27.12.15

பாஹா கிளிக்கி - பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல் (Press Release)

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா. 

தெலுகு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை இரசிகர்களை மெய்மறக்கச்செய்தது. 

இன்று ‘பாஹா கிளிக்கி’ என்ற பாடலை வெளியிடுகிறார். இது கிளிக்கி மொழியில் உருவாகும் முதல் பாடல் ஆகும். கிளிக்கி மொழி ராஜமௌலியின் பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட மொழியாகும். 750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் ‘பாஹா கிளிக்கி’. இந்தப் பாடலுக்கு கேட்போரை ஆட்டம் போட வைக்கும் இசையை அச்சு அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியவர் தேவகட்டா. 

“பாஹா கிளிக்கி
ராஹா கிளிக்கி
பிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி
ஊனோ தூவோ மூவோ ச்சாவோ 
டம்பாடம்பா பூகோ கிளிக்கி”

என்று செல்லும் ஸ்மிதாவின் இந்தப் பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பாடல் வெளியாகும் நேரத்தில் ஸ்மிதா, தன்னை தன் படைப்புகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 25.12.15

"கெத்து" இசை வெளியீட்டு விழா      ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் K. திருக்குமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் "கெத்து". கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி எமி ஜாக்சன், சத்யராஜ், ராஜேஷ், விக்ராந்த், கருணாகரன், அனுராதா, மைம் கோபி, I. M. விஜயன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை - பிரசாத் லேப்'பில் நடைபெற்றது.

"மான் கராத்தே" படத்திற்கு பிறகு இயக்குனர் திருகுமரன் இயக்கும் இரண்டாவது படம் இது. விழாவின் போது இப்படம்  மற்றும் இசை குறித்து பேசிய ராஜேஷ், மைம் கோபி, பாடலாசிரியர்கள் அனைவரும், பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கிறது என்றும், லேட்டஸ்ட் தொழில் நுட்பம் மற்றும் கலை நுணுக்கங்களைக் கொண்டு இப்படம் மிக அருமையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது என்றும், இப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து பேசிய விழாவின் நாயகன் இசையமைப்பாளர் திரு.ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடல்கள் வெளியிட்ட சிறிது நேரத்தில் iTunes 'ல் டாப்-1 ல் இடம் பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியும், மேலும் பாடலாசிரியர்களைப் பற்றி பேசும் பொழுது பாடலாசிரியர் தாமரை'யைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள், ஒரு பாடலைப் பாட பல பாடகர்களைப் பயன்படுத்தி பார்க்கும் தான் முதன் முறையாக ஒரு பாடலை எழுத பல பாடலாசிரியர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்றும், அவர்கள் அனைவரும் எந்த வித ஈகோ'வுமின்றி பணியாற்றியமைக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மேலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இயக்குனருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

இதை தொடர்ந்து "கெத்து" படத்தை இயக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செண்பக மூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தன் பேச்சை தொடங்கிய இயக்குனர் திருகுமரன் அவர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கிறது. அப்படியே படத்தின் கதைக்கு ஏற்ற பிண்ணனி இசையையும் சரியாக அமைத்துக் கொடுத்து தன்னையும் ஒரு பெரிய இயக்குனராக பெயர் வாங்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும், நான் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் கதை கூறும்பொழுது அவர் வேறு ஒரு படத்தின் ரீரெக்காடிங் பணியில் இருந்தார், ஆனால் அந்த சூழ்நிலையிலும் என்னிடம் பொருமையாக கதையைக் கேட்டுக் கொண்டது மட்டுமின்றி கதை மற்றும் காட்சிகளுக்கான யுத்திகளையும் கூறினார். அவரின் அனுபவமும் முதிர்ச்சியும் என்னைப் போன்ற புதிய இயக்குனர்களுக்கு நிச்சயம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்றும் கூறினார்.

கதையின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி பேசிய போது, விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். இப்படமும், பாடல்களும் தற்பொழுது சிறப்பாக வந்திருக்கிறது, இயக்குனருக்கும் இசையமைப்பாளர் மற்றும் அனைத்து நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,  இப்படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைத்துத் தரும் படி ரசிகர்களுக்கும் வேண்டு கோள் விடுத்தார்.

