4.1.16

இறுதிச்சுற்று இசை வெளியீட்டு விழா        Y Not ஸ்டுடியோஸ் - சசிகாந்த், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் - சி.வி.குமார், UTV மோஸன் பிக்சர்ஸ், ராஜ்குமார் ஹிராணி மற்றும் மாதவன் ஆகியோரின் இணை தயாரிப்பில், பெண் இயக்குனர் சுதா கோங்கரா'வின் இயக்கத்தில், நடிகர் மாதவன், நாசர், ராதாரவி, காளி வெங்கட், நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சார்கர்  ஆகியோரின் நடிப்பில், சந்தோஷ் நாராயணனின் இசையில் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கும் படம் "இறுதிச்சுற்று". ஒரு குத்துச்சண்டை வீராங்கணையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் இசைத்தகடு வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸ்-ல் நடைபெற்றது.

       விழாவில் பங்கேற்று பேசிய அனைவரும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு, படத்தின் முக்கிய அம்சங்கள், கதை, படம் எடுக்கப்பட்ட சூழ்நிலைகள் என அனைத்தையும் விளக்கமாக கூறினர்.. இப்படத்திற்கு பாடல் இயற்றிய பாடலாசிரியர்கள் பேசும் பொழுது, பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், எங்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர். மேலும் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான C.V.குமார், படத்தின் கதையக் கேட்டதும், மற்றொரு தயாரிப்பாளரான சசிகாந்திடம் கலந்தாலோசித்து தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் தயாரித்து வெளியிட முடிவு செய்து ராஜ்குமார் ஹிராணியுடன் கைகோர்த்ததாகவும், எங்களுடன் முழு ஒத்துழைப்பு தந்த ஹிராணிக்கும், இயக்குனர் சுதா, மற்றும் நடிகர் மாதவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் படமும் பாடலும் சிறப்பாக வந்திருப்பதுடன் படம் இருமொழியிலும் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் கூறினார்.

      அடுத்ததாக பேசிய இப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரில் ஒருவரான மாதவன், நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கும் தான் இப்படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கு பயிற்சியாளராக நடித்திருப்பதாகவும் படம் பிரமாதமாக அமைந்திருப்பதாகவும், மேலும் இயக்குனர் சுதா, தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர், நடிகைகள் ரித்திகா, மும்தாஜ் மற்றும் அனைத்து தமிழ் ரசிக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து விழாவில் பங்கேற்று பேசிய நடிகைகள் ரித்திகா, மும்தாஜ், இயக்குனர் என அனைவரும் படத்தில் தங்களோடு இணைந்து பணியாற்றியவர்களுக்கும், படம் சிறப்பாக அமைய உறுதுணையாய் இருந்த அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறி அமர்ந்தனர். படத்தின் இயக்குனர்  சுதா'விடம் படம் தாமதமாக எடுத்ததற்கான காரணம் என்னவென்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர், படம் 2014ல் எடுக்கப்பட்டது, பின் சில காட்சிகள், மற்றும் சில காரணங்களால் தாமதமாக எடுக்கப்பட்டது என்று கூறினார். மற்றொரு கேள்விக்கு படம் முழுக்க முழுக்க தமிழில் உருவானது என்றும் சென்னையிலேயே படம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

   மாதவனிடம் தன் கதாபாத்திரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகவும், அதுவும் பொறுக்கி போன்ற கதாபாத்திரம் என்றும், தான் பயிற்றுவிக்கும் குத்துச்சண்டை வீராங்கனையே தன்னை காதலிப்பது, அதற்கான காரணம் எனவும்,  விளையாட்டைப் பற்றி வந்த மற்ற படங்களைப் போலல்லாமல் இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

- லெனின்