10.11.15

துங்கா வனம் விமர்சனம்


  21ம் நூற்றாண்டு தமிழ் சினிமாவின் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட உலக நாயகன் கமல்ஹாசனின் பரபரப்பான நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் "தூங்காவனம்". 
 2011ம் ஆண்டு வெளிவந்த "ஸ்லீப்லெஸ் நைட்" என்ற ப்ரெஞ்ச் மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் இது என்ற போதிலும் கமல்ஹாசனின் அதிரடி ஆக்ஷனில் படம் பரபரப்பாய் நகர்கிறது . கமல்ஹாசனிடம் 7 வருடங்களாக இணைஇயக்குனராக பணிபுரிந்த ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


வழக்கமான நேர்மை கடமை என்றில்லாமல் பணத்திற்காக விலைமதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து வைக்கும் நார்காட்டிக்ஸ் அதிகாரி கமல். போதைப் பொருளை திரும்ப பெற கமலின் மகனை பிணைக்கைதியாக பிடித்து வைக்கிறார் வில்லன் பிரகாஷ் ராஜ். கமல் தன் மகனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதி கதை. ஓரே நாள் இரவில் நடக்கும் கதை என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. த்ரிஷா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக வந்து  தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கிஷோரும் தன் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் வில்லன் பிரகாஷ்ராஜ் தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமலை உட்கார்ந்த இடத்திலிருந்து ஆட்டிப்படைக்கும் வில்லத்தனத்திற்கு பாராட்டுக்கள். பரபரப்பாக நகரும் காட்சிகளின் நடுவே சில காட்சிகளை கட்டாயப்படுத்தி புகுத்தி இருப்பதை சற்றே தவிர்த்திருக்கலாம். "பாபநாசம்" படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த ஆஷா சரத் இப்படத்தில் கமலின் விவாகரத்து மனைவியாக சில காட்சிகளில் மட்டும் தலை காட்டுகிறார்.


பின்னணி இசையில் வழக்கம் போல் படத்திற்கு பலம் சேர்க்கிறார் ஜிப்ரான்.ஷான் முகமதின் எடிட்டிங்கும் , சுகாவின் வசனமும் சுமார் ரகம். வழக்கம் போல் கமல் கதாபாத்திரம் ஒரு ஸ்டைலிஸ் ஹீரோயிசத்தை தன் நடிப்பாற்றல் மூலம் நிரூபித்திருக்கிறது. முதல் பாதியில் பரபரப்பாய் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்தது ரசிகர்கருக்கு சற்று ஏமாற்றமே. மற்றபடி கதைக்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கான நடிப்பை மிகத் தெளிவாகவும் அருமையாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் "தூங்காவனம்" ரீமேக் என்றாலும் ஒரு அதிரடி - த்ரில்லராய் கமலின் ஆக்ஷனில் அதகளப்படுத்தும்.

RATING - (3.5/5.0)


-லெனின்