23.1.16

மூன்றாம் உலகப்போர் விமர்சனம்

பக்கத்து வீட்டு பாகிஸ்தானின் பழைய பஞ்சாயத்தை பார்த்து பழகிய நமக்கு,  எதிர் வீடான சீனாவுடனான புது பஞ்சாயத்தை காட்டும் கற்பனைதான்  "மூன்றாம் உலகப்போர்".


ஆர்ட்டின் ஃப்ரேம்ஸ் மற்றும் TRS ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுகன் கார்த்தி இயக்கத்தில், நாயகன் சுனில் குமார், நாயகி அகிலா கிஷோர் நடித்து, வேத் ஷங்கர் இசை மற்றும் தேவா ஒளிபதிவில் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். வரும் 2025ல் வரப்போகும் மூன்றாம் உலகப்போர் இந்தியா - சீனாவிற்கும் தான் வரும் என்ற கற்பனை கலந்த கலவைதான் இந்த திரைப்படம். .

இந்திய ராணுவத்தில் மேஜரான கதாநாயகன் சுனில் குமார், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வர கதாநாயகி அகிலா கிஷோரை திருமணம் செய்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்து மீண்டும் பணிக்கு செல்கிறார் சுனில் . அதே நேரத்தில் சீன ராணுவ தளபதி வில்சன், இந்தியாவில் நாசவேலை செய்து நிலைகுலைய வைக்க தனது மகனோடு 100 சீன வீரர்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் அனைவரையும் கண்கானிக்க ஒவ்வொருவரின் உடம்பிலும் கம்யூட்டர் சிப் ஒன்றை பொருத்தி அனுப்புகிறார்கள். ஆனால் திடீரென அவர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மேஜர் சுனில் & கோ'வை சிறைபிடிக்கிறார் வில்லன் வில்சன்.

           தான் அனுப்பிய 100 வீரர்களின் நிலை என்ன என்பதை அறிய சிறைபிடிக்கப்பட்ட மேஜர் சுனில் மற்றும் மற்ற வீரர்களை கொடுமைபடுத்தும் வில்சன், கதாநாயகனைத் தவிர அனைவரையும் கொன்றுவிடுகிறார். பின் இந்தியாவில் ஊடுறுவிய 100 சீன வீரர்களின் நிலை என்ன? சீன ராணுவத்திடம் சிக்கிய இந்திய மேஜர் சுனில் தப்பித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

                     நாயகன் சுனில் ராணுவ தளபதிக்குரிய மிடுக்குடன் அழகாக நடித்திருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் தெளிவற்ற நிலைதான். படத்தில் இவருக்கென ஒரு நாயகி இருந்தாலும் இவர்கள் இருவருக்குமான காட்சிகள் மிக குறைவு .
                        நாயகி அகிலா கிஷோர் சில காட்சிகளே தோன்றினாலும் மனதில் பதியும் கதாபாத்திரம். வில்லன் வில்சன் சீன தளபதியாக வந்து மிரட்டுகிறார். படத்தில் இவரும் நாயகனும் பேசிக் கொள்ளும்   வசனங்கள் இந்தியர் ஒவ்வொருவரின் குருதியை அனலாக்கும் ரகம். 2025ல் நடக்கும் போர் என்றாலும் காட்சிகளில் அதற்க்குன்டான தொழில்நுட்பமும், தெளிவும் இல்லாதது மிகப்பெரும் குறை. ஃகிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் வீடியோ கேம் போன்றே தோன்றுகிறது. வேத் சங்கரின் இசை இறைச்சலைத் தருகிறது. பின்னணியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு அனுபவ குறைவு. ஆனால் படத்தின் மிகப்பெரும் பலம் "வசனம்".

மொத்தத்தில் "மூன்றாம் உலகப்போர் - 2025ம் ஆண்டின் நியூ வெர்ஸன் வீடியோ கேம்".