26.9.16

ஆண்டவன் கட்டளை விமர்சனம்       ஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி, யோகி பாபு, மற்றும் சிவஞானம் அரவிந்தன் என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "ஆண்டவன் கட்டளை".

         சமூகத்தில் வாழும் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞனுக்கு இருக்கும் பொறுப்புகளும் ஆசைகளும் நிறைந்த மனநிலையையும், அவர் வாழ்க்கையில் படும் துன்பம் மற்றும் இன்பங்களை மிகவும் எதார்த்தமாகவும்  நகைச்சுவையாக பரிமாரியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர். போலி ஆவணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் தான் இத்திரைப்படத்தின் கதை.

          நாம் அறியாமல் செய்கின்ற சிறிய தவறு, பின்னர் அதுவே வாழ்வில்  பிரச்சனையாக வந்து கஷ்டத்தை தரும்! இதுதான் படத்தின் ஒன் லைன்!

        மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி. தான் வாங்கிய கடனை அடைப்பதர்க்காக வெளிநாட்டுக்கு சென்று பணம் சேர்க்கும் வழக்கமான ஆசையில் சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு ஏஜென்டை அனுகி, அவர்  மூலம் லண்டன் விசாவிற்க்கு முயற்சி செய்கிறார். ஆனால் தனக்கு திருமணம் ஆனது போன்று விசா அப்ளிகேஷனில் காட்டினால்தான் விசா கிடைக்கும் என்று ஏஜென்ட் சொல்ல, அதற்கு கார்மேக குழலி என்று தனது மனதில் தோன்றிய பெயரை குடுத்துவிடுகிறார்.

    இவருடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் வருகிறார். அதிர்ஷ்டவசமாக யோகி பாபுவுக்கு  விசா கிடைத்து விட விஜய் சேதுபதிக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் சென்னையிலேயே தங்கி விசா கிடைக்கும் வரை எதாவது ஒரு வேலைபார்ப்போம் என்று முடிவு செய்கிறார். அப்போதுதான் நாசர் நடத்தும் நாடகக்கூடத்தில் கணக்காளராக வேலை கிடைக்கிறது. விஜய் சேதுபதி ஆர்வத்துடனும் ஈடுபாடுடனும் வேலை செய்வதைப்பார்த்து நாசருக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

        நன்றாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடிரென ஒரு திருப்பம் வருகிறது.  நாசரின் நாடகக்கூடம்  முலம் லண்டனுக்கு செல்ல வாய்ப்பு ஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி தனது  பாஸ்ப்போர்ட்டில் இருக்கின்ற  கார்மேக குழலி என்ற பெயரை மாற்றவேண்டும் என்று முடிவுசெய்கிறார்.

      இதற்கு என்ன செய்யவேண்டும் என்று வக்கீலிடம் போகும் விஜய் சேதுபதி, 'அதற்கு முதலில் டைவர்ஸ் வாங்கணும், அதே பெயரில் இருக்கற எவரோ ஒருவரின் ஐடி வேணும்' என்கிறார்கள். டிவி சேனல் ஒன்றில்  செய்தியாளராக பணிபுரியும் ரித்திகா சிங் பெயரும் கார்மேக குழலி என்று அறிந்து அவரிடம் உதவி கேட்கிறார்கள். இதற்கு அவர் ஒப்புக்கொண்டாரா, பாஸ்போர்ட் என்ன ஆகிறது, லண்டன் போன யோகி பாபுக்கு என்ன ஆகிறது?? நாசர் தனது குழுவினருடன் லண்டன் செல்கிறாரா? என்பதே மீதிக்கதை.

