13.6.11

ரிஷிவந்தியம் தொகுதியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் போது இத் தொகுதியில் போட்டியிட எம்.ஜெயந்தி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு முறைப்படி நிரப்பப்படவில்லை என்று கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார்.
இந்நிலையில் ஜெயந்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார். ஆனால் அது பற்றி என்னிடம் அவர் கருத்து எதுவும் கேட்க வில்லை. எனக்காக முன்மொழிந்த தொகுதி வாக்காளர்கள் பெயர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள கையெழுத்து ஆகியவை குறிப்பிடப்படவில்லை என்று கூறி தேர்தல் அதிகாரி எனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டார். இது சட்ட விரோதமானது.
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜின் ஆதரவாளர்கள் எனது கணவரை தாக்கி கத்தியால் குத்தி விட்டு வேட்பு மனுவை பறித்து சென்று விட்டனர். இதனால் தெளிவான விவரங்களை என்னால் உடனடியாக தெரிவிக்க முடியவில்லை. எனவே ரிஷிவந்தியம் தொகுதியில் நடந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. லாசரின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் இந்த தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார்.