22.12.15

அழகு குட்டி செல்லம்


நீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் "அழகு குட்டி செல்லம்". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், கல்லூரி அகில், ரித்விகா, சுரேஷ், ஜான் விஜய், மற்றும் வினோதினி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (21-12-15) சென்னை, பிரசாத் லேப்'ல் நடைபெற்றது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் அந்தோணி பேசும்பொழுது, இப்படம் ஒரு நல்ல குடும்பப்படம், இயக்குனர் சார்லஸ் கதை சொன்னதும், 15 நாட்களில் படத்தை ஆரம்பித்து விட்டோம். நான் கதையை கேட்டவுடன் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு இயக்குனராக பணியாற்றிய எனக்கு இன்னொரு இயக்குனரின் கஷ்டம் தெரியும். நான் இயக்குனராக பணிபுரிந்த சமயங்களில் என் தயாரிப்பாளர்கள் போன் செய்து என்ன ஆச்சு? ஷோ ஆரம்பிச்சாச்ச?? என்று கேட்ப்பார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யமாட்டேன். இயக்குனருக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் என்று எண்ணுபவன் நான். படம் முடிந்த பிறகுதான் அதில் நடித்த நடிகர் சிலருக்கு என்னை தெரியவந்தது என்று கூறினார்.

ஆடுகளம் நரேன் பேசும் பொழுது  இயக்குனர் சார்லஸ் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. அவர் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று சொன்னவுடன், டேட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு சொல்லி வந்துவிட்டேன். ஒரு நடிகருக்கு, சார்லஸ் மாதிரி ஒரு இயக்குனரிடம் வேலை செய்வது மிகவும் சுலபம். இவரைப் போன்று ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே  இருக்கிறார்கள் என்று கூறினார்.

இசையமைப்பாளர் வேத் ஷங்கர் பேசும் பொழுது, அழகு குட்டி செல்லம் கதையை கேட்ட உடன் எனக்கு பயம் வந்தது. இது குழத்தைகள் படம், நான் என்ன செய்ய போகிறேன் என்று முதலில் பயந்தேன். இயக்குனர் எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் என்னை இசை உருவாக்க வைத்தது. இப்படம் எனக்கு என்றும் மனதில் நிற்கும் படமாக இருக்கும் என்று கூறினார்.
இயக்குனர் சார்லஸ் பேசும் பொழுது, நான் வேறு வணிகத்திரைப்படம் தான்  பண்ணலாம் என்று  இருந்தேன். இந்த படம் மாதிரி ஒரு கதையை ஒரு தயாரிப்பாளர் புரிந்துகொள்வதே கஷ்டமான விஷயம். ஆனால் அந்தோணி அவர்கள் கதையை புரிந்துகொண்டார். அவர் தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும் இப்படம் உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்டது.  இது குழத்தைகளுக்கு மட்டுமான படம் அல்ல.. இது அவர்கள் உலகத்தை பற்றி பேசும், பெரியவர்களுக்கான படம். இப்படத்தில் பணியாற்றிய எல்லா நடிகர்களும், அவர் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்தனர். எனக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது. இந்த படம் ஒரு "ஆனந்தக்கண்ணீர்" என்று சொல்லலாம். இது "கண்ணீர்" உள்ள படம், ஆனால் நிறைவான படமாக இருக்கும். இயக்குனர் பாலா அவர்கள் படம் பார்த்து, நல்லாயிருக்கு என்று கூறியதற்கு பின் எங்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்..

- சந்தோஷ்