       அருள்செழியனின் கதை  கண்முன் நடக்கிற தவறான வழிகளை நாமும் தேர்ந்தெடுத்தால்  பிரச்சனைகளை மட்டும் சந்திக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். திரைக்கதை மெல்லமாக சென்றாலும், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, தெளிவான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

           விஜய் சேதுபதி வழக்கம் போல தனது பாணியில் நடிப்பை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ரிப்போர்ட்டராக ரித்திகா சிங் துணிச்சலும் தைரியமும் நிறைத்த பெண்ணாக பிரதிபலிக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை பாங்குடன் இருக்கிறது. இலங்கைத் தமிழராக வரும் சிவஞானம் அரவிந்தின்  நடிப்பும் மனதில் நிற்கிறது. நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி ஆகியோருக்கு படத்தில் சொல்லுமளவிற்கு காட்சிகள் இல்லை.

     கே இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை திரைப்படத்தின் பலம். திரைக்கதை, வசனங்கள், கதைக்களம், கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்கள் என்று மொத்தத்தில் "ஆண்டவன் கட்டளை" ஒரு நிறைவான திரைப்படம்.

25.9.16

தொடரி விமர்சனம்


     சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன், ராதா ரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி.உதயகுமார், ஹரிஷ் உத்தமன், ஏ.வெங்கடேஷ் மற்றும் சின்னி ஜெயந்த் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "தொடரி".

           டெல்லியில் இருந்து சென்னை வருகிற ரயிலில், பேன்ட்ரியில் வேலை செய்பவர் பூச்சியப்பன் (தனுஷ்). அவருடன் வேலைபார்ப்பவர்கள் வைரம் (கருணாகரன்) மற்றும் பேன்ட்ரி மேனேஜர் தம்பி ராமையா. அதே ரயிலில் பயணம் செய்யும் நடிகை ஸ்ரீஷாவை தம்பி ராமையா ரூட்விட, தனுஷிடம் உதவி கேட்கிறார். தனுஷ் நடிகையுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் அவரை பார்க்க செல்லும் பொழுது, ஸ்ரீஷாவின் டச்-அப் சரோஜாவை (கீர்த்தி சுரேஷ்) பார்த்தஉடன்  காதலில் விழுகிறார். சினிமாவில் பாட்டு பாடவேண்டும் என்று ஆசை கொண்ட கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர் ஒருவரை தெரியும், அவரை வைத்து வாய்ப்பு வாங்கித்தருகிறேன் என்று பொய்ச்சொல்லி கீர்த்தி சுரேஷிடம் பழகுகிறார் தனுஷ்.

          அதே ரயிலில் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் (ராதாரவி), அவரது பி.ஏ  மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பயணம் செய்கிறார். ராதாராவின்  பாதுகாப்பு அதிகாரியில் ஒருவரான ஹரிஷ் உத்தமன் தனுஷை பார்த்தாலே பிடிக்கவில்லை என்று தனுஷிடம் சண்டையிடுகிறார். தனுஷும் அவரிடம் வம்பு செய்ய ஒருகட்டத்தில் தனுஷயும், கீர்த்தி சுரேஷையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.

        இதற்கிடையே தண்டவாளத்தில் இருக்கும் மாடு மீது ரயில் மோத, எல்.பி.(லோகோ பைலட்) ஆர்.வி.உதயகுமாருக்கும், ஏ.எல்.பி.(அசிஸ்டெண்ட் லோகோ பைலட்) போஸ் வெங்கட்டுக்கும் சண்டை வருகிறது. அவர் இருந்தால் ரயிலை எடுக்கமாட்டேன் என்று ஆர்.வி.உதயகுமார் கூறுகிறார். இதனால் ட்ரெயின் காட் இருக்கிற பெட்டிக்கு செல்லும் போஸ் வெங்கட், அங்கு அவரிடமும் சண்டை இடுகிறார். ஒருகட்டத்தில் ரயிலில் இருந்து இருவரும் வெளியே விழுகிறார்கள்.இதை அரியாமல் ஆர்.வி.உதயகுமார் ரயிலை எடுத்துவிடுகிறார்.

       எதிர்பாராமல் ஆர்.வி.உதயகுமார் மயங்கி விழுகிறார். அதன் பிறகு ரயில் கட்டுப்பாட்டை இழந்து செல்ல, ரயிலுக்கு என்ன ஆனது? ரயிலில் இருந்த பயணிகள் நிலை என்ன? தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார்கள்? என்பதே மீதி கதை!

