29.4.16

மனிதன் விமர்சனம்


       ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதி, ஹன்சிகா மோத்வானி மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம். வாமனன், என்றென்றும் புன்னகை படங்களின் மூலம் அறிமுகமாகிய இயக்குனர் ஐ.அஹமது இயக்கத்தில், சுபாஷ் கபூரின் "ஜாலி LLB" என்ற ஹிந்தி திரைப்படத்தின் கதை தழுவலை கொண்டு. ராதா ரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து, மதி ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இன்று வெளியாகிருக்கும் திரைப்படம் "மனிதன்".

பொள்ளாச்சியில் வழக்கறிஞராக இருந்துவரும் சக்தி (உதயநிதி) தன்னுடைய மாமா மகளான ப்ரியா (ஹன்சிகா)-வை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன், அதே நேரத்தில் எப்படியாவது ஒரு வழக்கிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார். அவர் வழக்கில் தோல்வி அடைவதை அவரின் நண்பர்கள் கிண்டல், கேலி செய்ய. இதில் மணமுடைந்து போகும் உதயநிதி சென்னைக்கு வருகிறார். சென்னையில் அவருடைய  உறவினர் வழக்கறிஞரான  சூர்யா (விவேக்) உடன் சேர்த்து, வழக்குகளை தேடி அலைகிறார். மிகப்பெரிய வழக்கறிஞரான ஆதிசேஷன் (பிரகாஷ் ராஜ்) ஒரு தொழிலதிபரின் மகன் குடிபோதையில்  சாலையோரம் உறங்கிகொண்டிருக்கும் 5 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் வாதாடி விடுதலை வாங்கி கொடுக்கிறார்.

  இந்த வழக்கை கையிலெடுத்து வெற்றிபெற்றால், அவரின் லட்சியம் நிறைவேறும் என்ற ஆசையில் இந்த வழக்கில் பிரகாஷ் ராஜை எதிர்த்து  வாதாடுகிறார் உதயநிதி. இந்த வழக்கால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார் உதயநிதி. பத்திரிகை நிருபராக வரும் ஜெனிபர் (ஐஸ்வர்யா ராஜேஷ்) உதவியுடன் உதயநிதி இப்பிரச்சனைகளை சமாளித்து இறுதியில் எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை விறு விருப்புடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அஹமது.

இதுவரை பார்த்த உதயநிதி இல்லாமல், இப்படத்தில் ஒரு உணர்ச்சிவசமான வழக்கறிஞராக கைத்தட்டல் பெறுகிறார் உதயநிதி. ஹன்சிகா மோத்வானி ஒரு காதலனை நல்ல பாதையில் வழிநடத்தும் காதலியாக தன்னுடைய கதாபத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறார். ராதா ரவி மற்றும் பிரகாஷ் ராஜின் நடிப்பு பலே. குறிப்பாக ராதா ரவி அவர்கள் கோர்ட்டில் பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சி "மிரட்டல்".

இயக்குனர் படத்திற்கு தேவை என்னவென்று புரிந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் வரும் பாடல்கள் சற்று ஓகே தான் என்றாலும் பின்னணி இசை அவர் செய்த வேலையை காட்டுகிறது. மொத்தத்தில் இத்திரைப்படம் ஒரு "நல்ல" மனிதன்.

24.4.16

என்னுள் ஆயிரம் விமர்சனம்


     
       காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வரும் நாயகன் மஹா, தன் தாய் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வேலை தேடி வரும் வழக்கமான சினிமா பாணியில் தொடங்குகிறது படம். சென்னையில் யாரையும் தெரியாத நாயகன், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார். டிபன் கடை வைத்திருப்பவரோ, மஹாவை நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். ஒருநாள் தன்னுடன் வேலை பார்ப்பவரின் திருமணத்திற்காக கேரளா செல்லும் நாயகன். அங்கு நாயகி மெரீனா மைக்கேலை சந்திக்கிறார். ஏற்கனவே ஒருமுறை இருவரும் சந்தித்திருந்த காரணத்தால், இந்த முறை அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், மெரீனாவிற்கு அவரது வீட்டில் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் மஹாவும் மெரீனாவும் ஊரை வீட்டு ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யும் மஹா, பிரச்சினைகளில் சிக்க, போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது.  இறுதியில் அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு நாயகி மெரீனாவை மஹா கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

       நாயகன் மஹாவிற்கு இது முதல் படம். வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகியான மெரீனா மைக்கேல் காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை  கவர்ந்திருக்கிறார் வின்சென்ட் அசோகன்.
   
       மாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண குமார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பே மிச்சம். நீண்ட காட்சிகளும் லாஜிக் மீறல்களும் மிகப் பெரிய பிழை. கோபி சுந்தர் இசையில் பாடல்களும்,பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிசயராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.  மொத்தத்தில் "என்னுள் 1000  (ஆயிரம்)" ஜீரோ தான்!!!

23.4.16

வெற்றிவேல் விமர்சனம்

   
            ஓய்வு பெற்ற ஆசிரியரான இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக பணியாற்றும் மியா ஜார்ஜை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு சமயத்தில் மியாவும் சசிகுமாரின் காதலுக்கு ஓகே சொல்கிறார். பின் ஒருநாள் தனது சொந்த ஊருக்கு செல்லும் மியா ஜார்ஜ் திரும்பி வருவதற்குள் சசிக்குமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.  வெளியூரில் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், அந்த ஊர் தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார். அவளும் இவரை காதலிக்கிறாள். இவர்களது காதல் சசிகுமாரின் வீட்டுக்கு தெரியவரவே, பிரபுவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார் இளவரசு.
   
           ஆனால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி பிரபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த விஷயம் சசிகுமாருக்கு தெரியவரவே, தம்பியின் காதலுக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஊர் திருவிழாவின் போது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்துகிறார். ஆனால், கடைசியில் பார்க்கும்போது இவர்கள் பிரபுவின் மகளுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணான நிகிலாவை கடத்தி வந்துவிடுகின்றனர்.
     
         அவள், பிரபுவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர்.  தவறு நடந்துவிட்டதை நிகிலாவுக்கு விவரிக்கிறார் சசிகுமார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஊர்க்காரர்களுக்கு அதைச் சொல்லி புரிய வைப்பதாக அழைத்து செல்கிறார். ஆனால், நிகிலா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டதாக கூறி, விஜி சந்திரசேகர் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

      இதனால் நிகிலாவின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. போலீஸ் விசாரணையில் நிகிலா, சசிகுமாருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றதாக கூறி அவரை மாட்டிவிடுகிறார். இதனால், என்னசெய்வதென்று முழிக்கும் சசிகுமாரிடமே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார்.  இறுதியில், சசிகுமார் நிகிலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா? மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா? தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

        நாயகன் சசிகுமார் வழக்கமான கிராமத்து கதைக் களத்திற்கு ஏற்ற நடிப்பு. அந்த வகையில் இந்த படத்திலும் தனது பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். ஆனால், குளோசப் காட்சிகளில் காட்டும்போது சரியான முகபாவனைகளை காட்ட ரொம்பவும் சிரமம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல், டான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார்.  நாயகியான மியா ஜார்ஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும், தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். புதுமுக நடிகைகளான நிகிலா, வர்ஷா ஆகியோரும் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரபு தனது மகளுக்கு வேண்டியதை செய்துகொடுக்கும் பொறுப்புள்ள தந்தையாகவும், ஊரில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் முதல் ஆளாக தட்டிக்கேட்கும் தலைவராகவும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.  

       தம்பி ராமையா வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. விஜி சந்திரசேகர் வில்லியாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பாணியில் ஒரு நல்ல குடும்பப் பாங்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வழக்கமான சசிகுமார் படங்களிலிருந்து இப்படத்தை மிகவும் மாறுபட்டு எடுத்திருக்கிறார். அந்த படங்களின் தாக்கம் தன்னுடைய படத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், முதலில் படம் மெதுவாக நகர்ந்தாலும், 30 நிமிடங்களுக்கு பிறகு விறுவிறுப்படைகிறது. அழகான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.  டி.இமான் இசையில் பாடல்கள் ஏனோ ரசிக்க தூண்டவில்லை. பின்னணி இசை ஓகே. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தஞ்சை அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறது.  மொத்தத்தில் "வெற்றிவேல்" வெற்றிநடை!!!

9.4.16

சீனியர் "பா"விற்கு, ஜூனியர் "பா" விடுத்த இறுதி எச்சரிக்கை.


சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இது சம்பந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை ப்ரசாத் லேபில் நடைபெற்றது, அப்பொழுது பேசிய இயக்குனர் பாலா, இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா மற்றும் கதாசிரியர் திரு.ரத்னகுமாருக்கும் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதன் முழு விவரம்:


" பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! உங்களையெல்லாம் சந்தோஷமான தருணத்தில் சந்திக்க நினைத்திருந்த நான் இன்று மனவேதனையோடு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது காரணம் இந்த விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். 'கூட்டாஞ்சோறு' என்று  திரு.வேலாராமமூர்த்தி அவர்கள்  எழுதிய நாவலை படித்தேன், அந்த நாவல் அடுத்த பதிப்பில் 'குற்றப்பரம்பரை' என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு பகுதியைமட்டும் நான் திரைக்கதையாக்கி எனது கற்பனையைக் கொண்டு படமாக எடுக்கப் போகிறேன் என்று அண்ணன் வேலாராமமூர்த்தியை அழைத்து கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் பாரதிராஜா, ரத்னகுமார் ஆகிய இருவர் கூட்டணி எடுக்கப்போவது நடந்த உண்மைச் சம்பவத்தை உள்ளடக்கிய் வரலாறு.

இப்பொழுது நான் அவர்களுக்கு தெளிவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். "நீங்கள் வரலாற்றை படமாக எடுக்கப்போகிறீர்கள். நான் அந்த நிகழ்வின் ஒரு பகுதியை படமாக எடுக்கிறேன். வரலாற்றுச் சம்பவங்களை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம், அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நான் செய்வது வேறு.

இதுசம்பந்தமாக ஏற்கனவே பாரதிராஜா என்னிடம் பேசியபோதே ‘நான் குற்றப்பரம்பரை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அப்படியிருந்தும் பாரதிராஜா ‘என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என்று நினைக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார். கடந்தவாரம் தனஞ்ஜெயன் என்னை அழைத்து, ‘குற்றப்பரம்பரை படத்திற்கு பாரதிராஜா பூஜை போடுகிறார்’ என்று சொன்னபோதுகூட, ‘என்னை அழைத்தால் நானும் பூஜைக்கு நிச்சயம் வருவேன்’ என்றுதான் தனஞ்ஜெயனிடம் கூறினேன்.
அதை தனஞ்ஜெயனும் பாரதிராஜாவிடன் சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா ‘அப்படியா சொன்னான்? சரி, எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. கூப்டலாமா வேணாமா’ன்னு யோசிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு தனஞ்ஜெயனை தொடர்பு கொண்ட பாரதிராஜா ‘பாலா அங்கு வந்தால் யாராவது ஏதாவது பேசிவிட்டால் இருவருக்கும் மனஉளைச்சல். அதனால் கூப்பிடவேண்டாம்’ என்றிருக்கிறார். ஆனால் ரத்னகுமாரோ, ‘பாலா ஷூட்டிங்குக்கு வரட்டும். வந்து பாரதிராஜாவின் ஷூ துடைக்கட்டும்’ என்றும், ‘பாலா ஒரு கதைத் திருடன், பாலாவுக்கு ‘கூறு’ கிடையாது’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

ரத்னகுமார் தொடர்ந்து இதுபோல என்னை அவதூறாகப் பேசுவதை, பாரதிராஜா கண்டும் காணாமல் இருப்பது அவர் இவற்றை அனுமதிப்பது போலவே தெரிகிறது. இன்றைக்கு பாரதிராஜாவை அழைத்தேன். இரண்டு முறை எடுக்காதவர், மூன்றாவது முறை, எடுக்கிறார். ‘மூணாவது தடவையா கூப்றான்யா’ என்ற அவர் குரல் மட்டுமே கேட்க. உடனே கால் கட் செய்துவிட்டார்.

இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால், மழுமட்டையாக ஆகிவிடுவேன் என்பதால்தான் இந்த ப்ரஸ் மீட்'டிற்கு ஏற்பாடு செய்தேன்.

மேலும் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் எடுப்பது வேறு. நான் எடுப்பது வேறு. என் படத்தின் தலைப்பு குற்றப்பரம்பரை அல்ல. வேறு தலைப்பு வைக்கப் போகிறோம்.


இரண்டாவது, இந்த ப்ரஸ்மீட்டின் மூலம், பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் இறுதி எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் உங்கள் படத்தை எடுங்கள். நான் என் படத்தை எடுக்கிறேன். இதனிடையில் என்னைக் காயப்படுத்துவது, உங்களுக்கு நல்லதல்ல. மேற்கொண்டு எதுவும் என்னைப் பற்றியோ, என் படத்தைப் பற்றியோ பேசாதீர்கள். இதுவே இறுதியாக இருக்கட்டும் " என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

பின், பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொருவராக கேள்வி கேட்க, மனவேதனையும், கோபமும் கலந்த பதில்களையே தந்தார் பாலா.
இந்த சந்திப்பின்போது, தனஞ்ஜெயனும் உடனிருந்தார்