- லெனின் 

கெத்து படம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் பட்டியல்:

சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த், ராஜேஷ், கருணாகரன், சச்சு, வாசு விக்ரம், அனுராதா, மைம் கோபி, I.M.விஜயன், ஆடுகளம் நரேன்.

கலை இயக்குனர் - கே. முருகன்.
ஆடை வடிவமைப்பாளர் - வி. மூர்த்தி.
மேக்கப் - A. கோதண்டபாணி.
நடனம் - ஷோபி, பாபா பாஸ்கர்.
பாடல்கள் - தாமரை, கானா வினோத், சிற்காழி சிற்பி, வே. பத்மாவதி, G. பிரபா.
சண்டை பயிற்சி - அன்புறிவ். 
படத்தொகுப்பு - P. தினேஷ்.
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்.
ஒளிப்பதிவு - M. சுகுமார்.
இணை தயாரிப்பு - M. செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை.
தயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின். 
இயக்குனர் - கே. திருக்குமரன்.

22.12.15

அழகு குட்டி செல்லம்


நீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் "அழகு குட்டி செல்லம்". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், கல்லூரி அகில், ரித்விகா, சுரேஷ், ஜான் விஜய், மற்றும் வினோதினி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (21-12-15) சென்னை, பிரசாத் லேப்'ல் நடைபெற்றது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் அந்தோணி பேசும்பொழுது, இப்படம் ஒரு நல்ல குடும்பப்படம், இயக்குனர் சார்லஸ் கதை சொன்னதும், 15 நாட்களில் படத்தை ஆரம்பித்து விட்டோம். நான் கதையை கேட்டவுடன் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு இயக்குனராக பணியாற்றிய எனக்கு இன்னொரு இயக்குனரின் கஷ்டம் தெரியும். நான் இயக்குனராக பணிபுரிந்த சமயங்களில் என் தயாரிப்பாளர்கள் போன் செய்து என்ன ஆச்சு? ஷோ ஆரம்பிச்சாச்ச?? என்று கேட்ப்பார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யமாட்டேன். இயக்குனருக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் என்று எண்ணுபவன் நான். படம் முடிந்த பிறகுதான் அதில் நடித்த நடிகர் சிலருக்கு என்னை தெரியவந்தது என்று கூறினார்.

ஆடுகளம் நரேன் பேசும் பொழுது  இயக்குனர் சார்லஸ் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. அவர் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று சொன்னவுடன், டேட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு சொல்லி வந்துவிட்டேன். ஒரு நடிகருக்கு, சார்லஸ் மாதிரி ஒரு இயக்குனரிடம் வேலை செய்வது மிகவும் சுலபம். இவரைப் போன்று ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே  இருக்கிறார்கள் என்று கூறினார்.

இசையமைப்பாளர் வேத் ஷங்கர் பேசும் பொழுது, அழகு குட்டி செல்லம் கதையை கேட்ட உடன் எனக்கு பயம் வந்தது. இது குழத்தைகள் படம், நான் என்ன செய்ய போகிறேன் என்று முதலில் பயந்தேன். இயக்குனர் எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் என்னை இசை உருவாக்க வைத்தது. இப்படம் எனக்கு என்றும் மனதில் நிற்கும் படமாக இருக்கும் என்று கூறினார்.
இயக்குனர் சார்லஸ் பேசும் பொழுது, நான் வேறு வணிகத்திரைப்படம் தான்  பண்ணலாம் என்று  இருந்தேன். இந்த படம் மாதிரி ஒரு கதையை ஒரு தயாரிப்பாளர் புரிந்துகொள்வதே கஷ்டமான விஷயம். ஆனால் அந்தோணி அவர்கள் கதையை புரிந்துகொண்டார். அவர் தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும் இப்படம் உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்டது.  இது குழத்தைகளுக்கு மட்டுமான படம் அல்ல.. இது அவர்கள் உலகத்தை பற்றி பேசும், பெரியவர்களுக்கான படம். இப்படத்தில் பணியாற்றிய எல்லா நடிகர்களும், அவர் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்தனர். எனக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது. இந்த படம் ஒரு "ஆனந்தக்கண்ணீர்" என்று சொல்லலாம். இது "கண்ணீர்" உள்ள படம், ஆனால் நிறைவான படமாக இருக்கும். இயக்குனர் பாலா அவர்கள் படம் பார்த்து, நல்லாயிருக்கு என்று கூறியதற்கு பின் எங்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்..

