2.8.11

நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது!! சிங்கமுத்துவிடம் விசாரணை!!


காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
 
2006-ம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. இந்த சொத்தை ரூ.20 லட்சத்துக்கு நான் ஏலத்தில் எடுத்தேன். தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்தேன்.
இந்த நிலத்தை தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே. ராமச்சந்திரன் என்பவர் தொழில் முதலீட்டு நிறுவனத்தில் அடமானமாக வைத்து கடன் பெற்று இருந்ததாக தெரிய வந்தது. கடனை அவர் திருப்பி செலுத்தாததால் நிலம் ஏலத்துக்கு வந்தது. அதை நான் எடுத்தேன். ராமச்சந்திரன் இறந்த பிறகு எனது நிலத்தை அபகரிக்க போலி மற்றும் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து உள்ளனர். ராமச்சந்திரன் மகன் பிரபு போலி ஆவணம் மூலம் நடிகர் சிங்கமுத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவதாக அறிந்து சென்றேன். அப்போது வடிவேல் இந்த சொத்தை வாங்கி தனது மனைவி விசாலாட்சிக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது, தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு இருக்கிறது என்று சொல்லி மிரட்டினார்கள். எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும்.  இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். 
இதுபற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:-  
வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். 
பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார். வடிவேலுவிடம் விசாரணை நடத்த போலீசார் தேடுகிறார்கள். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பழனியப்பன் ஏலத்தில் எடுத்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வடிவேலு மீதான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்ற நிலமோசடி பிரிவுக்கு கமிஷனர் ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்துள்ளார். 
நிலத்தை அபகரித்தது உண்மை என்று தெரிய வந்தால் வடிவேலுவும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்