9.8.11

அண்ணா கொடுத்தார்! உடன் பிறப்பு வளைத்தார்! போலீஸ் லபக்கியது!! Mr. கருணா? have any say?

திருச்சியில், தமிழ் மன்றத்துக்குச் சொந்தமான, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, போலி பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், தி.மு.க., பகுதிச் செயலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலை மலையடிவாரத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதன் அருகில், "தமிழ்மன்றம்' என்ற அமைப்புக்குச் சொந்தமான, 20 சென்ட் நிலம் உள்ளது. மன்றத்தின் செயலராக உள்ள கண்ணையன் என்பவர் தான், நிலத்தை நிர்வகித்து வந்தார். கடந்த 1967ம் ஆண்டு, தமிழ்மன்ற அமைப்புக்கு, மாநகராட்சியால் அந்த இடம் வழங்கப்பட்டது. அப்போது, முதல்வர் அண்ணாதுரையே பொன்மலை வந்து, தமிழ்மன்றம் அமைந்த ஓலைக் குடிசை கட்டடத்தை, திறந்து வைத்தார். தமிழ் மன்றத்துக்குக் கிடைத்த நிலத்தை, பொன்மலை தி.மு.க., பகுதிச் செயலர் தர்மராஜ்,42, ஆக்கிரமிக்க நினைத்து, இடத்தைச் சுற்றி "ஹாலோ ப்ளாக்'கில் சுற்றுச்சுவர் அமைத்தார். அந்த இடத்துக்கு போலி பத்திரமும், அவரால் தயார் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் நடந்த ஆக்கிரமிப்பு, தி.மு.க., ஆட்சி என்பதால் கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும், நில அபகரிப்பு தொடர்பான புகார்களை, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழ்மன்ற இடத்தை, தி.மு.க., பகுதிச் செயலர் தர்மராஜ் ஆக்கிரமித்தது குறித்து, மன்றச் செயலர் கண்ணையன், ஆகஸ்ட் 3ம் தேதி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் புகார் அளித்தார்.
அடுத்ததாக நேற்று முன்தினம், கலெக்டரிடம், ஆக்கிரமிப்பு தொடர்பாக, புகார் மனு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம், கண்ணையன் அளித்த புகாரின்படி, தி.மு.க., பகுதிச் செயலர் தர்மராஜ் மீது, பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனுக்கு, தர்மராஜ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அங்கு விசாரணை முடிந்ததும், அவரை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட தி.மு.க., பகுதிச் செயலர் தர்மராஜ் ஜே.எம்., 5 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் மதியம் 2.30 மணிக்கு அடைக்கப்பட்டார்.