15.7.11

பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!!

காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார்.

"பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்'' என்றார் காமராஜர் .  

தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர்,  சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால் விருதுநகர் அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது . 
காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். என்.ஆர். தியாகராஜன்,எம்.எல்.ஏ.,  முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார். 
யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார். 
எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார்.  "பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார் காமராஜர். 

கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது. 
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம்.
நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். 
பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார். 


வீட்டின் முன் அறையில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் காமராஜர். அப்போது இளைஞர் ஒருவர், அவர் உள்ளே வந்தார்.  கனகவேல் என்ற அந்த இளைஞர் காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்..!
" எப்படியிருக்க.."' என காமராஜர் கேட்டதும்   "நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் கனகவேல். தன் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு நீட்டினார்! வாங்கிப் படித்த காமராஜரின் கருத்த முகம் லேசாக சிவந்தது!  அதில் அந்த இளைஞரின் விலாசமாக "மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று எழுதப் பட்டிருந்தது.
"என் பேரை எதுக்கு எழுதினே..." காமராஜரின் குரலில் கடுங்கோபம்!! 
"இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் கனகவேல். உடனே காமராஜர் ஆவேசமாக " இந்தா நல்லக் கேட்டுக்க.... டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கு. அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே. இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது' என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் கனகவேலுக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. அது அந்தக் காலம்...!