    கதை திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்புதான் ஆரம்பம் ஆகுகிறது. முதல் பாதியில் காதல், காமெடி மட்டும் வைத்து  இழுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். 140 கிமீ மேல் வேகமாய் ஓடுகிற ரயிலின் அருகில் டிவி சேனலின் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் ஓடுகிறது. ஒருகட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்மால் கனிக்க முடிகிறது. க்ரீன் மேட்-டை வைத்து திரைப்படத்தை முடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். திரைக்கதையின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் பிரபு சாலமன்.

   டி.இமானின் இசை சுமார் ரகம் தான். வெற்றிவேலின் ஒளிப்பதிவு பலம். மொத்ததில் "தொடரி" - திருப்தி இல்லாத பயணம்!

18.9.16

பகிரி விமர்சனம்.லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிருப்பவர் இசக்கி கார்வண்ணன். நடிகர் கருணாஸ் இசையமைப்பில், நாயகனாக பிரபு ரணவீரன்,  நாயகியாக ஷ்ரவ்யா, ஏ.வெங்கடேஷ், ரவி மரியா, டி.பி. கஜேந்திரன், ராஜன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் "பகிரி".

பகிரி, பெயர் புதுசா இருக்கே, அப்படினா என்னவென்று சந்தேகம் இருக்கலாம்? அது வேறு எதுவுமில்லை, நாம் தினமும் யூஸ் பண்ணுற வாட்ஸாப்ப் தான். தமிழில் பகிரி என்று அர்த்தம். படத்திற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும். விவசாயம் அழிந்துவரும் இக்காலகட்டத்தில் விவசாயம் தான் நமது நாட்டிற்கு அவசியம் என்று உணர்ந்து திரைப்படமாக கதையை எழுத்திருக்கிறார் இயக்குனர்.

விவசாயம் தான் தனது உயிர் என்று வாழ்ந்துவரும் தந்தையின் மகனாக ஹீரோ பிரபு ரணவீரன். இவர் பிஎஸ்ஸி அக்ரி படிப்பை முடித்துவிட்டு, அரசாங்க வேலைதான் பார்க்கவேண்டும், அதுவும் டாஸ்மாக் வேலைதான் பார்க்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார். அந்த வேலைக்கு போஸ்டிங் போட 5 லட்சம் பணத்தை கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்பதால் தனது தந்தையின் விவசாய நிலத்தை விற்று பணத்தை தருமாறு தன் தந்தையிடம்  கேட்கிறார். உயிரே போனாலும் நிலத்தை விற்க மாட்டேன் என்று தந்தை சொல்ல. இதனால் பணம் வேண்டும் என்பதால் பாரில் வேலை செய்ய முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில் காதலில் விழுகிறார் ஹீரோ. அரசு வேலை கிடைக்க வருங்கால மருமகனுக்காக மகளுக்கு வைத்திருக்கும் நகையெல்லாம் கொடுத்து உதவி செய்கிறார் ஹீரோயினின் அம்மா. அதை வைத்து பணத்தைப்புரட்டி போட்டு கொடுத்து போஸ்டிங்கை உறுதி செய்துகொள்கிறார். அந்த நேரம் பார்த்து நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த, மது கடைகள்  மூடப்படுகிறது. இறுதியில் டாஸ்மாக் வேலை என்ன ஆனது? ஹீரோவின் அப்பா ஆசை என்ன ஆனது? ஹீரோ விவசாயம் செய்தாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை.

படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் மிரட்டல். இன்றைய அரசியல்  கட்சிகள்  என்ன செய்கிறார்கள்? அவர்களை பற்றி சொல்லும் ஒவ்வொரு காட்சிகளும் நக்கல், நையாண்டியுடன் தான் இருக்கிறது. 'டாஸ்மாக்' என்ற பெயரை அப்படியே சொன்னால், பிரச்சனை வரும் என்று அதை நாசுக்காக 'நாஸ்மாக்' என்று சொல்லவைத்தது புத்திசாலித்தனமாக இருத்தலும், காமெடி என்ற பெயரில் கொஞ்சம் வெறுப்பு வருவது போலத்தான் சில காட்சிகள் இருக்கிறது. அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளை பற்றியெல்லாம் யோசித்த இயக்குனர், திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

விவசாயத்தை பற்றி என்று ஆரம்பிக்கும் கதை, அதை பற்றி சொல்லுவதை விட்டுட்டு 'டாஸ்மாக்கை' பற்றி மட்டும் தான் சொல்லிருக்கிறார்கள்.

பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவ்யா நடிப்பு ஓகே!! இசை மற்றும் பின்னணி இசை மைனஸ் தான். மொத்தத்தில் "பகிரி" - சரக்கு இனோ இருந்துருக்கலாம்!

5.9.16

குற்றமே தண்டனை விமர்சனம்

 

ஒருதலை காதல், காதலை ஏற்கவில்லை, காதல் பிரச்சினை என இளம்பெண்களை கொலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தவறுகளை செய்தால் என்ன தண்டனை என்று உணர்த்தும்  திரைப்படம் தான் "குற்றமே தண்டனை".

இன் ஒன் வர்ட் - கர்மா (Karma) ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் அல்லது விளைவு கிட்டும் என்ற சொல்.

கண் பார்வை குறைபாட்டுடன் வாழ்ந்து வருபவர் விதார்த். க்ரெடிட் கார்ட் கடன்களை வசூலிக்கும் தனியார் நிறுவனத்தில் பூஜா தேவாரியாவுடன்  பணிபுரிபவர். அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்தில் எதிர்ப்புற வீட்டில் வசிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விதார்த்துக்கு கண்ணில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவரால் குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் பார்க்க முடியும். இதற்க்கு ‘டன்னல் வியூ(Tunnel View)’ என்று பெயர். இதை சரிசெய்ய வேண்டும் என்றல் மாற்று கண் சிகிச்சைதான் செய்யவேண்டும் என்கிறார் மருத்துவர். இதற்கு சிகிச்சை செய்ய அவருக்கு  பெரும் தொகை தேவைப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்யப்படுகிறார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரகுமான் தான் அந்தக் கொலையை செய்ததாக விதார்த்  எண்ணுவதால், ரகுமான் தன் அங்கு இருந்தார் என்று வெளியில் சொல்லாமல் இருக்க விதார்த்துக்கு பணம் தருவதாகச் சொல்கிறார். கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு  பணம் தேவை இருப்பதால் விதார்த்தும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.

அடுத்த நாள் போலீஸ் விசாரணை நடைபெற, ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டில் இருந்து வெளியே ஒரு நபர் வந்ததை பார்த்ததாக கூறுகிறார் விதார்த். அந்த நபர் யார்? ரகுமானுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் என்ன உறவு?? கொலை செய்தது யாரு?? விதார்த் கண் பார்வை என்ன அனைத்து?? என்பதே மீதி கதை!

அங்கங்கு ஒரு சில குறைகள் நன்றாக தெரிந்தாலும். நாசரின் கதாபாத்திரம், விதார்த்தின் உணர்வு, பூஜாவின் குடும்பப்பிரச்சனை என திரைக்கதையை விறுவிறுடன், மிகச்சிறப்யை அமைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஒரு சில நல்ல படங்களே வரும் இந்த காலகட்டத்தில், ரசிகர்கள் மனதில்
நிச்சயம் இத்திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்லில் "குற்றமே தண்டனை"  - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

4.9.16

கிடாரி விமர்சனம்


கம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், கதாநாயகனாக சசிகுமார், கதாநாயகியாக நிகிலா விமல் மற்றும் வேல ராமமூர்த்தி, நெப்போலியன், வசுமித்ரா, சுஜா, ஷோபா, தெனாலி என்ற ஒரு நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகிருக்கும் திரைப்படம் "கிடாரி".

