25.7.11

ராஜா கைய வச்சா ராங்கா போகுதே...
இலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர்!!


கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவுப் பேருரையில் உரையாற்றிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது உரையின் இறுதிக்கட்டத்தின்போது கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றியதாக அந்த நாட்டின் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா, உரையின் இறுதிப் பகுதியில் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற விடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்று அவர் கூறினார். இதைக்கூறும்போது கண் கலங்கிய முன்னாள் அதிபர் சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.