2.8.11

காமன்வெல்த் விளையாட்டு குழு தலைவர் பதவிக்கு சுரேஷ் கல்மாடியை நியமித்தது தவறு!- தணிக்கை அறிக்கையால் காங்கிரஸ் கலக்கம்!!


டெல்லியில் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக காமன் வெல்த் ஒருங்கிணைப்பு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி (67), கைது செய்யப்பட்டு, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளுக்கு செய்யப்பட்ட செலவுகளை ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் பிரதமர் அலுவலகத்தை குறை கூறி இருப்பது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி செலவுகளை தீர்மானம் செய்யும் முக்கிய அமைப்பான ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராக சுரேஷ் கல்மாடியை தேர்வு செய்யும் முன்பு, இந்த பதவிக்கு இவர் தகுதியானவர் தானா? என்று பிரதமர் அலுவலகம் ஆலோசிக்கவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம், காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராக அரசு பிரதி நிதி ஒருவர் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி அமைச் சர்கள் குழு கூடியது. இதில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியை நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழுவில் தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. 
ஆனால் விரைவிலேயே இந்த முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். இந்த முடிவுக்கு முன்னாள் விளையாட்டு துறை மந்திரி சுனில்தத் எதிர்ப்பு தெரி வித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த எதிர்ப்பை பிரதமர் அலுவலகம் கண்டு கொள்ள வில்லை. இந்த விசயத்தில் பிரதமர் அலுவலகம் தவறு செய்துள்ளது. கல்மாடி தலைமையிலான ஒருங் கிணைப்பு குழுவால் ரூ.2000 கோடி அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தரம் இல்லை. தகுதியில்லாத நிறுவனங் களுக்கு வேலை ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய தணிக்கை அறிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், என மத்திய அரசு பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த வேளையில், மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் பிரதமர் அலுவலகத்துக்கு எதிராக குற்றம்சாட்டி இருப்பது மத்திய அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன