15.8.11

இந்தியாவுக்கு இலங்கை சவால்!!

இந்தியாவுக்கு இலங்கை சவால் விடும் வகையில் நடந்து வருவது தொடர் நிகழ்வாகி விட்டது! மன்மோகன் சிங்கின் மக்குத் தனத்தைப் புரிந்து கொண்டுள்ளதால் இப்போது மறுபடியும் புதிய சவால் விட்டுள்ளது இலங்கை!  
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்களின் வலைகளை, இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தி கடலில் மூழ்கடித்ததுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட மீன்களை கொள்ளையடித்துச் சென்றதாக, கரை திரும்பிய மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.


இது குறித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:
ராமேசுவரத்தில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி சுமார் 600 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இப்படகுகள் வழக்கம்போல் மீன்வளம் நிறைந்த இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போது, அங்கு 3 போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடித்தனர். இதனால், பல விசைப்படகுகள் ராமேசுவரம் கரை நோக்கித் திரும்பின.  இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மோட்சம், இன்பம் உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கைக் கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர்.  அப்படகில் இருந்த இறால் உள்ளிட்ட மீன்களைப் பறித்துக் கொண்டு, மீன்பிடி வலைகளையும் அரிவாளால் வெட்டி கடலில் மூழ்கடிக்கச் செய்தனர்.  மேலும், 10-க்கும் மேற்பட்ட படகுகளைப் பிடித்து விலையுயர்ந்த இறால் மீன்களைப் பறித்துக் கொண்டு மீனவர்களைத் தாக்கினர். ஆனால், மீனவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.  இதையடுத்து, தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் ராமேசுவரம் கரை நோக்கி மீனவர்கள் திரும்பினர்.  

இதனால், ரூ. 3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.