- சந்தோஷ்

28.11.15

144 விமர்சனம்

         சி.வி.குமார் மற்றும் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜி.மணிகண்டன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் உதயபானு மகேஸ்வரன், மதுசூதன ராவ், ராம் தாஸ், சுஜாதா உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் "144".


                மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எரிமலைகுண்டு, பூமலைகுண்டு என இரண்டு கிராமங்களிடையே நடக்கும் வழக்கமான கிராமத்து பிரச்சனையால் "144" தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த சூழலில் ஒரு கடத்தல் சம்பவம் நிகழ திட்டமிடப்படுகிறது. திட்டமிட்டபடி கடத்தல் நிகழ்ந்ததா? ஊர்ப் பிரச்சனை தீர்ந்ததா? தடை உத்தரவு என்ன ஆனது? என்பது மீதி கதை.  வழக்கமான கிராமத்து கதையோட்டத்தில் புத்திசாலிதனம் கலந்த கிரியேடிவிட்டியுடன் ஒரு காமெடி படம் தந்ததில் அறிமுக இயக்குனர் முதிர்ச்சி பெறுகிறார்.  ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்கிய பிறகும் ஜவ்வாய் இழுக்கும் கதையின் நீளத்தை சற்று வெட்டியிருக்கலாம்.

கதாநாயகன் மிர்ச்சி சிவா வழக்கமான காமெடி கதாபாத்திரத்தையே கட்டி அழுகிறார். 'தமிழ்ப் படம்' 'கலகலப்பு' ஆகிய படங்களில் வந்த அதே சிவா ஆனால் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. டைமிங் காமெடி மற்றும் தப்புத் தப்பான ஆங்கிலம் என படம் முழுவதும் ஃபோக்கஸ் செய்யப்பட்டிருக்கிறார்.  மற்றொரு கதாநாயகன் அசோக் செல்வன் கார் டிரைவராக வருகிறார். கிராமத்து இளைஞனாக வரும் இவர் மதுரை வட்டார மொழி பேச முயற்சி செய்திருக்கிறார் ஆனால் முடியவில்லை. தன் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் பேசும் போது மட்டும் கதாநாயகனாக தெரிகிறார். கதாநாயகி ஓவியாவின் கதாபாத்திரம் சற்று வித்தயாசமாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கிறது, மேலும் வில்லனாக வரும் உதயபானு மகேஸ்வரன், அசோக் செல்வனின் காதலியான ஸ்ருதி, மசூதன ராவ், போன்றோர் கதை களத்திற்கு பொருத்தமான தேர்வு . முண்டாசுப்பட்டி படத்தில் டைமிங் காமெடி செய்த  ராம்தாஸ் இந்த படத்தில் சும்மா வந்து போகிறார்.

குருதேவின் ஒளிப்பதிவு பலம். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மட்டும் ஒட்டிருக்கிறது ஆனால் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. கதைகளத்திலும் கதையிலும் சிறு சிறு ஓட்டைகள் தெரிகிறது என்றாலும் எந்த லாஜிக்கையும் யோசிக்காமல் சிரிப்பிற்கு மட்டுமே படம் பார்க்க நினைப்போரின் சிரிப்பிற்கு மட்டும் "144 " தடை உத்தரவில்லை.


