29.4.16

மனிதன் விமர்சனம்


       ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதி, ஹன்சிகா மோத்வானி மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம். வாமனன், என்றென்றும் புன்னகை படங்களின் மூலம் அறிமுகமாகிய இயக்குனர் ஐ.அஹமது இயக்கத்தில், சுபாஷ் கபூரின் "ஜாலி LLB" என்ற ஹிந்தி திரைப்படத்தின் கதை தழுவலை கொண்டு. ராதா ரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து, மதி ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இன்று வெளியாகிருக்கும் திரைப்படம் "மனிதன்".

பொள்ளாச்சியில் வழக்கறிஞராக இருந்துவரும் சக்தி (உதயநிதி) தன்னுடைய மாமா மகளான ப்ரியா (ஹன்சிகா)-வை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன், அதே நேரத்தில் எப்படியாவது ஒரு வழக்கிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார். அவர் வழக்கில் தோல்வி அடைவதை அவரின் நண்பர்கள் கிண்டல், கேலி செய்ய. இதில் மணமுடைந்து போகும் உதயநிதி சென்னைக்கு வருகிறார். சென்னையில் அவருடைய  உறவினர் வழக்கறிஞரான  சூர்யா (விவேக்) உடன் சேர்த்து, வழக்குகளை தேடி அலைகிறார். மிகப்பெரிய வழக்கறிஞரான ஆதிசேஷன் (பிரகாஷ் ராஜ்) ஒரு தொழிலதிபரின் மகன் குடிபோதையில்  சாலையோரம் உறங்கிகொண்டிருக்கும் 5 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் வாதாடி விடுதலை வாங்கி கொடுக்கிறார்.

  இந்த வழக்கை கையிலெடுத்து வெற்றிபெற்றால், அவரின் லட்சியம் நிறைவேறும் என்ற ஆசையில் இந்த வழக்கில் பிரகாஷ் ராஜை எதிர்த்து  வாதாடுகிறார் உதயநிதி. இந்த வழக்கால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார் உதயநிதி. பத்திரிகை நிருபராக வரும் ஜெனிபர் (ஐஸ்வர்யா ராஜேஷ்) உதவியுடன் உதயநிதி இப்பிரச்சனைகளை சமாளித்து இறுதியில் எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை விறு விருப்புடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அஹமது.

இதுவரை பார்த்த உதயநிதி இல்லாமல், இப்படத்தில் ஒரு உணர்ச்சிவசமான வழக்கறிஞராக கைத்தட்டல் பெறுகிறார் உதயநிதி. ஹன்சிகா மோத்வானி ஒரு காதலனை நல்ல பாதையில் வழிநடத்தும் காதலியாக தன்னுடைய கதாபத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறார். ராதா ரவி மற்றும் பிரகாஷ் ராஜின் நடிப்பு பலே. குறிப்பாக ராதா ரவி அவர்கள் கோர்ட்டில் பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சி "மிரட்டல்".

இயக்குனர் படத்திற்கு தேவை என்னவென்று புரிந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் வரும் பாடல்கள் சற்று ஓகே தான் என்றாலும் பின்னணி இசை அவர் செய்த வேலையை காட்டுகிறது. மொத்தத்தில் இத்திரைப்படம் ஒரு "நல்ல" மனிதன்.