5.8.11

டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை --மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம்  10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். 1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் கடந்த ஆண்டு இந்தியா வந்தார். அப்போது அவரை ஏன் கைது செய்யவில்லை என்று வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்! இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.