2.8.11

ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது!! தி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.  
ரங்கநாதன் மீது கடந்த 2009-ம் ஆண்டு நில அபகரிப்பு புகார் எழுந்தது. முகப்பேர் அருகே உள்ள நொளம்பூரில் போலீஸ் நிலையம் அருகே முகப்பேர் ஏரிக்கரை திட்டத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அபரிக்கப்பட்ட அந்த இடத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். 120 குடும்பத்தினரும் “பட்டா” வைத்துள்ளனர். முறையான வரியும் செலுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 2009-ல் ஒருநாள் அண்ணாமலை அவென்யூ குடியிருப்புப் பகுதிக்கு ப.ரங்கநாதனும், அவரது ஆதரவாளர்களும் வந்தனர். இந்த 20 ஏக்கர் நிலம் அருமை நாயகம் என்பவருக்கும் அவரது 4 மகன்களுக்கும் சொந்தமானது. எனவே நீங்கள் இங்கு இருக்க முடியாது. உடனே காலி செய்யுங்கள் என்று ரங்கநாதன் கூறினார்.
இதை 120 குடும்பத்தினரும் ஏற்கவில்லை. காலி செய்ய முடியாது என்று கூறினார்கள். இதனால் ரங்கநாதன் ஆதரவாளர்களுக்கும், அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து 120 குடும்பத்தினரையும் அழைத்து பேசிய ரங்கநாதன், இந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பாக அருமைநாயகம் எனக்கு பவர் கொடுத்துள்ளார். எனவே வீட்டை காலி செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நில மதிப்பில் 25 சதவீத பணத்தை தந்து விடுகிறேன் என்றார். இதையும் அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்கவில்லை. 
இதைத் தொடர்ந்து ப.ரங்கநாதன் கடுமையாக மிரட்டி, அச்சுறுத்தி 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டதாக தெரிகிறது. பிறகு அந்த இடத்தில் ரங்கநாதனின் ஆட்கள் குடிசை அமைத்தனர்.
இதற்கிடையே வீடுகளையும், நிலத்தையும் இழந்த 120 பேரும் மீண்டும் அங்கு வந்து விடக்கூடாது என ரங்கநாதன் நினைத்தார். உடனடியாக ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர், முகப்பேர் ஏரித் திட்டம் பகுதியில் உள்ள நொளம்பூரில் இருக்கும் 20 ஏக்கர் நிலம் அருமை நாயகத்தின் 4 மகன்களுக்கு சொந்தமானது. அதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாதுÓ என்று கூறி இருந்தார். அந்த மனுவோடு அவர் நிலத்துக்கான ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களில் ஒருவரான வக்கீல் செல்வமணி என்பவர் நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அவர் தனது மனுவில், வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் வெங்கடேஷ் என்ற கவுரிசங்கர் மற்றும் தன்சிங், ரத்தினாபதி, ஜுலியட் என்ற ஞானவதி ஆல்பர்ட், ஜெயபால் ஆகிய 7 பேரும் போலி ஆவணம் தயார் செய்து தங்களது நிலத்தை அபகரித்து கொண்டனர் என்றும், அந்த இடத்தில் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் கவுரி சங்கரிடம் விசாரணை நடத்தினார்.  
அதன் பிறகு சென்னை ஐகோர்ட்டில் ரங்கநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. தாசில்தாரும், அந்த நிலப் பத்திரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று சான்றளித்தார்.
இதையடுத்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தனர். இதன் மூலம் ரங்கநாதனும் அவரது ஆதரவாளர்களும் முகப்பேர் ஏரித் திட்டத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை அபகரித்து இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது.
அபகரிக்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாகும். அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு உரிமையாளர்கள் அந்த நிலத்தை திரும்ப பெற எடுத்த முயற்சிகளுக்கு முன்பு வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியின் போது அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. குடியிருப்பு சங்கத்தினர் நடத்திய போராட்டத்துக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் மீண்டும் நிலத்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் சார்பில் வக்கீல் செல்வமணி கொடுத்த புகாரின் பேரில் இன்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பெரவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியில் வசித்து வரும் அவரது உதவியாளர் கவுரிசங்கரையும் போலீசார் பிடித்து சென்றனர்.  
அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரங்கநாதன் மற்றும் 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 147 (கூட்டமாக செல்லுதல்), 148 (ஆயுதங்களுடன் செல்லுதல்), 120 (சதி திட்டம் தீட்டுதல்), 420 (மோசடி செய்தல்), 506(2) (கொலை மிரட்டல்), 387 (ஆக்கிரமித்தல்), 427 (அச்சுறுத்தி வீடுகளை காலி செய்ய வைத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு ரங்கநாதன், கவுரிசங்கர் இருவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அம்பத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரங்கநாதனும், கவுரிசங்கரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ரங்கநாதனுடன் சேர்ந்து நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தன்சிங், ரத்தினாவதி, ஜுலியட் என்ற ஞானவதி, ஆல்பர்ட் மற்றும் ஜெயபால் ஆகிய 5 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்று மாலைக்குள் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விடுவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.