27.5.16

உறியடி விமர்சனம்     ஷாவ்னயர் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர், இயக்குனர் விஜய் குமார், நடிகை ஹென்னா ஃபெல்லா, நடிகர் மைம் கோபி மற்றும் பல புதுமுக நடிகர்களின் கலவையில், ஆண்டனி தாசன் இசையமைக்க, ஃபால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவில் உருவாகி வெளிவந்திருக்கிறது "உறியடி".

        திருச்சி அருகில்  உள்ள கல்லூரி ஒன்றில் கதாநாயகன் ப.விஜய் குமார்  தன் மூன்று நண்பர்களுடன் விடுதியில் தங்கி படித்து வருகிறார். வகுப்பு நேரத்தை தவிர மைம் கோபி நடத்தி வரும் (தாபா) பாரில் அதிக நேரத்தை செலவழித்து குடித்து வருகிறார்கள்.
                     
       ஒரு சமயம் அந்த பாரில் விஜய் குமார் மற்றும் அவரின் நண்பர்களுக்கும், அவர்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்குமிடையே  சண்டை ஏற்படுகிறது. அதன் பின் ஒருநாள் இதே பிரச்சினையை வைத்து நாயகனின் நண்பர்களில் ஒருவனை எதிர்தரப்பு மாணவர்கள் கொலை செய்துவிடுகிறார்கள்.
                 
        இந்த பிரச்சினையை  துருப்புச் சீட்டாக பயன்படுத்தி தன் அரசியல் வாழ்க்கையை தொடங்க நினைக்கும் மைம் கோபி. மாணவர்களுக்குள் ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் இந்த கலவரம் எப்படி முடிந்தது? மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
               
        படத்தில் நாயகன் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் ஓனராக வரும் மைம் கோபி வழக்கமான வில்லத்தனத்தை அருமையாக  வெளிப்படுத்தியிருப்பது இப்படத்திற்கு பெரிய பலம்.
                     
      அடிதடி, அரசியல் சூழ்ச்சி, வன்முறை கலந்த கதைகளத்தை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் குமார். தனிக்கை குழுவால் 'ஏ' சான்றிதழுடன் வெளிவந்திருக்கிற இப்படத்தில்  சண்டை, வெட்டு குத்து  கலவரம் என வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்ப்பவர்களுக்கு  சலிப்பை மட்டுமே தருகிறது. ஒரு படத்திற்கு கதாநாயகி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே கதாநாயகி ஹென்னா ஃபெல்லா வந்து போகிறார்.
           
     ஆண்டனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். விஜய் குமாரின் பின்னணி இசை ஓரளவே ஒத்துப்போகிறது. ஃபால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். மொத்தத்தில் "உறியடி" அரசியல் கலந்த "அதிரடி ".