15.1.16

கெத்து விமர்சனம்

           உதயநிதியின் "ரெட் ஜெயின்ட் மூவிஸ்" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்தனம்,       உதயநிதியின் ஆக்ஷன் அவதாரம் என புதிய கலவையுடன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "கெத்து".     ஸ்னிப்பர் கொலைகாரனாக வரும் விக்ராந்த். ஒரு விஞ்ஞானியை கொலை செய்வதற்காக குமுளி செல்கிறார். அங்கே நூலகம் நடத்தி வருபவர் உதயநிதி. ஒரு சூழலில் செய்தி வாசிப்பாளாராக முயற்சிக்கும் எமி ஜாக்சனுக்கும், நூலகம் நடத்தும் உதயநிதிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எமிக்கு உதயநிதி மேல் காதல் ஏற்படுகிறது, ஆனால் உதயநிதி பிடி கொடுக்காமல் இருப்பதும், இவர்கள் இருவரின் காதல் காட்சிகளும் படத்திற்கு வேகத்தடையே.

   காதல், காமெடி என தொடர்ந்து ஒரே வண்டியில் உலா வந்த உதயநிதிக்கு ஆக்ஷன் அவதாரம் அம்சமாக அமைந்திருக்கிறது. சத்யராஜ் வழக்கம் போல் தன் கதாபாத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்திருப்பது படத்திற்கு பலம்.
 உதயநிதியின் அப்பாவாக வரும் சத்யராஜ் இப்படத்தில் பி.டி. மாஸ்டராக நடித்திருக்கிறார். இவர் பி.டி. மாஸ்டராக பணிபுரியும் பள்ளியின் அருகில் ஒரு மதுக்கடையும், பாரும் நடத்தி வருகிறார் மைம் கோபி. இவரின் மதுக்கடையால் பள்ளிக்கும்,  மாணவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட கடையை மூட வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கிறார் சத்யராஜ். இதையறிந்த மைம் கோபி, சத்யராஜை பிடித்து தன் கடையில் வைத்து பூட்ட, அதுவரை சாதுவாக இருந்த  உதயநிதி உக்கிர தாண்டவமாய் மாறி தன் தந்தையை காப்பாற்றுகிறார். ஆனால் மறுநாள் மைம் கோபி இறந்து கிடக்க. அந்த இடத்தில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க, போலீஸ் சத்யராஜை கைது செய்கிறது. பின் சத்யராஜின் நிலை என்ன? உதயநிதி தன் தந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? விக்ராந்த் என்னவானார்? என்பது மீதிக் கதை.

   எமி ஜாக்சன் வழக்கமான காதலியாக வந்து போகிறார். படத்தின் ஹைலைட் கதாபாத்திரம் விக்ராந்த். கதாநாயகனைவிட  முக்கிய கதாபாத்திரம் இவருடையது. படத்தில் இவருக்கு வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், இவரின் ஆக்ரோஷ கண்கள் ஆயிரம் வசனங்களை அசாதாரணமாக கூறி செல்வது பிரம்மாண்டம். படத்திற்கு மிகப்பெரும் பலமும் இவரே.

 இயக்குனர் திருக்குமரன் கதை, களம் என அனைத்தையும் அழகாக படத்தை அமைத்திருக்கிறார். கதைக்கு முக்கியம் என்றால் வில்லனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பும் காட்சிகள் படத்தின் மைனஸ். ஹாரிஷ் ஜெயராஜ் பாடல்கள் நன்றாக இருந்தாலும், அரைத்த மாவை அரைத்தது போல் ஒரு ஐயம் தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசை ரசிகர்களுக்கு இரைச்சலையும், எரிச்சலையும் தருவது படத்தின் மைனஸ் என்று கூறலாம்.சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து, காட்சிகள் அனைத்தும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் "கெத்து" வெத்தாகாது என நம்பலாம்.