- லெனின்

27.11.15

உப்பு கருவாடு விமர்சனம்

     ராம்ஜி நரசிம்மன் தயாரிப்பில், இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா மற்றும் கருணாகரன் நடிப்பில் வெளிவந்திருக்கும்  இந்த திரைப்படம்,  சினிமா எடுக்கத்துடிக்கும் இளைஞர்களின் கதையைச் சொல்லும் படங்களின் வரிசையில் தற்போது இந்த "உப்பு கருவாடு" ம் இணைந்துள்ளது.  இயக்குனர் ராதாமோகனின் வழக்கமான செண்டிமென்ட் படம். சின்ன பட்ஜெட்டில் ஆபாசம் இல்லாமல், ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் என போர் அடிக்காமல் . ஒரு முழு நீள காமெடி படம் தந்ததற்கு இயக்குனருக்கு ஒரு சல்யூட்.      கருணாகரன், சாம்ஸ், நாராயணன் ஆகியோர் படமெடுக்க போராடி வருகிறார்கள். கருணாகரனின் முதல் படம் தோல்வி, இரண்டாம் படம் பாதியில் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த படத்திற்கான வாய்ப்பாக மயில்சாமி மூலம் வருகிறார் மீன் வியாபாரியான எம்.எஸ்.பாஸ்கர். தன் மகளை ஹீரோயினாக போட வேண்டும் என்ற கண்டிஷன் போட படம் சூடு பிடிக்கிறது. கருணாகரன் மனதில் ஒரு நாயகி, ஆனால் இருப்பது இன்னொரு நாயகி. நினைத்த எதுவும் நடக்காமல் கடைசியில் யாரும் எதிர்பாராதிருப்பங்களுடன் ஆபத்தும் வருகிறது. பிறகென்ன நடந்தது என்பதே மீதி கதை.  

சினிமாவை காதலிக்கும் இளைஞனாக தன் ஆதங்கத்தையும், இயலாமையையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார்  கருணாகரன்.  கதாநாயகி நந்திதா படத்தின் ஹைலைட் கதாபாத்திரம். பல காட்சிகளில் சூழ்நிலைக்கேற்ப நடிப்பில் வித்தயாசம் காட்டியிருக்கிறார். ஆனால் நந்திதாவின் நடிப்பையும் மிஞ்சுகிறார் கருணாகரனின் காதலியாக வரும் ரஷிதா.  காமெடி கலாட்டாவாக சாம்ஸ் மற்றும் டவுட் செந்தில் பட்டையக்கிளப்பிருக்கிறார்கள். தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசும் டவுட் செந்தில், திருக்குறளைச் சொல்லி அதற்கான விளக்கத்தை சாதாரணமாக கூறிபோகும் சாம்ஸின் முயற்சி புது விதம். ஹீரோவாக துடிக்கும் சதிஷ், சாமியாராக வரும் 'டாடி' செந்தில், மீன் வியாபாரியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரன் என ஒட்டு மொத்த கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.  படத்தில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் படத்திற்கு பொருத்தமாக அமைந்ததற்கு ஒரு சபாஷ். 


முழுக்க முழுக்க காமெடி கதையென்றாலும் இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகள் அமைந்திருப்பது ஒரு குறை.  ஸ்டீவ் வாட்ஸ் இசையில் உப்புக் கருவாடு பாடல் ஒன்றை தவிர மற்ற பாடல்களில் பெரிதாக ஒன்றுமில்லை.  

மொத்தத்தில் "உப்பு கருவாடு" ஒரு எளிமையான காமெடி ட்ரீட்.


- லெனின் 

20.11.15

ஒரு நாள் இரவில் விமர்சனம்

   ஷட்டர் என்று 2012 வெளிவந்த மலையாள சூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக் இந்த ஒரு நாள் இரவில் திரைப்படம். ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் வழங்கும் இத்திரைப்படத்தின்  இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கும் அந்தோனி.  ஒரு மத்தியதரவர்க்கத்து உறவுகளையும் அதன் உணர்வுகளையும் மையமாக வைத்து பின்னப்பட்ட திரைக்கதை. இதுவே இப்படத்தின் மிகப்பெரும் பலம்.  


சிங்கப்பூர் சென்று கைநிறையப் பணம் சம்பாதித்துவிட்டு சென்னை திரும்பும் ஒரு நடுத்தர குடும்பதலைவன் சத்யராஜ்.  ஒரு முறை கல்லூரி சென்று திரும்பும் தன் மகள் தீக்ஷிதா ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்ட சத்யராஜ் மகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமண ஏற்பாட்டில் இறங்குகிறார்.  இதற்கு சத்யராஜின் மனைவியான கல்யாணிநடராஜன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் மனமுடையும் சத்யராஜ் மது, மாது என பாதை மாறுகிறார். ஆட்டோ ஓட்டுனராக வரும் வருண் இவரை பாலியல் தொழிலாளியான அனுமோலிடம் அழைத்துச் செல்கிறார். பாலியல் தொழிலாளியிடம் தங்க பயப்படும் சத்யராஜ் தன் வீட்டின்முன் உள்ள கடைகளில் காலியான ஒரு கடையில் தங்க முடிவெடுக்கிறார். பக்கத்து கடைகள் மூடும் வரை காத்திருந்து உள்ளே செல்லும் சத்யராஜும், அனுமோலும் எதிர்பாராத சிக்கலால் கடையிலிருந்து வெளிவர முடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.  அதே சமயம் இப்படத்தில் இயக்குனராக நடித்திருக்கும் யூகிசேது வருணின் ஆட்டோவில் தன் திரைக்கதைப் பையை தவறவிடுகிறார். அந்தப் பை சத்யராஜ், அனுமோல் இருக்கும் கடையினுள் மாட்டிக் கொள்கிறது.  சத்யராஜும், அனுமோலும் எப்படி வெளியே வந்தார்கள்? யூகிசேது'விற்கு அவரது பை கிடைத்ததா? இல்லையா? என்பதை பதட்டத்துடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.  மகளை வேறொரு ஆணுடன் பைக்கில் வருவதை கண்டதும் வரும் கோபம், மனைவியுடன் சண்டை, பூட்டிய கடைக்குள் மாட்டிக்கொள்ளும் பொழுது வரும் பயம், தன் நண்பர்களால் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என தெரிய வரும்பொழுது வரும் ஆத்திரம் என சத்யராஜின் நடிப்பு பிரமாதம். ஒரு நடுத்தர குடும்ப தலைவனின் உணர்வுகளை நம் கண் முன் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.  

பாலியல் தொழிலாளியாக வரும் அனுமோல் தன் கதாபாத்திரத்தை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்.  திரைக்கதை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு பெரிய நடிகர்களைத் தேடி அலையும் யூகிசேது தன் தேடலிலேயே ஒட்டுமொத்த உணர்வுகளையும் கொட்டிவிட்டார். இப்படத்தில் இவர் எழுதிய வசனங்களும் சூப்பர்..  அறிமுக நடிகராக வரும் வருண், மற்றும் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாகவே தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  படத்தொகுப்பாளரான ஆண்டனிக்கு இயக்குனராக இது முதல் படம் என்றாலும் ஒரு நடுத்தர குடும்பத்து உணர்வுகளை காட்சிக்கு காட்சி பதட்டம் குறையாமல் கொண்டு சென்றதில் பாராட்டுக்கள். 

மொத்தத்தில் "ஒரு நாள் இரவில்" அனைவரும் ரசிக்கலாம்.
- லெனின் 

10.11.15

வேதாளம் விமர்சனம்

A.M.ரத்னம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வேதாளம். வீரம் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவா அஜித்துடன்  இரண்டாவது முறையாக பணிபுரியும் படம் இந்த வேதாளம். இதில் அஜித், ஸ்ருதிஹாசன், லக்ஷ்மிமேனன், அஷ்வின், சூரி, மயில்சாமி, தம்பிராமையா, மொட்டைராஜேந்திரன் போன்ற பலர் நடித்திருகின்றனர்.

படிப்பதற்காக தன் தங்கையான லக்ஷ்மிமேனனை அஜித் கொல்கத்தாவிற்கு அழைத்து வருகிறார். அஜித் அங்கு கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிய, அஷ்வின் லக்ஷ்மிமேனன் மேல் காதலில் விழ, இவர்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையே அங்கு நடக்கும் குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் கால் டாக்ஸி டிரைவர்களிடம் அதைப்பற்றி ஏதும் அறிந்தால் துப்பு தரும்படி கேட்க , பின்பு அஜித் அவர்களை பற்றி துப்பு தெரிவிக்கிறார். இதனை அறிந்த வில்லன், அஜித்தை கடத்தி வந்து கொலைமுயற்சி செய்ய, அஜித் வில்லனின் இரண்டு சகோதர்களை கொன்று வில்லனை பலி வாங்குவதற்காக காத்திருக்க, அஸ்வினின் தங்கையாக வரும் சுருதி ஹாசன் அஜித்தை கொலைகாரன் என்று குற்றம் சாட்டி, தன் அண்ணனான அஸ்வின்  திருமணத்தை தடுக்க முயல்கிறார். தன்னை கொலை காரன் என்று ஒத்துக்கொண்டு அஜித் ஏன் இதை செய்கிறார் என்பதை  ப்லாஷ்பாக்கில் கூறுகிறார். அஜித்துக்கும் வில்லனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக வில்லனை கொள்கிறார்? வில்லனை கொன்றாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

