1.12.11

ஸ்டாலின், உதயநிதி மீது பங்களா அபகரிப்பு மோசடி வழக்கு!!

உதயநிதிசென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த குமார் சேஷாத்ரி கடந்த திங்கள்கிழமையன்று சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதியிடம் அளித்த புகார் மனுவின் விவரம் கீழே :
"எனது குடும்பத்தினருக்கு தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் 8 கிரவுண்ட் நிலம் இருந்தது. பாகப்பிரிவினையின்போது எனக்கு இரண்டரை கிரவுண்ட் நிலம் கிடைத்தது. அந்த நிலத்தில் நான் வீடு கட்டி வாடகைக்கு விட்டேன். அதேவேளையில் எனது சகோதரர்கள் 6 கிரவுண்ட் நிலத்தை வங்கியில் அடமானமாக வைத்துக் கடன் பெற்றனர்.
அவர்கள் வங்கிக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தாததால் அந்த இடம் ஏலத்துக்கு வந்தது. அந்த நிலத்தை ஏலம் எடுத்து மு.க. ஸ்டாலின் குடியேறினார். இந்நிலையில் அவர், அருகில் இருந்த எனது இரண்டரை கிரவுண்ட் இடத்தையும் கேட்டார். ஆனால் அந்த இடத்தை நான் விற்கப்போவதில்லை எனத் தெரிவித்தேன்.இதனால் அவர், அங்கு குடியிருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்தார். கடைசியாக குடியிருந்த தேவி பழனிச்சாமி என்பவரையும் கட்டாயப்படுத்தி காலி செய்ய வைத்தார். பின்னர் ஹோட்டல் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆகியோர் அந்த இடத்தை விற்குமாறு என்னைக் கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த இடத்தை விற்க முடியாது என
மீண்டும் தெரிவித்தேன். ஒரு கட்டத்தில் நிலத்தை விற்குமாறு அவர்கள் மிரட்டத் தொடங்கினர். கொடுக்கவில்லை என்றால் எனக்கு பிரச்னைகள் வரும் என்று மிரட்டினர். அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16-7-2010 அன்று புகார் மனு கொடுத்தேன்.  ஆனால், போலீஸôர் புகார் பெற மறுத்துவிட்டனர்.
     இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் பத்திரப் பதிவாளரை எனது வீட்டுக்கு அழைத்து வந்து பி. வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் அந்த இடத்தை வலுக்கட்டாயமாக என்னை விற்க வைத்து பதிவு செய்தனர். இதற்காக அவர்கள் ரூ. 5.50 கோடி வங்கி வரைவோலை (டி.டி.) கொடுத்தார்கள்.
உதயநிதி தன் தந்தை ஸ்டாலினுக்கு கடந்த 27 -11 -2011 அன்று
ரெட்டிக்கு சொந்தமான ஹோட்டலில் பிறந்த நாள் கேக் ஊட்டுகிறார்!
சில நாள்கள் கழித்து எனது வீட்டுக்கு வந்த சீனிவாசன், ரூ. 1.15 கோடியைப் பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவர் கூறினார். சொன்னால், மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திடம் கூறி, வருமான வரித்துறை மூலம் தொந்தரவு கொடுப்போம் என்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். கொடுத்த பணத்தில் ரூ. 15 லட்சத்தை தனது கமிஷன் என எடுத்துச் சென்றார்.

    தற்போது இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை இதில் குடியிருந்து வருகிறார். எனவே என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், கறுப்புப் பணத்தை எனக்கு வலுக்கட்டாயமாக வழங்கி, கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

     மனுவை விசாரித்த போலீசார், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவல் பரவியதும், தமிழகம் முழுதும் பரபரப்பு நிலவுகிறது. இந்தத் தகவல் ராமநாதபுரம் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு காதில் ரகசியமாக சொல்லப் பட்டதும் அவருடைய முகம் மாறியது. இதை பற்றி அவர் விளக்கிச் சொல்லாமல் "தைரியம் இருந்தால் வழக்கு போட்டுப் பார்க்கட்டும் " என்று கூறினார். கூட்டத்தில் இருந்த தொண்டர்களுக்கு விவரம் எதுவும் தெரியாததால் குழம்பிப் போயினர். ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி பரவி திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
       நாளை மறு நாள் கனிமொழி சென்னை வரவுள்ள நிலையில், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் தயாராகிவரும் நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது!