21.7.11

நில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு!! கோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு!


சேலம் அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பு உட்பட 

இரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார். 
சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள் காலனியில், 22,263 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாச குப்தா, 1959ல் தானமாக வழங்கினார். அதில், 30 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.
கடந்த 2008 ஜன., 19ம் தேதியன்று, ரவுடிகள் சிலர் அந்த நிலத்தில் குடிசை போட்டு அமர்ந்தனர். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. பிப்ரவரி 8ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து, வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டன. அங்கம்மாள் காலனி மக்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், தானமாகக் கொடுத்த நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் கட்டளையால், நீதிமன்ற உத்தரவும் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகார் கொடுத்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், முன்னாள் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 10 பேர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் முகாமிட்டுள்ளார்.
போலீசார் தன்னை கைது செய்யும் முன், முன் ஜாமின் பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தலைமையில், 23 குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை வழங்கினர். இந்த மனுவில், தங்களது நிலத்தை அபகரித்துள்ள 13 பேரில், 10 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தனர்.
கமிஷனர் சொக்கலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, அங்கம்மாள் காலனி மக்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அத்துடன், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 10 பேரை கைது செய்வதற்காக, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், 12 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து, உதவி கமிஷனர்கள் மேற்பார்வையிடுவர். விசாரணை நலன் கருதி, குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் முழு விவரத்தையும் தெரிவிக்க இயலாது. போலீஸ் தனிப்படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வோம். இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.
போலீசார் பாரபட்ச நடவடிக்கை : சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா மீது, நிலம் அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், மற்றொரு பிரச்னையில், இதே பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்ஜாமின் கேட்டு மனு : 
வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளேன். தி.மு.க.,வில் முக்கிய தலைவராக உள்ளேன். எனக்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வராக ஜெயலலிதா வரும் போதெல்லாம், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையை அவர் எடுப்பது வழக்கம்.
தி.மு.க.,வினர், அதன் தலைவர்களுக்கு எதிராக நில அபகரிப்பு புகார்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்துவதாகவும் முதல்வர் அறிவித்தார். பொய் வழக்குகளை தொடுப்பதன் மூலம், எதிர்க்கட்சியினரின் குரலை நெரிக்க முடியும் என கருதுகின்றனர்.
சொத்து மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், குறைவான விலைக்கு விற்றவர்கள், முதல்வரின் அறிவிப்பை பார்த்து பொய் புகார்களை அளிக்கின்றனர். அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்ளும் விதமாக, சில ஆண்டுகளாக நடந்த பரிவர்த்தனையில், தி.மு.க.,வினருக்கு எதிராக புகார்களை அளிக்க போலீசார் தூண்டுகின்றனர்.
என் மீதான புகாரில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரை திருப்திபடுத்துவதற்காக, என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கிலும் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார்