29.11.11

ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு!முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 30-ம் தேதி கொடநாடு செல்ல இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுமார் 2 மணி நேரம் ஹெலிகாப்டரில் பார்வையிட்ட அவர், தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோட்டையில் நடந்த நிகழ்ச்சிகள் அவர் கொடநாடு பயணத்துக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக இருந்தன. பிறகு தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவை ராஜ்பவன் சென்று சந்தித்தார். அவர்களுடைய பேச்சு வார்த்தை சுமார் 30 நிமிஷங்கள் நீடித்தது. அதன் பிறகு அவர் கொடநாடு செல்வது ரத்தானது. மழை, வெள்ளத்தால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் முல்லைப் பெரியார் அணைப் பிரச்னை தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாலும் அவரது கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்துக்குப் பிறகே அவர் கொடநாடு செல்வார் எனவும் கூறப்படுகிறது.

ஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்!


டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு(FICCI ), மாநாடு ஒன்றை சென்னையில் டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் நடத்துகிறது! FICCI அங்கமான, ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை கூட்டுக்குழுவின் (MEBC)தலைவரும் பிரபல நடிகருமான கமல் ஹாசன் இந்த தகவலை தெரிவித்தார்.

"தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மெருகேற்றிக் கொள்வதன் மூலம் இந்தத் தொழில் மேலும் சிறப்புடன் திகழ முடியும். அது பற்றிய விவாதங்களுக்காகத்தான் இந்த மாநாடு. சினிமாத் துறை வளர்ச்சியடைய கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயமாக குறைக்க வேண்டும் என்பதுதான் என் பதில். வங்கிகள் திரைப்படம் தயாரிக்க கடன் வழங்க முன்வராததால், சட்ட விரோதமான வழிகளில் பெறப்படும் பணமும் திரைப்படத் துறையில் புழங்குகிறது. திரைப்படங்களுக்கான நிதி பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும், திரைப்படத் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே உடனடி வரவேற்பு இருக்காது. அந்தக் காலத்தில் வாசன் 13 பிரின்ட் போட்ட போது எதற்கு இத்தனை ? என்று எதிர்த்தவர்கள் உண்டு! தியேட்டர்களில் டால்பி சிஸ்டத்தை அறிமுகப் படுத்த வந்தவரிடம் நீங்கள் எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கெட்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் அதைத் தேடி ஓடினார்கள்!! புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே?" என்று நடிகர் கமல்ஹாசன் சொன்னார்.

--அவர் சென்னையில் நிருபர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது FICCI தலைவர் முராரரி IAS (Rtd ), லீனா ஜைசனி உடனிருந்தனர். ஜோர்டான் நாட்டில் விஸ்வரூபம் படப் பிடிப்பிலிருந்த கமல் ஹாசன் இந்த மாநாட்டுக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அங்கிருந்து பறந்து வந்தார்! ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கூட்டுக்குழுவின் முதல் மாநாடு 2009 -ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் நடந்தது. மூன்றாவது மாநாடு மறுபடியும் சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்சார் போர்டு தலைவர், ட்ராய் தலைவர், நீதியரசர்கள் மற்றும் திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கனிமொழி ஏன் நேற்றே விடுதலை ஆகவில்லை?

டில்லி உயர் நீதிமன்றம் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டாலும் அதையடுத்து சட்டபூர்வமான நடைமுறைகளுக்கு உரிய அவகாசம் இல்லாததால் கனிமொழி நேற்றே சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை!! பிணை விடுதலை(ஜாமீன்)க்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு (அதிகாரப்பூர்வ ஆவணம்) ஜாமின் பிணைப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டியாலா சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு பின், சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜாமினில் விடுவிக்கப்படுவது தொடர்பான உத்தரவை (ரிலீஸ் ஆர்டர்) அளிப்பார். சிறப்பு கோர்ட் நீதிபதி அளிக்கும் ரிலீஸ் ஆர்டரை, திகார் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்த பின், கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இது, சட்ட நடைமுறை!! .இந்நிலையில் ஜாமின் உத்தரவை பெறுவதற்காக கனிமொழி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து நீதிபதி ஒ.பி.சைனி சிறப்பு கோர்ட்டில் உள்ள தன் சேம்பரில், மாலை 5.15 வரை காத்திருந்தார். ஆனால் ஐகோர்ட்டில் இருந்து ஜாமின் உத்தரவு சிறப்பு கோர்ட்டுக்கு வரவில்லை. 

தாமதமானதால் நீதிபதி அதற்குப் பின் காத்திருக்கவில்லை. காத்திருந்தாலும் அது வேஸ்ட்தான்!! காரணம் சட்டப் படி சிறையிலிருந்து ஆறு மணிக்குமேல் வெளியே விட முடியாது. இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் "29.11.2011 காலை பிணைப் பத்திரத்தை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன் பின் ரிலீஸ் ஆர்டர் கிடைக்கும்" என்றார். இந்த தாமதம் காரணமாக ஜாமின் கிடைத்த ஐந்து பேரும் மேலும் ஒரு இரவை சிறையில் கழித்தனர் !! இன்று காலை 11 மணிக்கு மேல் கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்!!