவும், தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேச்சு நடத்துகிறார்.
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றியும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வற்புறுத்துவார்.
பிரதமரை சந்தித்தபின் மதியம் 12 மணிக்கு டெல்லி பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேட்டி அளிக்கிறார். நாளை மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்