15.1.16

தாரை தப்பட்டை விமர்சனம்

கம்பெனி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், B ஸ்டுடியோஸ் வழங்கும் , பாலா'வின் "தாரை தப்பட்டை"


    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என ஆக்ரோஷ பட வரிசைகளில் தனது சிஷ்யன் சசிகுமாரையும், வரலஷ்மியையும் வைத்து ஆரவாரமாக களமிறங்கியிருக்கிறார் பாலா. பாலாவின் படம் என்பதை மீறி இசைஞானி இளையராஜா'வின் 1000மாவது என்கிற பரபரப்பில் களம் கண்ட இப்படம் பட்டையை கிளப்பியதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

கிராமத்திய கலைஞன் என்கிற புலவர் சாமியின் மகன் சசிக்குமார், தந்தையிடம் அனைத்து கலைகளையும் கற்றிருந்த சசிக்குமாரும் அவர் நடத்தும் இசைக்குழுவும் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், அந்தமானில் கச்சேரி நடத்த ஒரு வாய்ப்பு வருகிறது.

சசிகுமார், வரலஷ்மி மற்றும் அவரது குழுவினர் அந்தமான் செல்கின்றனர். சென்ற இடத்தில் கச்சேரிக்கு அழைத்து வந்தவர் வரலஷ்மியை தவறாக அணுக பிரச்சனை வருகிறது,வரலஷ்மி அவர்களை அடித்து உதைக்க, கோபத்தில் கச்சேரிக்கு அழைத்து வந்தவர் சசிகுமார் மற்றும் குருவினரின் கப்பல் டிக்கெட்டை கிழிக்க, பின் கஷ்டப்பட்டு பணம் திரட்டி ஊர் வந்து சேர்கின்றனர்.

 இந்நிலையில் வரலஷ்மியின் ஆட்டத்தை பார்த்து அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு வரலஷ்மியின் அம்மாவிடம் கேட்கும் ஆர்.கே.சுரேஷ், தான் கலெக்டரின் டிரைவர் என்றும் தனக்கு வரலஷ்மியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்க, வரலஷ்மியின் அம்மாவும் சசிகுமாரிடம் பேசி வரலஷ்மிக்கும் ஆர்.கே.சுரேஷிற்கும் திருமணம் செய்து வைக்கிறார்.முதலிரவு அன்று ஆர்.கே.சுரேஷின் சுயரூபம் தெரிய வரலஷ்மியின் நிலை என்னவானது? சசிகுமார் வரலஷ்மியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதி கதை.

      எல்லா படங்களிலும் நட்பை மட்டுமே தோழில் சுமந்து வந்த சசிகுமார் முதன் முறையாக "தப்பை" தோழில் மாட்டி, தாறுமாறாக அடித்தும், நடித்தும் நொறுக்கியிருக்கிறார். வரலஷ்மி மீது காதலை வைத்து வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் சூழலிலும், தந்தையிடம் காட்டும் கோபம், அவர் இறந்த பின் காட்டும் அன்பு, வரலக்ஷ்மியை இன்னொருவருக்கு கல்யாணம் செய்து வைக்கும் பொழுது வரும் கண்ணீர் என ஒட்டு மொத்த நடிப்பையும் கொட்டிவிட்டார்.

     வரலஷ்மி சசிகுமாரிடம் மாமா          மாமா என உருகுவதும், மாமனாருடன் உட்காந்து தண்ணி அடிப்பதும், என ஒரு ரெளடி தோரணையில் வரும் இவர் தன் நடிப்பால் முதல் பாதியில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டார்.   குறிப்பாக இசைஞானியின் கிராமிய இசைக்கு ஈடுகொடுத்து ஆடும் இவரின் ஆட்டம் இனி எந்த நடிகையாலும் இயலாத காரியம். முதல் பாதியில் மரண ஆட்டம் போட்ட வரலஷ்மி பின்பாதியில் காணாமல் போனது படத்திற்கு பலவீனம்.

இசைஞானியின் கிராமத்து இசை பசிக்கு சரியான தீனி இப்படம் . பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல், " அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை கிழிந்து தொங்க வேண்டாமா..?" என்ற வடிவேலுவின் பிரபல வசனத்திற்கு ஏற்றாற்போல் உண்மையிலேயே கிழித்து தொங்க விட்டிருக்கிறார் இசைஞானி.செழியனின் ஒளிப்பதிவில், ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பும் பிரமாதம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி ஒரிஜினல் பாலா'வை நம் கண் முன் நிறுத்தும். கற்பனைக்கு எட்டியதை தத்ரூபமாக காட்சி படுத்தும் கருணையற்றவர் இயக்குனர் பாலா என்பதற்கு இந்த க்ளைமாக்ஸும் சாட்சி.

மொத்தத்தில் "தாரை தப்பட்டை" இசைஞானியின் இசைக்காகவும்,
வரலஷ்மியின் ஆட்டத்திற்காகவும் பார்க்கலாம்.