டைட்டில் கார்டில் ஆரம்பிக்கும் சிவப்பு நிறம் எண்ட் கார்டு போடும்வரையில் தொடர்கிறது. அந்த அளவிற்க்கு வன்முறையும் பலிவாங்குதலுமாக போகிறது திரைக்கதை.

வழக்கமான தென்மாவட்டத்தின் மிகப்பெரிய தாதா தொனி. கொம்பையா பாண்டியனாக வருகிறார் எழுத்தாளர் வேலு ராமமூர்த்தி. விருதுநகர் - சாத்தூர் பகுதியில் ஆட்டுச்சந்தை, கட்ட பஞ்சாயத்து செய்து செம பார்மில் இருக்கிறார். அவரது வளர்ப்பு மகனாக கடாரியாக சசிகுமார் மிகவும் முரடனாக படத்தில் கொம்பையா பாண்டியனை எதிர்க்கும் அனைத்து எதிரிகளை தனி ஆளாக நின்று விளையாடுகிறார்.

கொம்பையாபாண்டியன் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவரை  கொலை செய்ய முயற்சி செய்தது யாராக இருக்கக்கூடும் என்று வாய்ஸ் ஓவரோடு கதை  தொடருகிறது. பல முக்கிய கதாப்பத்திரங்கள், பல "சம்பவங்கள்" அனைத்தும் கதைக்களத்தில் இடம்பெருகின்றன. கொம்பையாபாண்டியனை இந்த நிலமைக்கு ஆளாக்கியது யார் என்பதை அறிந்து அவனை பலிவாங்க நினைக்கும் கிடாரிக்கு பல உண்மைகள் தெரியவருகிறது. தன் அப்பாவாக நினைத்த கொம்பையாவே தன் சொந்த அப்பாவாகிய நெப்போலியனை நய வஞ்சமாக கொலை செய்திருக்கிறார் என்பதை அறிந்து தன்மனநிலையை எப்படி மாற்றுகிறார்??? பின்னர் கொம்பையாவை பலிவாங்குகிறாரா?இல்லையா? என்பதுதான் மீதி கதை.

படத்தின் காதாநாயகி  நிகிலா விமல், சசிகுமாருடன்  இரண்டாவது படம் என்பதால் மிகவும் கேஷுவலாக நடித்திருக்கிறார். ஆனால் காதல் காட்சிகள் படத்திற்க்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதும், நாடோடிகள் படத்தில் வரும் காட்சிகளை ஞாபகப்படுத்துவதும்  திரைக்கதைக்கு வேகத்தடையாகவே அமைத்துள்ளது.

இயக்குனர் திரைக்கதையை சுவாரஷ்யமாக அமைத்து  இருந்திருக்கிறார். ஆனால் ஃப்ளாஷ்பேக் என்ற பெயரில் வில்லன்களை அறிமுகப்படுத்திக் கொண்டுருப்பது ஒரு கட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. சசிகுமார் இதற்க்குமுன்பு நடித்த எல்லாப் படங்களின் காட்சிகளும் இப்படத்தில் ஏதோ ஒரு இடத்தில் எட்டிப்பார்க்கிறது. நிகிலா விமல் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு மட்டும் வந்து செல்கிறார். ஒளிப்பதிவு மற்றும் பின்னனி இசை படத்திற்கு பெரிய பலம். “கிடாரியே உன் போல” பாடலை தவிர மற்ற பாடல்கள் எல்லாம் சுமார்தான்.

 கிட்டத்தட்ட தென்மாவட்டங்களின் கதைக்களம் என்றாலே வன்முறையும், பலிவாங்குதலுமாக படங்களை அமைக்கும் பாணியை எப்பொழுதுதான் மாற்றப்போறார்களோ என்று தெரியவில்லை.

மொத்தத்தில் கிடாரி - ஏற்கனவே கேட்ட ஸ்டோரி தான்.