29.11.11

ஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்!


டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு(FICCI ), மாநாடு ஒன்றை சென்னையில் டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் நடத்துகிறது! FICCI அங்கமான, ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை கூட்டுக்குழுவின் (MEBC)தலைவரும் பிரபல நடிகருமான கமல் ஹாசன் இந்த தகவலை தெரிவித்தார்.

"தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மெருகேற்றிக் கொள்வதன் மூலம் இந்தத் தொழில் மேலும் சிறப்புடன் திகழ முடியும். அது பற்றிய விவாதங்களுக்காகத்தான் இந்த மாநாடு. சினிமாத் துறை வளர்ச்சியடைய கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயமாக குறைக்க வேண்டும் என்பதுதான் என் பதில். வங்கிகள் திரைப்படம் தயாரிக்க கடன் வழங்க முன்வராததால், சட்ட விரோதமான வழிகளில் பெறப்படும் பணமும் திரைப்படத் துறையில் புழங்குகிறது. திரைப்படங்களுக்கான நிதி பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும், திரைப்படத் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே உடனடி வரவேற்பு இருக்காது. அந்தக் காலத்தில் வாசன் 13 பிரின்ட் போட்ட போது எதற்கு இத்தனை ? என்று எதிர்த்தவர்கள் உண்டு! தியேட்டர்களில் டால்பி சிஸ்டத்தை அறிமுகப் படுத்த வந்தவரிடம் நீங்கள் எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கெட்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் அதைத் தேடி ஓடினார்கள்!! புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே?" என்று நடிகர் கமல்ஹாசன் சொன்னார்.

--அவர் சென்னையில் நிருபர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது FICCI தலைவர் முராரரி IAS (Rtd ), லீனா ஜைசனி உடனிருந்தனர். ஜோர்டான் நாட்டில் விஸ்வரூபம் படப் பிடிப்பிலிருந்த கமல் ஹாசன் இந்த மாநாட்டுக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அங்கிருந்து பறந்து வந்தார்! ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கூட்டுக்குழுவின் முதல் மாநாடு 2009 -ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் நடந்தது. மூன்றாவது மாநாடு மறுபடியும் சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்சார் போர்டு தலைவர், ட்ராய் தலைவர், நீதியரசர்கள் மற்றும் திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.