28.11.15

144 விமர்சனம்

         சி.வி.குமார் மற்றும் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜி.மணிகண்டன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் உதயபானு மகேஸ்வரன், மதுசூதன ராவ், ராம் தாஸ், சுஜாதா உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் "144".


                மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எரிமலைகுண்டு, பூமலைகுண்டு என இரண்டு கிராமங்களிடையே நடக்கும் வழக்கமான கிராமத்து பிரச்சனையால் "144" தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த சூழலில் ஒரு கடத்தல் சம்பவம் நிகழ திட்டமிடப்படுகிறது. திட்டமிட்டபடி கடத்தல் நிகழ்ந்ததா? ஊர்ப் பிரச்சனை தீர்ந்ததா? தடை உத்தரவு என்ன ஆனது? என்பது மீதி கதை.  வழக்கமான கிராமத்து கதையோட்டத்தில் புத்திசாலிதனம் கலந்த கிரியேடிவிட்டியுடன் ஒரு காமெடி படம் தந்ததில் அறிமுக இயக்குனர் முதிர்ச்சி பெறுகிறார்.  ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்கிய பிறகும் ஜவ்வாய் இழுக்கும் கதையின் நீளத்தை சற்று வெட்டியிருக்கலாம்.

கதாநாயகன் மிர்ச்சி சிவா வழக்கமான காமெடி கதாபாத்திரத்தையே கட்டி அழுகிறார். 'தமிழ்ப் படம்' 'கலகலப்பு' ஆகிய படங்களில் வந்த அதே சிவா ஆனால் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. டைமிங் காமெடி மற்றும் தப்புத் தப்பான ஆங்கிலம் என படம் முழுவதும் ஃபோக்கஸ் செய்யப்பட்டிருக்கிறார்.  மற்றொரு கதாநாயகன் அசோக் செல்வன் கார் டிரைவராக வருகிறார். கிராமத்து இளைஞனாக வரும் இவர் மதுரை வட்டார மொழி பேச முயற்சி செய்திருக்கிறார் ஆனால் முடியவில்லை. தன் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் பேசும் போது மட்டும் கதாநாயகனாக தெரிகிறார். கதாநாயகி ஓவியாவின் கதாபாத்திரம் சற்று வித்தயாசமாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கிறது, மேலும் வில்லனாக வரும் உதயபானு மகேஸ்வரன், அசோக் செல்வனின் காதலியான ஸ்ருதி, மசூதன ராவ், போன்றோர் கதை களத்திற்கு பொருத்தமான தேர்வு . முண்டாசுப்பட்டி படத்தில் டைமிங் காமெடி செய்த  ராம்தாஸ் இந்த படத்தில் சும்மா வந்து போகிறார்.

குருதேவின் ஒளிப்பதிவு பலம். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மட்டும் ஒட்டிருக்கிறது ஆனால் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. கதைகளத்திலும் கதையிலும் சிறு சிறு ஓட்டைகள் தெரிகிறது என்றாலும் எந்த லாஜிக்கையும் யோசிக்காமல் சிரிப்பிற்கு மட்டுமே படம் பார்க்க நினைப்போரின் சிரிப்பிற்கு மட்டும் "144 " தடை உத்தரவில்லை.


- லெனின்