11.4.11

நல்லா இருக்குய்யா சட்டம் ஒழுங்கு !! கொளத்தூர் அலங்கோலம்!!


 தராசு இணைய தளத்தின் வீடியோ கேமராவைப் பறித்து ஓடிய குண்டர்கள்!!

நமது இணையதளத்திற்காக தேர்தல் சிறப்பு வீடியோ காட்சிகளைப் படம் பிடிப்பதற்கென்றே சென்னை நகரில் ஆறு காமிராக்களுடன் ஒளிப்பதிவாளர்கள் வலம் ந்து கொண்டிருந்தனர்.  இன்று 11.04.2011 மாலை 5 மணி 30 நிமிடம் வரை நமக்கு எவ்விதத் தொல்லையும் இல்லை! அடுத்த சில நிமிடங்களில் திடீரென்று புயல் வேகத்தில் வந்த இருவர்,  கொளத்தூரில் திமுக பணிமனையைப் படம் பிடித்துக் கொண்டிருந்த காமிராமேன் ராஜாராமை கடுமையாகத் தாக்கிவிட்டு காமிராவைப் பறித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் பறந்து விட்டனர் .அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவியுடன் அந்த வாகனத்தை பிடிக்க முயன்ற ராஜாராமுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது..சென்னை நகரின் கூடுதல் ஆணையர் ஷகில் அக்தரிடம் தொலைபேசியில் விபரத்தை சொல்லிவிட்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம்! பறிக்கப் பட்ட காமிராவின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்!!  நாளை முதல் கொளத்தூர் தொகுதிக்கென்றே பிரத்யேகமாக பத்து ஒளிப்பதிவாளர்களை பணித்துள்ளோம்!! எத்தனை காமிராக்களை பறிக்கிறார்கள் என்றுதான் பார்த்து விடுவோமே!தில்லுமுல்லு, அவதூறு பிரச்சாரம்!

அதிமுக வேட்பாளர் தோற்கிறார்!


கொளத்தூரில் அராஜகம் தொடர்கிறது! ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று நாம் எழுதியதற்குப் பிறகு திமுக வட்டாரம் முன்பைவிடவும் சுறுசுறுப்பாக பண விநியோகத்தில் இறங்கி விட்டனர். இரவு 9 மணிக்குப்  பிறகு மின்தடை ஏற்படுத்தப் படுகிறது. அந்த சமயத்தில் உடன்பிறப்புகள் எந்த வித எதிர்ப்புமின்றி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படியான வேண்டுகோளின் பேரில் பணத்தை வீடு வீடாக தருகின்றனர்! முதல் நாள்  500 ரூபாயாக இருந்த இந்த பட்டுவாடா மறு நாள் முதல் 1000 ரூபாயாக மாறிவிட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50000 முதல் ஒரு லட்சம் வரை விநியோகிக்கச் சொல்லி மேலே இருந்து பணம் பட்டு வாடா செய்யப் பட்டதாம்.. அதில் பாதிக்கும் மேலாக உடன் பிறப்புகளே உரிமையாக "கட்டிங்" கொண்டு விட்டனராம்! இதற்கிடையே சைதை துரைசாமியின் கிளீன் இமேஜை பாதிக்கும் வண்ணம் திட்டமிட்டு சன் டிவி, தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் கடந்த 8,9 தேதிகளில் ஒரு செய்தி பரப்பப் பட்டது.  இந்தச் செய்தி திமுகவினரால் கொளத்தூர் தொகுதி  முழுக்க சிடி, பத்திரிகைச் செய்தியின் நகல், துண்டறிக்கை மூலமாக விநியோகிக்கப் பட்டது.  
தினகரன் செய்தி! 
இது அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்! 25000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்று முன்பு எழுதியிருந்தோம். நடந்த தில்லுமுல்லு, அவதூறு பிரச்சாரம் ஆகியவற்றால் சைதை துரைசாமி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை! தினகரனில்  வந்த அந்த செய்தி இங்கே இணைக்கப் பட்டுள்ளது! 


