4.9.16

கிடாரி விமர்சனம்


கம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், கதாநாயகனாக சசிகுமார், கதாநாயகியாக நிகிலா விமல் மற்றும் வேல ராமமூர்த்தி, நெப்போலியன், வசுமித்ரா, சுஜா, ஷோபா, தெனாலி என்ற ஒரு நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகிருக்கும் திரைப்படம் "கிடாரி".

டைட்டில் கார்டில் ஆரம்பிக்கும் சிவப்பு நிறம் எண்ட் கார்டு போடும்வரையில் தொடர்கிறது. அந்த அளவிற்க்கு வன்முறையும் பலிவாங்குதலுமாக போகிறது திரைக்கதை.

வழக்கமான தென்மாவட்டத்தின் மிகப்பெரிய தாதா தொனி. கொம்பையா பாண்டியனாக வருகிறார் எழுத்தாளர் வேலு ராமமூர்த்தி. விருதுநகர் - சாத்தூர் பகுதியில் ஆட்டுச்சந்தை, கட்ட பஞ்சாயத்து செய்து செம பார்மில் இருக்கிறார். அவரது வளர்ப்பு மகனாக கடாரியாக சசிகுமார் மிகவும் முரடனாக படத்தில் கொம்பையா பாண்டியனை எதிர்க்கும் அனைத்து எதிரிகளை தனி ஆளாக நின்று விளையாடுகிறார்.

கொம்பையாபாண்டியன் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவரை  கொலை செய்ய முயற்சி செய்தது யாராக இருக்கக்கூடும் என்று வாய்ஸ் ஓவரோடு கதை  தொடருகிறது. பல முக்கிய கதாப்பத்திரங்கள், பல "சம்பவங்கள்" அனைத்தும் கதைக்களத்தில் இடம்பெருகின்றன. கொம்பையாபாண்டியனை இந்த நிலமைக்கு ஆளாக்கியது யார் என்பதை அறிந்து அவனை பலிவாங்க நினைக்கும் கிடாரிக்கு பல உண்மைகள் தெரியவருகிறது. தன் அப்பாவாக நினைத்த கொம்பையாவே தன் சொந்த அப்பாவாகிய நெப்போலியனை நய வஞ்சமாக கொலை செய்திருக்கிறார் என்பதை அறிந்து தன்மனநிலையை எப்படி மாற்றுகிறார்??? பின்னர் கொம்பையாவை பலிவாங்குகிறாரா?இல்லையா? என்பதுதான் மீதி கதை.

படத்தின் காதாநாயகி  நிகிலா விமல், சசிகுமாருடன்  இரண்டாவது படம் என்பதால் மிகவும் கேஷுவலாக நடித்திருக்கிறார். ஆனால் காதல் காட்சிகள் படத்திற்க்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதும், நாடோடிகள் படத்தில் வரும் காட்சிகளை ஞாபகப்படுத்துவதும்  திரைக்கதைக்கு வேகத்தடையாகவே அமைத்துள்ளது.

இயக்குனர் திரைக்கதையை சுவாரஷ்யமாக அமைத்து  இருந்திருக்கிறார். ஆனால் ஃப்ளாஷ்பேக் என்ற பெயரில் வில்லன்களை அறிமுகப்படுத்திக் கொண்டுருப்பது ஒரு கட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. சசிகுமார் இதற்க்குமுன்பு நடித்த எல்லாப் படங்களின் காட்சிகளும் இப்படத்தில் ஏதோ ஒரு இடத்தில் எட்டிப்பார்க்கிறது. நிகிலா விமல் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு மட்டும் வந்து செல்கிறார். ஒளிப்பதிவு மற்றும் பின்னனி இசை படத்திற்கு பெரிய பலம். “கிடாரியே உன் போல” பாடலை தவிர மற்ற பாடல்கள் எல்லாம் சுமார்தான்.

 கிட்டத்தட்ட தென்மாவட்டங்களின் கதைக்களம் என்றாலே வன்முறையும், பலிவாங்குதலுமாக படங்களை அமைக்கும் பாணியை எப்பொழுதுதான் மாற்றப்போறார்களோ என்று தெரியவில்லை.

மொத்தத்தில் கிடாரி - ஏற்கனவே கேட்ட ஸ்டோரி தான்.