2.8.11

கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம்-- பாரதீய ஜனதா அறிவிப்பு!!

நாகை:  தமிழக மீனவர்களை சிங்கள அரசு தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினத்தில் தெரிவித்தார்! 

"இதன் பிறகும் இலங்கை தமிழக மீனவர்களை தாக்கினால் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம். சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். தற்போது மாணவர்களின் காலாண்டு தேர்வு கேள்விக்குறியாகியுள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு பாதிக்கப்படும். 3 மாதம் தமிழக அரசை விமர்சனம் செய்யக்கூடாது என முடிவு செய்துள்ளோம். எனவே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கின்றோம். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின்நிலைபாட்டிற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

காமன்வெல்த் விளையாட்டு குழு தலைவர் பதவிக்கு சுரேஷ் கல்மாடியை நியமித்தது தவறு!- தணிக்கை அறிக்கையால் காங்கிரஸ் கலக்கம்!!


டெல்லியில் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக காமன் வெல்த் ஒருங்கிணைப்பு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி (67), கைது செய்யப்பட்டு, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளுக்கு செய்யப்பட்ட செலவுகளை ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் பிரதமர் அலுவலகத்தை குறை கூறி இருப்பது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி செலவுகளை தீர்மானம் செய்யும் முக்கிய அமைப்பான ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராக சுரேஷ் கல்மாடியை தேர்வு செய்யும் முன்பு, இந்த பதவிக்கு இவர் தகுதியானவர் தானா? என்று பிரதமர் அலுவலகம் ஆலோசிக்கவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம், காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராக அரசு பிரதி நிதி ஒருவர் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி அமைச் சர்கள் குழு கூடியது. இதில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியை நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழுவில் தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. 
ஆனால் விரைவிலேயே இந்த முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். இந்த முடிவுக்கு முன்னாள் விளையாட்டு துறை மந்திரி சுனில்தத் எதிர்ப்பு தெரி வித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த எதிர்ப்பை பிரதமர் அலுவலகம் கண்டு கொள்ள வில்லை. இந்த விசயத்தில் பிரதமர் அலுவலகம் தவறு செய்துள்ளது. கல்மாடி தலைமையிலான ஒருங் கிணைப்பு குழுவால் ரூ.2000 கோடி அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தரம் இல்லை. தகுதியில்லாத நிறுவனங் களுக்கு வேலை ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய தணிக்கை அறிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், என மத்திய அரசு பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த வேளையில், மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் பிரதமர் அலுவலகத்துக்கு எதிராக குற்றம்சாட்டி இருப்பது மத்திய அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சக்சேனா வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்


சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது  சினிமா சம்பந்தப்பட்ட மோசடி புகார்கள் தொடர்பாக சென்னையில் மட்டும் அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் விநியோக உரிமை தொடர்பாக சக்சேனா மீது புகார் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ், சண்முக வேல் ஆகிய இருவரும் சமாதானமாக செல்வதாக கோர்ட்டில் கூறியதால் 2 வழக்குகள் மட்டும் ரத்தானது. மற்ற 3 வழக்குகளும் விசாரணையில் உள்ளன.  
மேலும் மில் அபகரிப்பு வழக்கும் சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் இருவரையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சக்சேனா மீதான வழக்குள் அனைத்தையும் சி.பி.சி.ஐ,.டி., போலீசார் விசாரிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது!! சிங்கமுத்துவிடம் விசாரணை!!


காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
 
2006-ம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. இந்த சொத்தை ரூ.20 லட்சத்துக்கு நான் ஏலத்தில் எடுத்தேன். தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்தேன்.
இந்த நிலத்தை தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே. ராமச்சந்திரன் என்பவர் தொழில் முதலீட்டு நிறுவனத்தில் அடமானமாக வைத்து கடன் பெற்று இருந்ததாக தெரிய வந்தது. கடனை அவர் திருப்பி செலுத்தாததால் நிலம் ஏலத்துக்கு வந்தது. அதை நான் எடுத்தேன். ராமச்சந்திரன் இறந்த பிறகு எனது நிலத்தை அபகரிக்க போலி மற்றும் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து உள்ளனர். ராமச்சந்திரன் மகன் பிரபு போலி ஆவணம் மூலம் நடிகர் சிங்கமுத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவதாக அறிந்து சென்றேன். அப்போது வடிவேல் இந்த சொத்தை வாங்கி தனது மனைவி விசாலாட்சிக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது, தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு இருக்கிறது என்று சொல்லி மிரட்டினார்கள். எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும்.  இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். 
இதுபற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:-  
வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். 
பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார். வடிவேலுவிடம் விசாரணை நடத்த போலீசார் தேடுகிறார்கள். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பழனியப்பன் ஏலத்தில் எடுத்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வடிவேலு மீதான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்ற நிலமோசடி பிரிவுக்கு கமிஷனர் ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்துள்ளார். 
நிலத்தை அபகரித்தது உண்மை என்று தெரிய வந்தால் வடிவேலுவும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்

முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு!


முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்! இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார். எனவேதான் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில் அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தினை முன்மொழிந்து நிறைவேற்றினார். 
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனை சந்தித்த போதும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.  
இதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.  இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது!! தி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.  
ரங்கநாதன் மீது கடந்த 2009-ம் ஆண்டு நில அபகரிப்பு புகார் எழுந்தது. முகப்பேர் அருகே உள்ள நொளம்பூரில் போலீஸ் நிலையம் அருகே முகப்பேர் ஏரிக்கரை திட்டத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அபரிக்கப்பட்ட அந்த இடத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். 120 குடும்பத்தினரும் “பட்டா” வைத்துள்ளனர். முறையான வரியும் செலுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 2009-ல் ஒருநாள் அண்ணாமலை அவென்யூ குடியிருப்புப் பகுதிக்கு ப.ரங்கநாதனும், அவரது ஆதரவாளர்களும் வந்தனர். இந்த 20 ஏக்கர் நிலம் அருமை நாயகம் என்பவருக்கும் அவரது 4 மகன்களுக்கும் சொந்தமானது. எனவே நீங்கள் இங்கு இருக்க முடியாது. உடனே காலி செய்யுங்கள் என்று ரங்கநாதன் கூறினார்.
இதை 120 குடும்பத்தினரும் ஏற்கவில்லை. காலி செய்ய முடியாது என்று கூறினார்கள். இதனால் ரங்கநாதன் ஆதரவாளர்களுக்கும், அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து 120 குடும்பத்தினரையும் அழைத்து பேசிய ரங்கநாதன், இந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பாக அருமைநாயகம் எனக்கு பவர் கொடுத்துள்ளார். எனவே வீட்டை காலி செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நில மதிப்பில் 25 சதவீத பணத்தை தந்து விடுகிறேன் என்றார். இதையும் அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்கவில்லை. 
இதைத் தொடர்ந்து ப.ரங்கநாதன் கடுமையாக மிரட்டி, அச்சுறுத்தி 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டதாக தெரிகிறது. பிறகு அந்த இடத்தில் ரங்கநாதனின் ஆட்கள் குடிசை அமைத்தனர்.
இதற்கிடையே வீடுகளையும், நிலத்தையும் இழந்த 120 பேரும் மீண்டும் அங்கு வந்து விடக்கூடாது என ரங்கநாதன் நினைத்தார். உடனடியாக ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர், முகப்பேர் ஏரித் திட்டம் பகுதியில் உள்ள நொளம்பூரில் இருக்கும் 20 ஏக்கர் நிலம் அருமை நாயகத்தின் 4 மகன்களுக்கு சொந்தமானது. அதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாதுÓ என்று கூறி இருந்தார். அந்த மனுவோடு அவர் நிலத்துக்கான ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களில் ஒருவரான வக்கீல் செல்வமணி என்பவர் நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அவர் தனது மனுவில், வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் வெங்கடேஷ் என்ற கவுரிசங்கர் மற்றும் தன்சிங், ரத்தினாபதி, ஜுலியட் என்ற ஞானவதி ஆல்பர்ட், ஜெயபால் ஆகிய 7 பேரும் போலி ஆவணம் தயார் செய்து தங்களது நிலத்தை அபகரித்து கொண்டனர் என்றும், அந்த இடத்தில் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் கவுரி சங்கரிடம் விசாரணை நடத்தினார்.  
அதன் பிறகு சென்னை ஐகோர்ட்டில் ரங்கநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. தாசில்தாரும், அந்த நிலப் பத்திரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று சான்றளித்தார்.
இதையடுத்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தனர். இதன் மூலம் ரங்கநாதனும் அவரது ஆதரவாளர்களும் முகப்பேர் ஏரித் திட்டத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை அபகரித்து இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது.
அபகரிக்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாகும். அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு உரிமையாளர்கள் அந்த நிலத்தை திரும்ப பெற எடுத்த முயற்சிகளுக்கு முன்பு வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியின் போது அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. குடியிருப்பு சங்கத்தினர் நடத்திய போராட்டத்துக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் மீண்டும் நிலத்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் சார்பில் வக்கீல் செல்வமணி கொடுத்த புகாரின் பேரில் இன்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பெரவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியில் வசித்து வரும் அவரது உதவியாளர் கவுரிசங்கரையும் போலீசார் பிடித்து சென்றனர்.  
அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரங்கநாதன் மற்றும் 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 147 (கூட்டமாக செல்லுதல்), 148 (ஆயுதங்களுடன் செல்லுதல்), 120 (சதி திட்டம் தீட்டுதல்), 420 (மோசடி செய்தல்), 506(2) (கொலை மிரட்டல்), 387 (ஆக்கிரமித்தல்), 427 (அச்சுறுத்தி வீடுகளை காலி செய்ய வைத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு ரங்கநாதன், கவுரிசங்கர் இருவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அம்பத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரங்கநாதனும், கவுரிசங்கரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ரங்கநாதனுடன் சேர்ந்து நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தன்சிங், ரத்தினாவதி, ஜுலியட் என்ற ஞானவதி, ஆல்பர்ட் மற்றும் ஜெயபால் ஆகிய 5 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்று மாலைக்குள் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விடுவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.