கொளத்தூருக்குப்  பொறுப்பான அதிகாரிகள் தேர்தல் கமிசனுக்கு கட்டுப்படவேயில்லை. தவிரவும் அவர்கள் தேர்தல் கமிசனுக்கு கொடுக்கும் தகவல்களும் சரியானதாக இருப்பதில்லை. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கொளத்தூர் தொகுதயின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

உலக மகா ஊழல் ரூபாய் நோட்டு

திருச்செந்தூர்,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் பி.ஆர். மனோகரன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் திமுக வினர் நலத் திட்டங்களை நிறைவேற்றியதாகக் கூறி வாக்குசேகரித்து வருகின்றனர்.  அதிமுக வினர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை உலக மகா ஊழல் என ரூபாய் நோட்டுபோல துண்டுப்பிரசுரமாக அச்சடித்து அதை வீடுவீடாக விநியோகித்து வருகின்றனர்.  இதில், முதல் பக்கத்தில் திமுக. பாங்க் ஆப் இந்தியா, ரூ. 1.76 லட்சம் கோடி என குறிக்கப் பட்டுள்ளது. கீழே ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடியை குறிக்கும் வகையில் எழுத்தால் எழுதப்பட்டுள்ளது.   இடதுபுறம் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி படங்களும், வலதுபுறத்தில் ராசா, கனிமொழி படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.   பின்பக்கத்தில் தமிழக மக்களின் அவலநிலை குறித்தும், கருணாநிதியின் குடும்ப அரசியல் குறித்தும் கருத்துப்படம் வரையப்பட்டு, இந்த அவலநிலையை மாற்ற ஜெயலலிதாவின் ஆட்சி மலர திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிப்பீர் என அச்சிடப்பட்டுள்ளது.

நிலத்தை அபகரித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதற்கு உடந்தையாக செயல்பட்ட முதல்வரும் குற்றவாளிகள். தேர்தலில் மொத்த திமுக வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் -- சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் ஆவேசம்!!

சேலம், ஏப்.11 : "எங்களை விரட்டியடித்து, நிலத்தை அபகரித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதற்கு உடந்தையாக செயல்பட்ட முதல்வரும் தான் குற்றவாளிகள். தேர்தலில் மொத்த தி.மு.க வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும்' என, சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் கூறினர். சேலத்தில் அவர்கள் அளித்த பேட்டி: நாங்கள் அனைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தாலும், அவரது ரவுடி கும்பலாலும் வீடுகளையும், நிலத்தையும் இழந்த 30 குடும்பத்தினர். அங்கம்மாள் காலனி பிரச்னையில், "எனக்கும், என் ஆட்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை' என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். எங்கள் நிலப்பிரச்னையில், 2008 ஜூன் 27ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நிலத்தை ஆக்கிரமித்தவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. ஆனால், அமைச்சர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சருக்கு ஆதரவாக முதல்வரும் செயல்பட்டுள்ளார். அவர் தான் முதல் குற்றவாளி. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அனைத்து அமைச்சர்கள் மீதும் ஆக்கிரமிப்பு புகார்கள் உள்ளன. வரும் தேர்தலில் ஒட்டுமொத்த தி.மு.க.,வும் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்கள் விரோத கட்சியாக அது செயல்படுகிறது. நாங்கள் 100, 500 ரூபாய் என, வசூல் செய்து, "சிடி' தயார் செய்தோம். அ.தி.மு.க.,வினர் யாரும் அதை தயாரிக்கவில்லை. "வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, அமைச்சர் கூறுகிறார். ஆனால், வீரபாண்டி ஆறுமுகத்தை தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். சங்ககிரி தொகுதிக்கு சென்று எங்களது நிலை குறித்த நோட்டீஸ், "சிடி'யை விநியோகித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேமுதிக கிளை செயலாளர் அடித்துக் கொலை!!

தர்மபுரி,ஏப்ரல் 11 : தேமுதிக கிளை செயலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம்  பென்னாகரம் பர்வனதஅல்லி தே.மு.தி.க கிளைச் செயலார் அசோகன். இவரது வீட்டில் அதிமுக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சின்னம் வரையப்பட்டிருந்தது. எதிர் வீட்டில் இருக்கும் சேகர் தனது வீட்டு சுவரில் திமுக சின்னம் வரைந்து வைத்திருந்தார்!! தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் சுவரில் இருக்கும் கட்சி சின்னங்களை அழிக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து தேமுதிக பிரமுகர் அசோகன் தன் வீட்டு சுவரில் இருந்த கட்சி சின்னத்தை அழித்தார். ஆனால் திமுக பிரமுகர் சின்னத்தை அழிக்கவில்லை. இது குறித்து அசோகன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வந்து சின்னத்தை உடனடியாக அழிக்குமாறு சேகரிடம் வலியுறுத்தினர். தங்கள் கட்சி வேட்பாளர் இன்பசேகரன் வந்து சென்ற உடனே சுவர் சின்னத்தை அழித்து விடுவதாக கூறினார் சேகர். இது தொடர்பாக நேற்றிரவு அசோகனுக்கும், சேகருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சேகர் உட்பட 10 பேர் சேர்ந்து அசோகனை கட்டையால் தாக்கினர். படுகாயமடைந்த அசோகன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ‌பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்ட போது வழியி‌லேயே இறந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்துள்ளனர்.