இதில் குறிப்பாக தங்கை பாசத்தை மையமாக கொண்டு கதை நகர்கிறது. கமெர்சியல்  படமாக எடுக்க நினைத்திருக்கும் சிறுத்தை சிவா சற்று சொதப்பி இருப்பது தெரிகிறது. சூரி காமெடி சற்று சுமார். படத்தின் இசை பெரிதளவில் இல்லை. ஸ்ருதி ஹாசன் மொத்தத்தில் ஒருசில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கிறார். அஜித்திற்கு தங்கை பாசம் பற்றி வந்த இந்த படத்தில்அவர் நடிப்பு பாரட்டகுரியது. மொத்தத்தில் இந்த தீபாவளியில் வேதாளம் பெரிதளவில் வெடிக்கவில்லை ..

RATING - (2.5/5.0)


- சாகுல் ஹமீது

துங்கா வனம் விமர்சனம்


  21ம் நூற்றாண்டு தமிழ் சினிமாவின் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட உலக நாயகன் கமல்ஹாசனின் பரபரப்பான நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் "தூங்காவனம்". 
 2011ம் ஆண்டு வெளிவந்த "ஸ்லீப்லெஸ் நைட்" என்ற ப்ரெஞ்ச் மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் இது என்ற போதிலும் கமல்ஹாசனின் அதிரடி ஆக்ஷனில் படம் பரபரப்பாய் நகர்கிறது . கமல்ஹாசனிடம் 7 வருடங்களாக இணைஇயக்குனராக பணிபுரிந்த ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


வழக்கமான நேர்மை கடமை என்றில்லாமல் பணத்திற்காக விலைமதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து வைக்கும் நார்காட்டிக்ஸ் அதிகாரி கமல். போதைப் பொருளை திரும்ப பெற கமலின் மகனை பிணைக்கைதியாக பிடித்து வைக்கிறார் வில்லன் பிரகாஷ் ராஜ். கமல் தன் மகனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதி கதை. ஓரே நாள் இரவில் நடக்கும் கதை என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. த்ரிஷா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக வந்து  தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கிஷோரும் தன் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் வில்லன் பிரகாஷ்ராஜ் தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமலை உட்கார்ந்த இடத்திலிருந்து ஆட்டிப்படைக்கும் வில்லத்தனத்திற்கு பாராட்டுக்கள். பரபரப்பாக நகரும் காட்சிகளின் நடுவே சில காட்சிகளை கட்டாயப்படுத்தி புகுத்தி இருப்பதை சற்றே தவிர்த்திருக்கலாம். "பாபநாசம்" படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த ஆஷா சரத் இப்படத்தில் கமலின் விவாகரத்து மனைவியாக சில காட்சிகளில் மட்டும் தலை காட்டுகிறார்.


பின்னணி இசையில் வழக்கம் போல் படத்திற்கு பலம் சேர்க்கிறார் ஜிப்ரான்.ஷான் முகமதின் எடிட்டிங்கும் , சுகாவின் வசனமும் சுமார் ரகம். வழக்கம் போல் கமல் கதாபாத்திரம் ஒரு ஸ்டைலிஸ் ஹீரோயிசத்தை தன் நடிப்பாற்றல் மூலம் நிரூபித்திருக்கிறது. முதல் பாதியில் பரபரப்பாய் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்தது ரசிகர்கருக்கு சற்று ஏமாற்றமே. மற்றபடி கதைக்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கான நடிப்பை மிகத் தெளிவாகவும் அருமையாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் "தூங்காவனம்" ரீமேக் என்றாலும் ஒரு அதிரடி - த்ரில்லராய் கமலின் ஆக்ஷனில் அதகளப்படுத்தும்.

RATING - (3.5/5.0)


-லெனின்