27.12.15

பாஹா கிளிக்கி - பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல் (Press Release)

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா. 

தெலுகு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை இரசிகர்களை மெய்மறக்கச்செய்தது. 

இன்று ‘பாஹா கிளிக்கி’ என்ற பாடலை வெளியிடுகிறார். இது கிளிக்கி மொழியில் உருவாகும் முதல் பாடல் ஆகும். கிளிக்கி மொழி ராஜமௌலியின் பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட மொழியாகும். 750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் ‘பாஹா கிளிக்கி’. இந்தப் பாடலுக்கு கேட்போரை ஆட்டம் போட வைக்கும் இசையை அச்சு அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியவர் தேவகட்டா. 

“பாஹா கிளிக்கி
ராஹா கிளிக்கி
பிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி
ஊனோ தூவோ மூவோ ச்சாவோ 
டம்பாடம்பா பூகோ கிளிக்கி”

என்று செல்லும் ஸ்மிதாவின் இந்தப் பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பாடல் வெளியாகும் நேரத்தில் ஸ்மிதா, தன்னை தன் படைப்புகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.