11.11.11


கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்...கல்விக் கடன் கிடைக்காமல் இன்ஜினீயரிங் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை!! 
கிராமப்புற மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் பிரச்னை உள்ளதால், கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அரசு ரூ.200 முதல் 500 வரை கல்விக்கட்டணமாக வழங்குகிறது. கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தக கட்டணம், கல்லூரி, பயிற்சி, தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றிற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவரின் பெற்றோர் ஒரு லட்சத்துக்கு மிகாமல் வருமானம் பெறுபவராக இருந்தால், இந்த தொகை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் டி.டி., யாக வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித்தொகையை மாணவர்களின் வங்கி கணக்கு மூலமே வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்க ஆவணங்கள் கேட்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தலா 2 கோடி ரூபாய் வரை அரசு வழங்கிய பணத்தில், கிராமப்புற மாணவர்கள் 90 சதவீதம் பேர் கணக்கு துவங்காததால், கல்விஉதவி தொகை பெற முடியவில்லை. நகர் புறங்களில் வசிக்கும் மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் சிரமம் இல்லை. கிராமப்புற மாணவர்களிடம் ஆவணங்கள் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததாலும் அவர்களை முறையாக வழிநடத்தும் மனிதத் தன்மை  வங்கி அதிகாரிகளுக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கும் இல்லாததால், கணக்கு துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது!!

இது ஒரு புறமிருக்க நேற்று, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், மனமுடைந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், கல்லூரி விடுதியில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்!! விழுப்புரம் மாவட்டம், கந்தாட்சிபுரத்தை சேர்ந்தவர் லூர்துசாமி; கூலித் தொழிலாளி. இவரது 17 வயது மகன் வினோத் செந்தில்கர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கினார். வீட்டில் வசதியில்லாத நிலையிலும் வங்கியில் கல்விக்கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். தெரிந்தவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்னை, திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் பி.இ., (இ.சி.இ.,) சேர்ந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி கல்விக் கடன் பெற முயற்சித்தார். ஆனால் அவருக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையிலிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

மதியம் சாப்பிடுவதற்காக விடுதிக்கு சென்றார். மதிய உணவு முடிந்ததும், மாணவர்கள் வகுப்பிற்கு சென்றனர். வினோத் செந்தில்கர் மட்டும், அறையில் தங்கியுள்ளார். பின், தனது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்குப் போட்டு இறந்தார்.மாலை வகுப்பு முடிந்து திரும்பிய சக மாணவர்கள் வினோத் செந்தில்கர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி நிர்வாகி திருப்போரூர் போலீசில் புகார் செய்தார்!! வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அவர் மனமுடைந்து தூக்குப்போட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. 


 தாசில்தார் ஜீப் மோதி எஸ்.ஐ. படுகாயம்!!

சேலம் ஐந்து ரோடு அருகே ஏற்காடு தாசில்தார் ஜீப் மோதியதில், சூரமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் அவருடைய நண்பரும் படுகாயமடைந்தனர். ஜீப் டிரைவரை போலீஸாரும் பொதுமக்களும் ரவுண்டு கட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம், கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (42). ஏற்காட்டில் உள்ள பெலக்காடுதரப்பு கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஏற்காடு தாசில்தார் ஜீப்புக்கு டிரைவர் இல்லாததால், அவ்வப்போது ரவி ஜீப்பை ஓட்டி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல், ஜீப்பில் தாசில்தாரை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டார். பின், சென்னையில் இருந்து வரும் அதிகாரிகளை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அழைத்து வருவதற்காக ரவி ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதே வேளையில், சூரமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. கனகராஜ் மற்றும் அவருடைய நண்பர் சிதம்பரம் ஆகியோர் ஜங்ஷனில் இருந்து ஐந்து ரோடு நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். ஐந்து ரோடு சிக்னல் அருகே வந்தபோது, தாசில்தார் ஜீப், எஸ்.ஐ. வந்த பைக் மீது மோதியது. அதில், டூவீலரில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்களும் அங்கு வந்த போலீஸாரும் போதையில் இருந்த டிரைவரை ரவுண்டு கட்டி அடித்தனர். தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் டிரைவரை மீட்டு ஃபேர்லேண்ட்ஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். ஏற்காடு தாசில்தார் இலாஹிஜான் போலீஸ் ஸ்டேஷன் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். காயமடைந்த எஸ்.ஐ. கனகராஜ் தனக்கும் வாகனத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில், வழக்குப்பதிவு செய்யாமல் ஒதுங்கிப் போவதாக கூறினார். அதையடுத்து, இரு தரப்பும் சமாதானமாக சென்றனர்.

விஜின்ஸ் எஸ்.பிக்கு அடி உதை!.     
விஜின்ஸ் எஸ்.பி., முத்தையா, இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் தாககப்பட்டார்.  முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்புதியவர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை!!
கடந்த வாரம் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட சண்முகவேலு மற்றும் உதயகுமார் ஆகியோரிடமிருந்து, அவர்கள் வகித்து வந்த கட்சிப் பதவிகளான புறநகர் மாவட்டச் செயலர், மாநில மாணவரணி செயலர் ஆகிய பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.இவர்களுக்கு பதிலாக, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலராக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி செயலராக சரவணபெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை நேற்று சந்தித்த போது கட்சிப் பொறுப்புகளில் முனைப்புக் காட்டி செயல்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்