1.1.16

தற்காப்பு விமர்சனம்

         
     கைண்ட்டோஸ்கோப் ப்ரொடக்ஸன்ஸ் -  டாக்டர் எஸ்.செல்வமுத்து மற்றும் மஞ்சுநாத் தயாரிப்பில்,  R.P.ரவி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் "தற்காப்பு ". நடிகர்  சக்தி வாசு, ஆதித், மற்றும் சுவராஜ் கதாநாயகன்களாகவும், வைசாலி தீபக் மற்றும் அமிதா ஆகிய இருவர் கதாநாயகிகளாகவும், மேலும் சமுத்திரக்கனி, ரியாஷ் கான் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம்.

         நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கும் சக்தி, தன் உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்யும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெலிஸ்ட் போலீஸ் அதிகாரி. இந்நிலையில் தன் உயரதிகாரிகளின் உத்தரவுக்கிணங்கி ரியாஷ்கானை போலி என்கவுன்ட்டர் செய்கிறார்.

   பின் இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கு மனித உரிமை கழகத்திடம் சிக்க, அதன் அதிகாரியான சமுத்திரக்கனி இது சம்பந்தமாக சக்தி உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகளை விசாரித்து இது போலி என்கவுன்ட்டர் என்பதை உறுதி செய்கிறார்.

ஆனால் தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் தவிக்கும் சமுத்திரகனி சக்தியிடம், உங்கள் உயர் அதிகாரிகள் சிலர் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களின் தூண்டுதலின் பெயரில் உங்களை ஒரு கூலிப்படையாகப் பயன்படுத்தி இந்த என்கவுன்ட்டர்களையெல்லாம் செய்ய வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.

இதையறிந்த காவல்துறை அதிகாரிகள், எங்கே தங்களுக்கு எதிராக சக்தி கோர்ட்டில் சாட்சி சொல்லிவிடுவானோ என எண்ணி, சக்தியை குற்றவாளியாக்கி என்கவுன்ட்டர் செய்ய முடிவு செய்கிறார்கள். பின் இந்த என்கவுன்ட்டரிலிருந்து சக்தி தப்பித்தாரா?  இல்லையா? என்பது பரபரப்பான மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் சக்திக்கு மிடுக்கான போலீஸ் கதாபாத்திரம் ஓரளவிற்க்கே பொருந்தியிருக்கிறது. இவரின் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.

ஆனால் படத்தில் இவருக்கென ஒரு ஜோடியில்லை என்பது ஏமாற்றமே.
மனித உரிமைக் கழக அதிகாரியாக வரும் சமுத்திரகனி வழக்கம்போல் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன் நடிப்பாலும், வசனத்தாலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இவர்களைத் தவிர வரும் ஆதித், சுவராஜ், வைசாலிதீபக், மற்றும் அமிதா ஆகிய நால்வரும் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்திருந்தாலும் என்கவுன்ட்டர் சம்பந்தப்பட்ட இந்த ஆக்ஷன் படத்தில் இவர்களுக்கான காதலும், காட்சிகளும் புகுத்தப்பட்டிருப்பது படத்தின் வேகத்தை குறைத்திருக்கிறது.

பெரும் செல்வந்தர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும், என்கவுன்ட்டர் மூலம் பல நிரபராதிகள் கொல்லப்படுவதையும், பல குற்றவாளிகள் தப்பிப்பதையும் மிக அழுத்தமாக பதித்திருக்கும் இயக்குனரின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.

    ஆனால் ஒரு கணமானகதை காட்சிபடுத்தப்பட்ட விதத்திலே ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்குமா என்பது சந்தேகமே. பைசல் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் ரசிக்கும் விதம் அமைந்திருக்கிறது. ஜோன்ஸ்ஆன்ந்த்'ன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் "தற்காப்பு" தன் வெற்றியை சில நாட்களுக்கே தற்காத்துக் கொள்ளும்.

- லெனின்