27.11.15

உப்பு கருவாடு விமர்சனம்

     ராம்ஜி நரசிம்மன் தயாரிப்பில், இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா மற்றும் கருணாகரன் நடிப்பில் வெளிவந்திருக்கும்  இந்த திரைப்படம்,  சினிமா எடுக்கத்துடிக்கும் இளைஞர்களின் கதையைச் சொல்லும் படங்களின் வரிசையில் தற்போது இந்த "உப்பு கருவாடு" ம் இணைந்துள்ளது.  இயக்குனர் ராதாமோகனின் வழக்கமான செண்டிமென்ட் படம். சின்ன பட்ஜெட்டில் ஆபாசம் இல்லாமல், ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் என போர் அடிக்காமல் . ஒரு முழு நீள காமெடி படம் தந்ததற்கு இயக்குனருக்கு ஒரு சல்யூட்.      கருணாகரன், சாம்ஸ், நாராயணன் ஆகியோர் படமெடுக்க போராடி வருகிறார்கள். கருணாகரனின் முதல் படம் தோல்வி, இரண்டாம் படம் பாதியில் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த படத்திற்கான வாய்ப்பாக மயில்சாமி மூலம் வருகிறார் மீன் வியாபாரியான எம்.எஸ்.பாஸ்கர். தன் மகளை ஹீரோயினாக போட வேண்டும் என்ற கண்டிஷன் போட படம் சூடு பிடிக்கிறது. கருணாகரன் மனதில் ஒரு நாயகி, ஆனால் இருப்பது இன்னொரு நாயகி. நினைத்த எதுவும் நடக்காமல் கடைசியில் யாரும் எதிர்பாராதிருப்பங்களுடன் ஆபத்தும் வருகிறது. பிறகென்ன நடந்தது என்பதே மீதி கதை.  

சினிமாவை காதலிக்கும் இளைஞனாக தன் ஆதங்கத்தையும், இயலாமையையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார்  கருணாகரன்.  கதாநாயகி நந்திதா படத்தின் ஹைலைட் கதாபாத்திரம். பல காட்சிகளில் சூழ்நிலைக்கேற்ப நடிப்பில் வித்தயாசம் காட்டியிருக்கிறார். ஆனால் நந்திதாவின் நடிப்பையும் மிஞ்சுகிறார் கருணாகரனின் காதலியாக வரும் ரஷிதா.  காமெடி கலாட்டாவாக சாம்ஸ் மற்றும் டவுட் செந்தில் பட்டையக்கிளப்பிருக்கிறார்கள். தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசும் டவுட் செந்தில், திருக்குறளைச் சொல்லி அதற்கான விளக்கத்தை சாதாரணமாக கூறிபோகும் சாம்ஸின் முயற்சி புது விதம். ஹீரோவாக துடிக்கும் சதிஷ், சாமியாராக வரும் 'டாடி' செந்தில், மீன் வியாபாரியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரன் என ஒட்டு மொத்த கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.  படத்தில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் படத்திற்கு பொருத்தமாக அமைந்ததற்கு ஒரு சபாஷ். 


முழுக்க முழுக்க காமெடி கதையென்றாலும் இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகள் அமைந்திருப்பது ஒரு குறை.  ஸ்டீவ் வாட்ஸ் இசையில் உப்புக் கருவாடு பாடல் ஒன்றை தவிர மற்ற பாடல்களில் பெரிதாக ஒன்றுமில்லை.  

மொத்தத்தில் "உப்பு கருவாடு" ஒரு எளிமையான காமெடி ட்ரீட்.


- லெனின்