1.1.16

அழகு குட்டி செல்லம் விமர்சனம்        "நீயா நானா" இயக்குனர் அந்தோணி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் (2016) புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வரும் படம்  "அழகு குட்டிச் செல்லம்". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், மெட்ராஸ் ரித்விகா, கல்லூரி அகில், ஜான் விஜய், தேஜஸ்வினி, வினோதினி, கருணாஸின் மகன் கேய்ன், யாழினி, கிரிஷா, போன்ற பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியுடன் இயங்கும் 150 வருட பழமைவாய்ந்த ஒரு பள்ளியை கதைக்களமாகவும், அந்த பள்ளியில் நடத்தப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவினை மையப்படுத்தியும்,
கதையை புதுவிதமாக நகர்த்தி செல்லும் இயக்குனரின் நேர்த்திக்குப் பாராட்டுக்கள்.

அப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் இந்த வருட கிறிஸ்துமஸ் விழா நாடகத்தை தாங்கள் நடத்த அனுமதி அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்க, அதற்கு நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் புதுவிதமாக இயேசு பிறப்பது போன்று ஒரு குழந்தையை வைத்து தத்ரூபமாக நடத்திக்காட்டுவோம் என பிடிவாதம் பிடிக்க இறுதியில் பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொள்கிறது. பின் இயேசுவாக நடிக்க வைக்க குழந்தையை ஏற்பாடு செய்யும்பொழுது ஏற்படும் பிரச்சனைகள் மீதி கதை.

நாடகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களில் ஒரு மாணவியின் அக்கா திருமணமாகி கணவனை பிரிந்திருக்க அவரின் குழந்தையை நடிக்க வைக்கலாம் என முயற்சி செய்கையில் அந்த மாணவியின் அக்கா தன் கணவனோடு சென்றுவிடுகிறார். அதேவேளையில் மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவான ஆட்டோ ஓட்டுனராக வரும் கருணாஸ் நான்காவதாக தனக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பொழுது அதுவும் பெண்ணாக பிறக்க மணமுடைந்து வீடு திரும்புகிறார். அவரின் மனைவியோ அந்த குழந்தையை கூவத்தின் அருகில் விட்டுவிட்டு கணவரிடம் குழந்தை இறந்துவிட்டது என்று கூற பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி உண்மையை கூறுகிறார். பின் கருணாஸ் காணாமல் போன குழந்தையை தேடி அலைவது ஒரு புறம் இருக்க, அந்த மாணவர்களில் ஒருவனான மாணவனின் சித்தப்பாவாக கனடா நாட்டிலிருந்து வந்திருக்கும் கல்லூரி அகில் மற்றும் அவரின் மனைவி ரித்விகா ஒரு தீவிரவாத தாக்குதலில் தன் குழந்தையை இழந்து மனமுடைந்து காணப்படுவது ஒரு புறம்.

செஸ் விளையாட்டு வீராங்கனையான கிரிஷா தன் சக வீரருடன் பழகியதில் கற்படைந்து பின் அவரால் ஏமாற்றப்படுகிறார். அந்த வேளையில் ஒரு செஸ் போட்டி தொடர் ஒன்று நடக்க கிரிஷாவும் தனக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் தன்னை ஏமாற்றிய காதலனை இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெறுகிறார்.

பின் ஒரு அனாதை ஆசிரமத்தில் படிக்கும் அப்பள்ளி மாணவன் மூலம் தன் ஆசிரமத்திற்கு புதிதாக வந்திருக்கும் குழந்தையை நாடகத்தில் நடிக்க கேட்க அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் தம்பி ராமையா மறுக்கிறார். இறுதியில் அந்த குழந்தையை கடத்தி வந்து நடிக்க வைக்கிறார்கள். இறுதியில் கருணாஸின் குழந்தை கிடைத்ததா? அகில் மற்றும் ரித்விகா ஏமாற்றம் தீர்ந்ததா.? செஸ் போட்டியில் வென்ற கிரிஷாவின் நிலை என்ன? என்பது மீதி கதை. இப்படி ஒரு கதையை இன்னாரு கதையுடன் தொடர்புபடுத்தி காட்சிக்கு காட்சி தொய்வில்லாமல் படமாக்கியிருப்பது புதுமை + அருமை.

இப்படத்தின் அனைவரது கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்களும் தங்களின் கதாபாத்திரத்திற்கான உழைப்பை நூறு சதவிகிதம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்களின் நடிப்பு அனைவரையும் கவரும். கருணாஸ் இப்படத்தில் அவரின் வசனம் முதிர்ச்சி பெற்றுள்ளதுடன் அவரின் நடிப்பும் பிரமாதம்.

தம்பி ராமையா, அகில், ரித்விகா என அனைவரின் நடிப்பும் அருமை. ஓப்பனிங் சாங் இல்லாமல், குத்துப் பாட்டு இல்லாமல் ஒரு குடும்ப படம், குழந்தைகள் படம் தந்த இயக்குனர் சார்லஸிற்கு மீண்டும் ஒரு நன்றி கலந்த பாராட்டுக்கள்.   மொத்தத்தில் "அழகு குட்டிச் செல்லம் - படம் பார்க்கும் அனைவருக்கும் செல்லம்..."

- லெனின்