18.6.16

"எனக்கு இன்னொரு பேர் இருக்கு" விமர்சனம்.                    டார்லிங் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் அன்டன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து லைக்கா புரடக்ஸன் தயாரிப்பில் நேற்று  உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிருக்கும் திரைப்படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு". இத்திரைப்படத்தில் "கயல்"ஆனந்தி, "பருத்திவீரன்" சரவணன், விடிவி கணேஷ், "நான் கடவுள்" ராஜேந்திரன்,  கருணாஸ், யோகி பாபு, நிரோஷா,சார்லி, வில்லன் துரையாக ஆர்.லாரன்ஸ், லொல்லு சபா சுவாமிநாதன், மனோகர் என பல நடிகர்கள்  நடித்துள்ளார்.
                   
                   ராயபுரத்தில் நைனா தான் எல்லாம், ஏற்கனவே நைனாவாக இருப்பவரை சரவணன்(தாஸ்), விடிவி கணேஷ்(பெஞ்சி), ராஜேந்திரன்(மகாபலி மஹா) கூட்டணி திட்டம் போட்டு காலி செய்ய, அந்த நைனா நாற்காலிக்கு சரவணன் வருகிறார், மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள். பின்னர் விடிவி கணேஷ் மகன் ஜி.வி.பிரகாஷ்க்கு(ஜானி), சரவணனின் ஒரே மகளான  ஆனந்தி(ஹேமா) மீது காதல் கொள்கிறார். இரத்தத்தைப் பார்த்தாலே வலிப்பு மாதிரி வந்து சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லும்  நோய் உள்ளவராக ஜி.வி.பிரகாஷ் இருக்க,  சரவணன் தன் மகள் ஆனந்தியை திருமணம் செய்பவன்  ராயபுரத்தை  அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.

                 ஜி.வி.பிரகாஷ் தான் சரியான ஆள் என சரவணனின் எடுபிடிகளான கருணாஸ், யோகிபாபு ஆகியோரால்  தவறாக அடையாளப்படுத்தப்படுவதால் இருவருக்கும் எளிதாக திருமணம்  முடிகிறது. பின்னர் அனைவருக்கும்  அவரது பலவீனம் பற்றி தெரியவர.
இறுதியில் எவ்வாறு அவர் ராயபுரம் நைனாவகிறார் என்பதே மீதிக்கதை.
                 
                  இயக்குனர் சாம் அன்டனின் கதை , இளைஞர்களுக்கு மட்டுமான ஒரு லாஜிக் இல்லாத திரைப்படமாக அமைத்துள்ளது. வேதாளம்,கபாலி, கத்தி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, மாரி, ரமணா போன்ற  படங்களில் வரும் வசனக்காட்சிகளை கொண்டு  நகைச்சுவையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார். நைனா வாரிசுக்கு ரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்டி ஷோவாக நடத்துவது என காமெடி கலாட்டா செய்துவிட்டார்கள்.  ஜி.வி.பிரகாஷின் பாடல்களை பற்றி சொல்லும்  அளவிற்கு  பெரிதாக ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை அருமை.


        மொத்தத்தில் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" - அங்க அங்க காமெடி மட்டும் தான் இருக்கு!!!

4.6.16

இறைவி விமர்சனம்


     பீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சி.வி. குமார் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் "இறைவி".  விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, வடிவுக்கரசி என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இத்திரைப்படம் நேற்று வெளியாகிருக்கிறது.


  சிற்பத் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். இளைய மகனான பாபி சிம்ஹா கல்லூரி மாணவர். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் இயக்கிய ஒரு படம் அப்படத்தின்   தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,  வெளிவராமல் தடைபடுகிறது.

 இதனால் விரக்தியடைந்த எஸ்.ஜே.சூர்யா  மதுவுக்கு அடிமையாகிறார். அவரின் நிலையை நினைத்து வருந்தும் அவரது மனைவியான கமலினி முகர்ஜி, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பத்தோடு முயற்சியில் இறங்குகிறார்.

மறுபக்கம் இவர்கள் குடும்பத்தில் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய ஆசைப்படும் வேளையில் இவரை திருமணம் செய்ய மறுக்கிறார் பூஜா. அதன் பின் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் நடுவே விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு சிறை செல்கிறார்.

 இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், திருப்பங்களுமே மீதிக்கதை.

எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பை விட்டுமுற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் குடிகார கதாபாத்திரமாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா, க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களை களங்க வைக்கிறார்.

சற்று முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி. வழக்கம் போல அவருக்கே உரிய யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறையும், தன் மனைவியையும் நினைத்து வருந்தும் காட்சிகள் பிரமாதம். பாபி சிம்ஹா  வில்லத்தனம் கலந்த கல்லூரி மாணவனாக புதுவித கதாபாத்திரத்தில்  வலம் வந்திருக்கிறார்.

ஏழ்மையான குடும்ப பெண்ணாக வரும் அஞ்சலி மேக்கப் இல்லாமல் ஒரு நிஜ வாழ்க்கையை பிரதிபலித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.. தன் கணவன் எஸ்.ஜே.சூர்யாவின் நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கமலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை  துணிச்சலுடன் ஏற்று நடித்திருக்கும் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்.  மற்ற மூத்த நடிகர்களான ராதாரவி, வடிவுகரசியும் தங்கள் அனுபவ நடிப்பை அப்படியே அர்ப்பணித்திருக்கிறார்கள், இவர்களோடு கருணாகரனும் தனக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

குடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் எண்ணம்போல் வாழ நினைக்கும் ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் சிலவற்றை சேர்த்து படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படும். சிவக்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கும் காட்சிகளுக்கும் பலம்.

மொத்தத்தில் "இறைவி" சமூக அவலத்திற்கு சாட்டையடி..